Friday, 11 July 2008

ஜுலை 10 வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை வேலையிலிருந்து நீக்க அரசாங்கம் தீர்மானம்?--அதிர்சியில் இலங்கை மக்கள்

கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட அரசாங்கப் பணியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் நேற்றுத் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அமையத் தொழிலாளர்கள் எதிர்வரும் திங்கட்கிழமையுடன் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

10ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட அமையத் தொழிலாளர்களிடம் மூன்று நாட்களுக்குள் விளக்கக் கடிதத்தைக் கோருமாறும்

அல்லது அவர்களை திங்கட்கிழமை முதல் வேலையிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கம், அரசாங்கத் திணைக்களங்களின் தலைவர்களுக்குப் பணிப்புரை வழங்கியிருப்பதாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேநேரம், தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட நிரந்தர அரசாங்கப் பணியாளர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

“எந்தவிதமான விளக்கமும் கோராமல், அமையத் தொழிலாளர்களை எந்த நேரரும் வேலையைவிட்டு நீக்கும் அதிகாரம் திணைக்களத் தலைவர்களுக்கு உண்டு.

எனினும், அமையத் தொழிலாளர்களின் நிலைமையக் கருத்தில்கொண்டு 10ஆம் திகதி இடம்பெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டமைக்கு விளக்கம் கோருவதற்கு மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

10ஆம் திகதி வேலைக்குச் சமூகமளிக்காமைக்கான சிறந்த காரணத்தை அவர்கள் இந்தக் காலப்பகுதியில் வழங்கவேண்டும்” என அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் ஊடகமொன்றிடம் தெரிவித்திருந்தார்.

அரசாங்க மற்றும் பகுதியளவு அரசாங்கத் திணைக்களங்களில் 3 இலட்சம் அமையத் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை வழங்குவதை கண்டிக்கிறது எதிர்க்கட்சி

சம்பள உயர்வுகோரி ஜுலை 10ஆம் திகதி இடம்பெற்ற வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தைக் கண்டிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

“அரசாங்கப் பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான அடிப்படை உரிமையை மீறுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முயற்சிக்கிறது.

இதனைச் செயற்படுத்த நாங்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம். இதற்கு எதிராக அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்டிப் போராடுவோம்” என்றார் அவர்.

இதேவேளை, ஜுலை 10ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கடந்த மே மாதம் 16ஆம் திகதியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவித்துவிட்டதாக ஜே.வி.பி.யின் தொழிற்சங்கத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்தம் குறித்து திணைக்களத் தலைவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிவித்துவிட்டதாகவும், ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திணைக்களத் தலைவர்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

“எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயார். உழைக்கும் வர்க்கத்தை அரசாங்கம் இவ்வாறு தொடர்ந்தும் அடக்க முற்பட்டால் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரையும் ஒன்றுதிரட்டி அரசாங்கத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்போம்” என கே.டி.கலால்காந்த எச்சரித்துள்ளார்.

No comments: