Thursday, 24 July 2008

கறுப்பு யூலை நினைவு நிகழ்வில் - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கலந்துகொள்வார்

கறுப்பு ஜுலை இன அழிப்பு நடவடிக்கை தொடர்பாக அமெரிக்காவில் இன்று நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு நடவடிக்கையில், அமெரிக்க கொங்கிரஸ் சபை அங்கத்தவர் டன்னி டேவிஸ் (Danny Davis) கலந்துகொள்ள இருக்கின்றார்.



மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவரும் சிறீலங்கா, மற்றும் பர்மா அரசாங்கங்களுக்கான சீன அரசின் நிதி, மற்றும் படைத்துறை உதவி என்பவற்றைக் கண்டித்தும், கறுப்பு ஜுலை படுகொலையின் 25ஆம் ஆண்டை நினைவுகூர்ந்தும், நாளை பேரணி, மற்றும் கவன ஈர்ப்பு நடவடிக்கை என்பன இடம்பெறவுள்ளன.

இலங்கையின் சமத்துவம், மற்றும் புனர்வாழ்வுக்கான மக்கள் அமைப்பும் (People for Equality and Relief in Lanka (PEARL)), பர்மாவிற்கான அமெரிக்க பரப்புரை (U.S. Campaign for Burma (USCB)) இணைந்து இந்த நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளன.



இன்று நண்பகல் 12:00 மணிக்கு ரசல் செனட் பார்க் (Russell Senate Park) மைதானத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில், பிற்பகல் 1:30 அளவில் சிறப்புரைகள் இடம்பெற இருப்பதுடன், 3:30 அளவில் கறுப்பு ஜுலை நினைவு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

பிரான்சை தளமாகக்கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் (Reporters Without Borders) வொசிங்ரன் அலுவலக இயக்குனர் லூசி மொறிலோன் (Lucie Morillon), STAND என்ற அமைப்பின் இயக்குனர் நிக் கெள (Nick Gaw), இனப்படுகொலை, மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக் குழுவின் இயக்குனர் சாட் ஹஸ்லெட் (Chad Hazlett), தமிழ், மற்றும் பர்மிய சமூகத்தின் தலைவர்கள் இந்த பேரணியில் உரையாற்றவுள்ளனர்.

1983ஆம் ஆண்டு ஜுலை இன அழிப்பு நடவடிக்கையில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பலரும் இதில் கலந்துகொண்டு தமது அனுவங்களை ஏனைய மக்களுடன் பகிர்ந்துகொள்ள இருப்பதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

No comments: