Sunday, 6 July 2008

மடு தேவாலயத்துக்கு குருமார்கள் செல்வதற்கு இன்னும் அனுமதி இல்லை- மன்னார் ஆயர்

மன்னார் மடுமாதா ஆலய வளாகத்தினுள் குருமார்கள் செல்வதற்கு பாதுகாப்புப் படையினர் அனுமதி வழங்கவில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அடிகளார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இருப்பினும், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள இராணுவத்தினர், குருமார்கள் எந்தநேரத்திலும் அங்கு சென்றுவர முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.

மடுத்திருத்தலத்தினுள் குருமார்கள் செல்வதற்கான அனுமதியை பாதுகாப்புத் தரப்பினர் வழங்கினால் மாத்திரமே மடுமாதா திருச்சொரூபத்தை மீண்டும் அங்கு கொண்டுவர முடியும் எனத் தெரிவித்துள்ள இராயப்பு ஜோசப் அடிகளார், மடுமாதா ஆலய வளாகத்தின் பாதுகாப்பு சகல வழிகளிலும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அங்கு வழிபாடுகளை நடாத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மடுமாதா ஆலயத்தின் பிரதான வருடாந்த உற்சவம் எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், மடுமாதா திருச்சொரூபம் அதற்கு முன்னர் அங்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மடுமாதா வளாகத்தின் புனிதத் தன்மையைப் பேணுமாறு விடுதலைப் புலிகளிடமும், அரசாங்கத்திடமும் வேண்டுகோள் விடுத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அடிகளார், இருசாராரும் இந்த வேண்டுகோளை மதித்து நடப்பார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.

இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, மன்னார் மறைமாவட்ட ஆயர் எந்தவொரு நேரத்திலும் மடுமாதா ஆலயத்திற்கு சென்றுவர முடியும் எனவும், ஏற்கனவே மன்னார் மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை அடிகளார் தலைமையிலான ஒரு குழுவினர் அண்மையில் அங்கு சென்று வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், மடுப் பிரதேசத்தில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாலும், பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டும் சாதாரண மக்களை அங்கு செல்ல அனுமதிக்க முடியாதிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சில வேளை அங்கு செல்ல அனுமதிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், வருடாந்த ஆடித்திருவிழா இம்முறை மடுமாதா ஆலயத்தில் நடைபெறவில்லை எனவும், இதன்பொருட்டு மன்னார் மாவட்டத்திலுள்ள சகல தேவாலயங்களிலும் மடுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையிலான மோதல்கள் மடுப்பகுதியில் தீவிரமடைந்ததையடுத்து, மடுமாதா திருச்சொரூபம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள தேவன்பிட்டி தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மடுப் பகுதி இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் அங்கு புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு 6 வாரங்களில் மடு தேவாலயம் நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்படுமென இராணுவத்தினர் உறுதிமொழி வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: