மட்டக்களப்பு ஆயித்தியமலைப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலையடுத்து அப் பகுதியில் பெருமளவு பொது மக்கள் படையினரின் கடும் தாக்குதலுக்கிலக்கானது தொடர்பான தகவல்கள் தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த 23 ஆம் திகதி மாலை ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திலிருந்து அருகிலுள்ள ஆற்றுக்குக் குளிக்கச் சென்ற பொலிஸார் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 3 பொலிஸார் கொல்லப்பட்டதுடன் ஒருவர் படுகாயமடைந்தார். இத் தாக்குதலையடுத்து ஆயித்தியமலை வடக்கு, தெற்கு, நரிபுல்சோலை, மகிழவெட்டுவான், உன்னிச்சைப் பகுதிகள் இராணுவத்தினாலும், பொலிஸாரினாலும் சுற்றி வளைக்கப்பட்டு ஆண், பெண், சிறார்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் தாக்கப்பட்டுள்ளனர். கடுமையாகத் தாக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்குச் செல்லவிடாது இராணுவத்தினர் தடுத்து நிறுத்திவிட்டனர். அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிடுவதற்காகச் சென்ற ஐ.சி.ஆர்.சி.யினரையும் அங்கு செல்லவிடாது திருப்பி அனுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலுக்குள்ளான 14 வயது சிறுவனொருவன் கைமுறிந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். நாலரைக்கட்டை உன்னிச்சைப் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குள்ளான பலருக்கு உள்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பொது மக்கள் மீது படையினர் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அப்பகுதியில் வேளாண்மை செய்வதற்கு எவரும் செல்லாது இப்பகுதிக்கு செல்ல அச்சமடைந்துள்ளதாகவும் இதனால், தமது வேளாண்மை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
Thursday, 3 July 2008
ஆயித்தியமலையில் கிளைமோர் தாக்குதலை தொடர்ந்து பொது மக்கள் மீது தாக்குதல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment