Thursday, 3 July 2008

எதிர்க்கட்சிக்கு எதிராக அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது - திஸ்ஸ அத்தநாயக்க

சிறிய தேர்தல்களை நடத்தி மக்களுக்கு சுமைகளை ஏற்படுத்தாது, முடிந்தால் இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்திற்கான தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார். தேவையற்ற தருணத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாத்தை பயன்படுத்தி இந்த தேர்தலில் வெற்றி பெற்று, இந்த இரண்டு மாகாணங்களில் அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவு இருக்கின்றது என்பதை வெளிகாட்டுவதே அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலாக உள்ளது. இந்த தேர்தலுக்கு 40 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது.

இந்த சுமையும் மக்கள் மீதே சுமத்தப்படும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை முடிவடையும் முன்னமே அரசாங்கம் எதிhக்கட்சிக்கு எதிராக அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

நேற்றிரவு பொலன்னறுவையில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரான சனத் குமார குணவர்தனவின் சகோதரியின் வீட்டிற்குள் காவல்துறையினர் என கூறி பிரவேசித்த சிலர், அவரை அச்சுறுத்தியதுடன் சத்தியகடிதம் ஒன்றில் கைச்சாத்திடுமாறு பலவந்தம் செய்துள்ளனர்.

இந்த சத்திய கடிதம் என்ன என்பது குறித்து கூறப்படவில்லை எனவும், இந்த சம்பவம் குறித்து பொலன்னறுவை காவல்துறையினர் மற்றும் வடமத்திய மாகாண பிரதிகாவல்துறை மா அதிபர் ஆகியோரிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

ஆயுதங்களை காண்பித்து வேட்பாளர்களை அச்சுறுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள இந்த நடவடிக்கை மூலம், அரசாங்கம் பயங்காரவாதத்தை பயன்படுத்தி தேர்தலில் வெற்றியடை முயற்சிக்கின்றது என்பது தெளிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த முயற்சிகளை தடுத்து நிறுத்தி, மக்களின் வாக்களிக்கும் உரிமையை பாதுகாப்பது அனைவரினதும் கடமை எனவும் இதனால் அரசாங்கத்தின் வாக்கு கொள்ளைக்கு எதிராக வேற்றுமைகளை மறந்து தேர்தல் முடியும் வரை ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என திஸ்ஸ அத்தநாயக்க அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments: