Saturday, 12 July 2008

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சீ.டி.எம்.ஏ. தொலைபேசிப் பாவனைக்குப் புதிய நெறிமுறை

mobile-phone.jpgகையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சீ.டி.எம்.ஏ. தொலைபேசிகள் பேன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு தொலைத்தொடர்பாடல் ஆணைக்குழு புதிய நெறிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

தொலைபேசிகளைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.

1991ஆம் ஆண்டு இலங்கை தொலைத்தொடர்பாடல் சட்டத்தின் 25 சரத்து மற்றும் 1996ஆம் ஆண்டு 27வது சரத்து ஆகியவற்றுக்கு அமைய எந்தவொரு நபரும் ஆணைக்குழுவின் அனுமதியின்றி தொலைத்தொடர்பு சாதனங்களை விற்பனை செய்யமுடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

'சிம்' அட்டைகள்

கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குனர்கள், முகவர்கள், பிரதி முகவர்கள் அனைவரும் சிம் அட்டைகளை வழங்க முன்னர் வாங்குபவரின் அடையாள அட்டையில் இருக்கும் படத்தைப் பரிசீலிக்க வேண்டும் எனவும், உரியநபரின் அடையாள அட்டைதான் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சிம் அட்டை வழங்கப்பட வேண்டுமெனவும் கூறப்படுகிறது.

சிம் அட்டையைக் கொள்வனவுசெய்யச் செல்லும் நபரின் அடையாள அட்டையில் இருக்கும் படத்தில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால், உரிய நபர் படத்தை உறுதிப்படுத்திய பின்னரே சிம் அட்டை வழங்கப்படவேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவர் சிம் அட்டையை சட்டரீதியாகக் கொள்வனவு செய்தால் அதனை மற்றொருவர் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது எனவும், அவ்வாறு ஒரு சிம் அட்டை பிறிதொரு நபரின் பெயருக்கு மாற்றம் செய்யப்படவேண்டுமாயின் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரின் கோரிக்கைகளை நிறைவேற்றிய பின்னரே மாற்றப்படவேண்டும் எனவும் தொலைத்தொடர்பாடல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்பொழுது பல்வேறு நிறுவனங்களால் அவற்றின் பெயரில் பதிவுசெய்யப்பட்டு பயன்படுத்தப்படும் சிம் அட்டைகள், பயன்படுத்துபவர்களின் சொந்தப் பெயரில் மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கையடக்கத்தொலைபேசி பயனப்படுத்தும் ஒருவர், அவரின் சிம் அட்டையின் உரிமை தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியக் கடிதத்தை உடன் வைத்திருப்பது அவசியம் எனவும், புதிய நெறிமுறைகளை தொலைபேசிப் பாவனையாளர்கள் உரியமுறையில் கையாழ்கிறார்களா என்பதை சோதனைச் சாவடிகளில் முப்படையினரும், பொலிஸாரும் சோதனையிடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அதிகாரங்களை வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீ.டி.எம்.ஏ. தொலைபேசிகள்

கம்பிவழித் தொடர்பற்ற சீ.டி.எம்.ஏ. தொலைபேசிகள் பதிவுசெய்யப்பட்ட குறிப்பிட்ட விலாசத்தில் மாத்திரமே பயன்படுத்தப்படவேண்டும் என தொலைத்தொடர்பாடல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

No comments: