Wednesday, 16 July 2008

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இல்லை - சம்பந்தன்

 இலங்கை தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வினைகாணும் விதத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமையவில்லை.


அரசின் தற்போதைய நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இல்லை என்று இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் மல்லோ பிரவுணிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானிய ராஜாங்க அமைச்சரை கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் நேற்று மாலை சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் சம்பந்தன் எம்.பி. பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது சம்பந்தன் எம்.பி.மேலும் எடுத்துக் கூறியதாவது:

பல்லின, பல்கலாசார, பல்சமய மக்கள் வாழுகின்ற நாடு என்பதை ஏற்றுக்கொண்டு அரசியல் தீர்வு யோசனை ஒன்றை முன்வைக்கும் எண்ணத்துடன் இலங்கை அரசாங்கம் செயற்படவில்லை.

பெரும்பான்மை இனத்தின் நாடு இலங்கை என்ற நிலைப்பாட்டில்தான் அரசாங்கம் செயற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனால் அரசியல் தீர்வு ஒன்றைக் காணக்கூடிய வாய்ப்பு அரிதாகவே தென்படுகின்றது.

இராணுவ நடவடிக்கையிலேயே அரசாங்கம் இன்று முழுமையாக ஈடுபட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த வேண்டும் என்ற முழுமுயற்சியில்தான் அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. இதனை எவரும் மறுக்க முடியாது.

சர்வகட்சி மாநாடு மூலம் ஒன்றுமே அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அர்த்தமுள்ள அரசியல் தீர்வு ஒன்றை அடையும் முயற்சியில் சர்வகட்சி மாநாடு தோல்வி கண்டுள்ளது.

மனித உரிமைமீறல் தொடர்கதையாக மாறியுள்ளது. இவ்வாண்டு ஜனவரியிலிருந்து இத்திகதி வரை 90க்கும் அதிகமானோர் காணாமற் போயுள்ளனர் என்று முறைப்பாடுகள் வெளியாகியுள்ளன.

அரசின் போர் நடவடிக்கை தீவிரமடைந்து வருவதால் வன்னிப் பிராந்தியத்திலிருந்து ஆயிரக்கணக்கில் தமிழ்க் குடிமக்கள் இடம்பெயர்ந்து நிர்க்கதி நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

அவர்கள் தமிழ் மக்கள் என்ற காரணத்தினால் அரசாங்கம் ஒருவிதமான நடவடிக்கையும் எடுக்காது இருக்கிறது.

No comments: