Saturday, 26 July 2008

இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படை நுழையவில்லை- இந்தியக் கடற்படை

இலங்கை கடற்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் சென்று மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தமிழக கடற்படைத் தளபதி கொமாண்டர் பி.ஈ.வான் ஹல்ட்ரென் மறுத்துள்ளார்.

“இலங்கைக் கடற்படையினர் ஒருபோதும் கடல் எல்லையைத் தாண்டவில்லை. இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை அண்மித்துச் செல்லும்போதே அவர்கள் மீது தாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக இரவு வேளைகளில் மீனவர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுகொள்வது அவர்களுக்குச் சிரமாக இருக்கும். எனவே, எமது மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டாமல் இருப்பது சிறந்தது” என அவர் கூறியுள்ளார்.

படகுகள் கடல் எல்லையைத் தாண்டாமல் இருப்பதற்கு இருக்கும் இடத்;தைக் கண்டறியும் கருவியைப் பொருத்திக்கொள்ள முடியும் என இந்தியக் கடற்படை அதிகாரி கூறினார்.

இலங்கைக் கடற்படையினர் இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவி, இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சில அரசியல் கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டை இந்தியக் கடற்படையும், இந்திய மத்திய அரசாங்கமும் மறுத்துள்ளன.

“எமது கடல் பகுதிக்குள் குறைந்தளவு மீன்களே கிடைக்கின்றன. இந்த ஒரு காரணத்துக்காகவே மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டவேண்டி ஏற்படுகிறது” என ஹல்ட்ரென் கூறியுள்ளார்.

18ஆயிரத்துக்கும் அதிகமான பலவிதமான மீன்பிடிப் படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு படகையும் கரையோரக் காவல் படையினரால் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது எனவும், படகுகள் அல்லது கப்பல்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதே தமது கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1 comment:

ttpian said...

i would like to know the "originality of this officer!
whether he is working for indian navy or for srilankan navy?