Friday, 11 July 2008

இந்தியப் படையினர் சார்க் மாநாட்டிற்குப் பாதுகாப்பு: அப்பட்டமான பொய் என்கிறார் அமைச்சர் நிமால்

கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள இலங்கைவரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாதுகாப்பு வழங்க இந்தியப் படையினர் இலங்கை வருவதாக வெளியான செய்திகள் அப்பட்டமான பொய் என சபை முதல்வர், அமைச்சர் நிமால் சிறிபால.டி.சில்வா தெரிவித்துள்ளார்.

சார்க் மாநாட்டில் பங்குபற்றும் மன்மோகன் சிங்கிற்குப் பாதுகாப்பு வழங்க 1,500 இந்தியப் படையினர் இலங்கை வரவிருப்பதாக இந்தியாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஆய்வு அமைப்பொன்று தகவல் வெளியிட்டிருந்ததாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்ணாயக்க நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமால் சிறிபால.டி.சில்வா, இந்தத் தகவலில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனக் கூறியதுடன், இலங்கையின் பாதுகாப்புக்காக இந்தியப் படையினரை கண்காணிப்பில் ஈடுபடுத்தும் நோக்கம் இலங்கை அரசாங்கத்துக்கு இல்லையெனவும் கூறினார்.

“ஒரு நாட்டின் தலைவர் வெளிநாட்டுக்குச் செல்லும்போது, தமது நாட்டைச் சேர்ந்த குறிப்பிட்டளவு பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்துச்செல்லமுடியும். அதற்கு மேலதிகமாக எந்தவொரு பாதுகாப்புப் படையினரும் இலங்கைக்கு அழைத்துவரப்படமாட்டார்கள்” என்றார் அமைச்சர்.

சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு 1,500 இந்தியப் படையினர் இலங்கை வரவிருப்பதுடன், சார்க் உச்சிமாநாடு நடைபெறும் பகுதிக்குமேல் இந்திய விமானப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடவிருப்பதுடன், காலிமுகத்திடல் கடற்பகுதியில் இந்தியப் போர்க் கப்பல் பாதுகாப்பில் ஈடுபடவிருப்பதாகவும் முன்னர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், இவ்வாறு பெருமளவான இந்தியப் படையினர் இலங்கைக்கு வரவழைக்கப்படமாட்டார்கள் என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹண முன்னர் கூறியிருந்தார்.

இதேவேளை, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறி விஜய் சிங் ஆகியோர் சார்க் உச்சிமாநாட்டுக்கான பாதுகாப்புக் குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினருடன் விரிவாகக் கலந்துரையாடியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: