Thursday, 3 July 2008

“இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தும்படி சர்வதேசத்தை நிர்ப்பந்தியுங்கள்” - தென்னாபிரிக்க மகாநாட்டில் மா.வை. சேனாதிராஜா


இலங்கை அரசாங்கம் அங்கு வாழும் தமிழர்களைக் கடந்த வருடங்களாக அடக்கி ஒடுக்கப்பார்க்கிறது. தமிழ் மக்களை பல்வேறு வகைகளில் தடைகளை அமுல்படுத்தி அவர்களை வருத்துகிறது.

பொருளாதாரத் தடைகளின் மூலம் நமது மக்களை பட்டினியால் சாகடிக்கப் பார்க்கிறது. மனித உரிமை மீறல்கள் எங்கள் மக்களை வதைக்கின்றன. 40,000 படையினரைத் தமிழர் தாயகப் பகுதிகளில் குவித்து அங்கு நாளாந்தம் மனித படுகொலைகளை நடத்திவருகிறது.


எனவே இன்று 40வது ஆண்டைப் பூர்த்தி செய்கின்ற தென்னாபிரிக்க தமிழர் கூட்டிணைப்புக் கழகம் தென்னாபிரிக்கா அரசிடம் எமது ஈழத்தமிழ் மக்கள் சார்பாக ஒரு வேண்டுகோளை முன் வைக்கவேண்டும். இலங்கை அரசின் இனப்படுகொலைகள் நிறுத்தப்படாவிட்டால் அந்நாட்ன் மீது பொருளாதாரத்தடையைக் கொண்டுவரும்படி நிர்ப்பந்திக்கவேண்டும்.


இவ்வாறு தென்னாபிரிக்காவின் ஜோஹானஸ்பேர்க் நகரில் உள்ள பெனோனி நகர சபை மண்டபத்தில் புதன்கிழமை 2ம் திகதி மாலை ஆரம்பமான தென்னாபிரிக தமிழர் கூட்டினைப்பின் 40வது ஆண்டு நிறைவு வைபவத்தின் முதலாம் நாள் நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய இலங்கை தமிழர் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. மா.வை. சேனாதிராஜா மிகுந்த உணர்ச்சியுடன் வேண்டுகோள் விடுத்தார்.


இந்த 40வது ஆண்டு நிறைவு வைபவத்தின் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அனைத்துலக நிர்வாக உயர்மட்டக் குழுவும் இணைந்து பணியாற்றுவதும் இங்கு குறிப்பிடதக்கது.


தென்னாபிரிக்கா தமிழர் கூட்டிணைப்புக் கழகத்தின் தலைவரும் தென்னாபிரிக்க மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றவருமான திரு. மிக்கி செட்டி தலைமை தாங்கினார்.


மேற்படி வைபவத்தில் திரு. மா.வை. சேனாதிராஜா தொடர்ந்து உரையாற்றுகையில் இலங்கை அரசாங்கம் தமிழர்களின் உரிமைகளை மட்டும் பறித்துவிடவில்லை.


எம் மக்களின் உடமைகளை அழித்துவருகிறது. ஏராளமான பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளார்கள். தமிழ் மாணவர்களின் கல்வி சிதைக்கப்பட்டு அவர்களின் கல்விச் செல்வம் பறிக்கப்படுகின்றது.

இதற்கு மேலாக ஏராளமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் மணிக்கொன்றாக இடம்பெறுகின்றன. கொழும்பில் பல தமிழ் பேசும் வர்த்தகர்கள் பெரும் அளவில் கடத்தப்படுகின்றார்கள். அவ்வாறு கடத்தப்படுகிறவர்களிடம் இருந்து பெரும் அளவு பணம் பறிக்கப்படுகின்றது.


பல வர்த்தகர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இவ்வாறான சம்பவங்களுக்கு பின்னால் அரசாங்கத்தின் தலைவர்களும் படைத்துறை சார்ந்த முக்கியஸ்தரும் தமிழர் விரோதக் குழுக்களும் உள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே சர்வதேச சமூகம் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பான தடை ஒன்றை எடுத்துச்சென்று விவாதிக்க தென்னாபிரிக்க அரசு முன்வரவேண்டும். இதற்கான ஏற்பாடுகளையும் அழுத்தங்களையும் தென்னாபிரிக்கத் தமிழ் கூட்டிணைப்புக் கழகம் மேற்கொள்ளவேண்டும்.


தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தென்னாபிரிக்க தமிழ் கூட்டிணைப்புக் கழகம் தென்னாபிரிக்க அரசின் மூலம் இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்தவும், தமிழ் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் சர்வதேச மட்டத்திலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் அவசியமான நடவடிக்களை எடுக்கவேண்டும்.


தென்னாப்பிரிக்காவில் பல வருடங்களாக இன அடக்குமுறைகளுக்கெதிராகப் போராடிய நெல்சன் மண்டெலா மற்றும், அதிமேற்றிரானியர் டஸ்மென் டிரூ ஆகியோர் தலமையில் போராட்டங்கள் இடம்பெற்றதை இச் சந்தர்பத்தில் நினைவு கூறவிரும்புகின்றேன்.


அவர்களுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகின்றோம். அது போன்றே இலங்கையில் தந்தை செல்வநாயகம் அவர்களும் 25 அண்டுகளுக்கு மேலாக சிங்களப் பேரினவாத அரசுகளின் தமிழின அழிப்பு நடவடிக்கைளுக்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டங்களை நடத்திவந்தவர்.



தந்தை செல்வநாயகம் அவர்களின் தலமையில் 1976ம் ஆண்டு வட்டுகோட்டை மகாநாட்டில் திரு. ஜி ஜி பொனனம்பலம், மற்றும் திரு தொண்டமான் ஆகியோர் உட்பட இந்த மகாநாட்டில் சுதந்திர தமிழீழ அரசை நிறுவவேண்டும் என்று தீர்மானம் எடுத்தார்.


இங்கே நாங்கள் முக்கியமாக கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால் உங்கள் இனத்தின் விடுதலைக்காகப் போராடிய நெல்சன் மென்டலா அவர்களை இன்றுவரையும் ஒரு பயங்கரவாதத் தலைவர் என்று வர்ணித்து வருகின்ற அமெரிக்கா போன்ற நாடுகள் எங்கள் தமிழீழ வடுதலை போராட்டத்தையும் ஒரு பயங்கர போராட்டம் என்று விமர்சித்து வருவதையும் அதை அடைக்கி ஒடுக்க முயற்சிப்பதையும் உங்கள் மத்தியில் மிகுந்த வேதனையோடு பகிர்ந்துகொள்கின்றேன்.


எனவே தான் எங்கள் மக்களின் போராட்டத்தை ஒரு விடுதலை போராட்டம் என்று தென்னாபிரிக்க அரசு அங்கீகரிக்வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.’ என்றார்.

மேற்படி வைபவத்தில் தலைமையாற்றிய திரு. மிக்கி செட்டி தனது உரையில் தென்னாபிரிக்கத் தமிழர்கள் தங்களை மேம்படுத்துவதற்காக மேற்கொண்ட போராட்டங்களைப் பற்றி எடுத்துக் கூறி இலங்கையில் இடம்பெறும் தமிழர்களுக்கு எதிரான அடுக்குமுறைகளிலிருந்து அவர்களை விடுவிக்க நமது கழகம் தேவையான ஏற்பாடுகளை செய்யும் என்றும் எமத ஆதரவு ஈழத்தமிழ் மக்களுக்கே அன்றி இலங்கை அரசுக்கு அல்ல என்று கூறியபோது சபையில் இருந்தவர்கள் பலத்த கரகோ~ம் செய்து தமது ஆதரவை தெரிவித்தனர்.
தென்னாபிரிக்க தமிழர் கூட்டினைப்பு கழகத்தின் 40வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களில் பங்குகொள்ள உலகின் பல நாடுகளிலிருந்தும் உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அனைத்துலக உயர்மட்ட நிர்வாக குழு அங்கத்தவர்கள் பலர் தென்னாபிரிக்கா சென்றுள்ளார்கள்.


இயக்கத்தின் செயலாளர் நாயகம் திரு. துரை கணேசலிங்கம் ஜேர்மனியிலிருந்தும், முதன்மை துணைத் தலைவர் வேல் வேலுப்பிள்ளை கனடாவிலிருந்தும், அனைத்துலக கல்வி பொறுப்பாளர் பேராசிரியர் திரு. இ. பாலசுந்தரம் கனடாவிலிருந்தும், அனைத்துலக கலை பண்பாட்டு பொறுப்பாளர் திரு. ராஜமனோகரன் பிரித்தானியாவிலிருந்தும், அனைத்துலக நடவடிக்கை குழு தலைவர் திரு. இரா சோமாஸம்காந்தன் பிரித்தானியாவிலிருந்தும், நிறுவனர் இரா கனகரத்தினம் இலங்கையிலிருந்தும், அனைத்துலக மக்கள் தொடர்பு பொறுப்பாளரும் கனடா தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவருமான திரு. லோகன் லோகேந்திரலிங்கம் கனடாவிலிருந்தும், மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் இலங்கை சமூக சேவைகள் அமைச்சருமான திரு. பெ. சந்திரசேகரன் இலங்கையிலிருந்தும் வருகைதந்துள்ளார்கள்.



ஆங்கு உரையாற்றிய உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அனைத்துலக தலைவர் முனைவர் வே. கோவிந்தசாமி தனது உரையில் எமது இயக்கத்தின் தலைமை பதவி தென்னாபிரிக்காவிற்கு வழங்கப்படிருபதால் இந்த நிகழ்வில் எமது பிரதினிகள் கலந்துகொள்வதில் நான் மகிழ்ச்சியடைக்கின்றேன்.


இரண்டு அமைப்புக்களும் இணைந்து தென்னாபிரிக்க தமிழர்களின் விமோசனத்திற்காகவும் உலகத் தமிழர்களின் ஒற்றுமைக்காகம் தொடர்ந்து பாடுபாடுவோம் என்று கூறினார்.



இந்த நிகழ்வில் தென்னரிபிரிக்கவைச் சேர்ந்த நாட்டிய கலா கேசரி நடன பள்ளி மாணவிகளும் கனடாவிலிருந்து சென்ற செல்வி ஜனனி லோகேந்திரலிங்கம் பரத நாட்டிய நிகழ்சிகளை வழங்கினார்கள்.
தென்னாபிரிக்க தமிழ் கூட்டினைப்பு கழகத்தின் தொடர்ச்சியான விழாக்கள் டேர்பன் மாநகரில் எதிர்வரும் 4ம், 5ம், 6ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.


இந்த மகாநாட்டில் தென்னாபிரிக்க அரசு சார்ந்த பல பிரமுகர்களும் அரசியில் கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளுவார்கள்.

No comments: