Friday, 11 July 2008

தற்கொலை செய்த கல்முனை காவல்துறை பொறுப்பதிகாரியின் மர்ம டயரி!!!

கிழக்கின் தற்போதைய நிலை உட்பட பல முக்கிய விடயங்களை தனது நாட்குறிப்பில் எழுதிவைத்துவிட்டே கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இயற்கை மற்றும் சுற்றாடல் வளங்கள் அமைச்சு மீதான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

அண்மையில் பதவி இறக்கம் செய்யப்பட்டு இடமாற்றப்பட்ட கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்கொலை செய்துள்ளார்.

இவர் தான் ஜனாதிபதியின் ஹெலி மீது விடுதலைப்புலிகள் சுட்டதாக தெரிவித்தவர். இவ்வாறான நிலையிலேயே அவர் பதவி இறக்கம் செய்யப்பட்டு இடமாற்றப்பட்டார்.

இந்தப் பொலிஸ் அதிகாரி தற்கொலைசெய்து கொள்வதற்கு முன் நாட்குறிப்பு எழுதியுள்ளார். அதில் கிழக்கு மாகாணம் விடுதலைப்புலிகளிடமிருந்து இன்னும் விடுவிக்கப்படவில்லை என எழுதியுள்ளார்.

அத்துடன், பிள்ளையானின் செயற்பாடுகள், கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை, அதிரடிப்படை பொறுப்பதிகாரி மகிந்த பாலசூரிய தலைமையிலான அதிரடிப்படையின் செயற்பாடுகள்,

ஜனாதிபதியின் ஹெலி மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட பல முக்கிய விடயங்களை அந்த நாட்குறிப்பில் எழுதியுள்ளார். இதன் பின்னரே இந்த பொலிஸ் பொறுப்பதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.

இவரின் மரணத்தையடுத்து இவர் எழுதிய நாட்குறிப்பை கொழும்புக்கு உடனடியாக அனுப்புமாறு பொலிஸ் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், அந்த நாட்குறிப்பில் முக்கிய விடயங்கள் அடங்கியுள்ளதால் அதனை கொழும்புக்கு அனுப்ப வேண்டாமென மரண விசாரணை மேற்கொண்ட நீதிவான் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்குறிப்பிலுள்ள விடயங்களை ஆராய்ந்தால் கிழக்கின் உண்மை நிலை தெரியவரும்.

No comments: