அரசசார்பற்ற நிறுவனங்களை விட மிகமோசமான மோசடிகள் அரச சமூகநலத்திட்டங்களில் காணப்படுவதாக கூறப்படுகின்றது. இதுவொரு புதுவகைச் சுரண்டலாகவே காணமுடிகிறது. இலவசக்கல்வித்துறையிலும் கைவரிசை காட்டப்பட்டுள்ளது. இந்நாட்டின் கல்வியமைச்சர்களாகப் பதவி வகித்தவர்களில் மிகவும் முக்கியமானவராகக் கருதப்பட்ட சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கராவினால் இந்த நாட்டில் இலவசக்கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. மிகக்கூடுதலாக வாழும் வறியமக்களின் பிள்ளைகள் உயர் கல்வியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே இந்த இலவசக் கல்வித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பயனாக கிராமப்புறத்திலிருந்து உயர்கல்வி பெற்ற எண்ணற்றோர் கல்வி மான்களாக உருவாக வழியேற்பட்டது. அமரர் கன்னங்கராவினால் இலவசக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் பாடப்புத்தகங்களை பெற்றோர்களே தமது பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் நிலை காணப்பட்டது. எனினும் இடையில் விஜயானந்த தஹநாயக்காவின் காலத்தில் பிள்ளைகளுக்கு இலவச பணிஸ், பால் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தஹநாயக்கா "பணிஸ் மாமா' என்று கூட அன்றைய காலகட்டத்தில் செல்லமாக அழைக்கப்பட்டார். 1977 இல் ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி மூன்றிலிரண்டையும் விடக் கூடுதலான பெரும்பான்மையுடன் அதிகாரத்தைக்கைப்பற்றியதன் பின்னர். 1980 களில் நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இலவச பாடநூல், இலவச சீருடை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இத்திட்டங்கள் செவ்வனே முன்னெடுக்கப்பட்டதால் நாட்டு மக்களின் அமோக வரவேற்பைப்பெற்றன. ஆனால் அண்மைக்காலமாக இலவச பாடநூல், சீருடை வழங்குவதில் பல்வேறுபட்ட குறைபாடுகளும் ஊழல் மோசடிகளும் இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் வெளியான ஒரு தகவல் மூலம் இலவச பாடநூல் திட்டத்தில் 22 கோடிரூபா மோசடி இடம் பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது. அரச அதிகாரிகள் சிலரும் அச்சக உரிமையாளர்கள் சிலரும் சேர்ந்து இந்த மோசடியிலீடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது போன்ற மோசடிகள் பற்றி இதற்கு முன்னரும் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் அரசாங்கம் இது குறித்து எந்தவிதமான நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பள்ளிப்பிள்ளைகளுக்கு இலவசமாகப் பெற்றுக்கொடுக்கப்படும் பாடப்புத்தகங்கள், சீருடைக்காக அரசாங்கம் வருடமொன்றுக்குச் செலவிடும் தொகை 200 கோடி ரூபாவாகும். இத்தொகையின் அடிப்படையில் நீண்டகாலமாகவே வருடாந்தம் பாரிய ஊழல், மோசடி இடம்பெற்று வருகிறது. குறிப்பிட்ட ஒரு குழுவினரின் கைகளுக்கே இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதால் மோசடியும் ஊழலும் தங்கு தடையின்றி இடம்பெற வழியேற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இலவசசீருடை, பாடநூல், விநியோகம் குறித்து ஆராயும்போது அரசியல்வாதிகள் இதனை நாட்டுமக்கள் மீது ஆதரவு வைத்து செய்ய முன்வரவில்லை. பதிலாக அதனை வைத்து பாரியளவில் பகற்கொள்ளையடிக்கும் திட்டத்தையே மேற்கொண்டிருக்கின்றனர். கடைசியாக இடம்பெற்றிருக்கும் 22 கோடி ரூபா மோசடியுடன் கல்வியமைச்சின் ஐந்து உயரதிகாரிகளும் பிரபலமான அச்சக உரிமையாளரும் சம்பந்தப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய ஆய்வுப்பிரிவு சமர்ப்பித்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்த மோசடி குறித்து அரசு அடுத்து என்ன செய்யப்போகின்றது. வழமைபோன்று சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனக் கூறிக்கொண்டே காலம் கடத்திவிட்டு விவகாரத்தை கிடப்பில்போட்டுவிடுமா? அல்லது குற்றவாளிகளான பெருச்சாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா? மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் சுரண்டி, சூறையாடும் பேர்வழிகளிடமிருந்து நாடு மீள்வது எப்போது? பெருச்சாளிகள் தப்புவதற்கு வழிசெய்து விட்டு சின்னச் சுண்டெலிகளை தண்டிக்கும் போக்கை தொடரவிடுவதால் என்ன பயன்கிட்டப் போகின்றது?
அரசசார்பற்ற நிறுவனங்களும் சமூக நல அமைப்புகளும் தவறான வழியில் சென்று கொண்டிருப்பதாகவும் நிதி மோசடிகள் காணப்படுவதாகவும் அடிக்கடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவருவதை அவதானித்து வருகின்றோம்.
பொதுவாக இந்தக் குற்றச்சாட்டுகளை அரசாங்கமே திரும்பத்திரும்ப ஜெபித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அரசு குற்றம் சுமத்துவதோடு நின்று விடுகின்றதே தவிர தவறிழைக்கும் அமைப்புகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எதனையும் எடுப்பதில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.
இந்த நிலைமை இவ்வாறிருக்கும் போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூகநலத்திட்டங்களில் பாரிய மோசடிகளும் ஊழலும் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Saturday, 19 July 2008
இலவச சீருடை, பாடநூல்கள் விநியோகத்தில் மோசடி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment