Thursday, 3 July 2008

ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க முன்வாருங்கள்:ஜனாதிபதிக்கு பத்திரிகை வெளியீட்டாளர்கள் கடிதம்

ஊடகவியலாளர்கள் மீது நடாத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் குறித்து கவனம் செலுத்துமாறும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பத்திரிகை வெளியீட்டாளர்கள் கடிதம் ஒன்றினை நேற்று வியாழக்கிழமை அனுப்பிவைத்துள்ளனர்.

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட கருத்தினை தாம் வரவேற்பதாகவும் இந்தக் கடிதத்தில் பத்திரிகை வெளியீட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், சனநெரிசல்மிக்க பாதையில் ஊடகவியலாளர் நாமல் பெரேரா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய அரசியல் பிரிவு அதிகாரி மகேந்திர ரத்னவீர ஆகியோர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமையானது துணிச்சலான முறையில் கொழும்பு நகரில் குற்றச்செயல்கள் நடைபெறுவதைத் தெளிவாகக் காட்டுவதாகவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக்கடிதத்தில் விஜயா நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் விஜேவர்தன, உபாலி நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத் தலைவர் நிமால் வெல்கம, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் முகாமைத்துவ் பணிப்பாளர் சிவக்குமார் நடேசன், சுமதி நியூஸ்பேப்பர்ஸ் முகாமைத்துவ் பணிப்பாளர் திலங்க சுமதிபால, லீடர் பப்ளிகேஷன்ஸ் தலைவர் லால் விக்ரமதுங்க, நியூ உதயன் பப்ளிகேஷன்ஸ் தலைவர் ஈ.சரவணபவன், தினக்குரல் பப்ளிகேஷன்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் பீ.கேசவராஜா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இதேவேளை, ஊடகவியலாளர் நாமல் பெரேரா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய அரசியல் பிரிவு அதிகாரி மகேந்திர ரத்னவீர ஆகியோர் மீது தாக்குதல் நடாத்தியவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து ஆராய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments: