யுத்தத்தின் பெயரால் ஊழல் , மோசடி , அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றின் மூலம் அதிகாரத்திலிருப்பவர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் குறுக்கு வழிகளால் பெரும் செல்வந்தர்களாகியுள்ளதாக புதிய ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. மறுபுறத்தே தெற்கில் வாழும் சாதாரண தொழிலாளர் விவசாயிகளின் பிள்ளைகளும் வடக்கு, கிழக்கிலுள்ள சாதாரண குடிமக்களது பிள்ளைகளும் யுத்தப் பீரங்கிக்கு தீனியாகி மாண்டு வருவதாகவும் அக்கட்சி கூறியுள்ளது. புதிய ஜனநாயகக் கட்சியின் 30 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக அதன் மத்திய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அந்நிய பல்தேசியக் கம்பனிகள் நாட்டின் வளங்களை கொள்ளையிட்டுச் செல்வதுடன் தொழிலாளர்களின் உழைப்பையும் சுரண்டிச் சென்ற வண்ணம் உள்ளன. நாட்டின் விவசாயம் சீரழிக்கப்பட்டு இறக்குமதி நுகர்வுச் சந்தை விரிவாக்கப்பட்டது. அதனால், விவசாயிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட எமது நாட்டில் அவர்கள் ஓட்டாண்டிகளாக்கப்பட்டுள்ளனர். அரிசி முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக வெளிநாட்டுக் கப்பல்களை எதிர்பார்த்து நிற்பதுடன் மக்கள் அவற்றுக்கு அதிகவிலை கொடுத்து வாங்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான உண்மைகள் மறைக்கப்பட்டு எண்ணெய் உணவுப் பொருட்களின் உலகச் சந்தை விலை உயர்வாலேயே நமது நாட்டில் வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளதாக ஆட்சியினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அத்துடன் யுத்தத்திற்கு நாளாந்தம் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவிடப்படுவதாலும் பணவீக்கமும் பொருட்களின் விலைகள் அதிகரிப்பும் இடம்பெறுவது மறைக்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ப சம்பள உயர்வை வழங்க முடியாத நிலையில் அரசாங்க தனியார் துறையினரின் எதிர்ப்பைச் சமாளிக்கும் விதத்தில் அற்ப சம்பள உயர்வை அளித்துள்ளது அரசாங்கம். இது யானைப் பசிக்குச் சோளப் பொரி போன்றதாகும். யுத்தம் கோரத்தனத்துடன் நீடித்துச் செல்வதால் அழிவுகளும் இடப்பெயர்வுகளும் தொடர்வதுடன் மோசமான மனித உரிமை மீறல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், ஆட்கடத்தல்கள் , காணாமல் போதல்கள் கட்டுப்படுத்த முடியாதவாறு தொடர்கின்றன. ஜனநாயக தொழிற்சங்க உரிமை மறுப்புகள் புதிய புதிய வடிவங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வருகிறார்கள். அரசியல் கைதிகள் நீண்ட காலமாக விசாரணை இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, தாராள தனியார் பொருளாதாரத் தளங்களில் அமெரிக்க மேற்குலக ஜப்பானிய பல்தேசியக் கம்பனிகள் புகுந்து நிற்கின்றன. அவ்வாறே இந்தியக் கம்பனிகளும் சேர்ந்துள்ளன. அமெரிக்க இந்திய ஆதிக்க சக்திகள் அன்று முதல் இன்று வரை யுத்தத்தை முன்னெடுப்பதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் சகல வகைப் பங்களிப்புகளையும் வழங்கி வந்துள்ளன. அதேவேளை, அவர்களது இலங்கை மீதான ஆதிக்கப் போட்டி தொடர்ந்த வண்ணமே உள்ளது. இவ் இரு சக்திகளும் ஒரு நேரடித் தலையீட்டிற்குத் தயாராகி வரும் போக்கே காணப்படுகிறது. எனவே, பயங்கரவாதம் எனப் பெயர் மாற்றி அழைக்கப்படும் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வைக் காண யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும். அதேவேளை, மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைத் தடுத்து நிறுத்தி வாழ்க்கைச் செலவின் சுமையைக் குறைக்க தேசிய பொருளாதாரக் கொள்கை முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைக் கொண்டுள்ள அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படுவது அவசியமானதாகும். இவற்றுக்கான உறுதிமிக்க மக்கள் இயக்கம் பாராளுமன்ற ஆசனங்கள், பதவிகள் என்ற நோக்கங்களுக்கு அப்பால் கட்டி வளர்க்கப்படுவதையே புதிய ஜனநாயக கட்சி வற்புறுத்தி நிற்கின்றது.
* புதிய ஜனநாயகக்கட்சி அறிக்கை
Thursday, 3 July 2008
யுத்தத்தின் பெயரால் அதிகாரத்திலிருப்பவர்கள் குறுக்கு வழிகள் மூலம் பெரும் செல்வந்தர்களாகியுள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment