சமீபத்தில் ஊதிய கமிஷன் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்கியது. ஊதிய கமிஷனின் பரிந்துரைகளால் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே பெரும் ஊதிய உயர்வும், கடை நிலை ஊழியர்களுக்கு மிகக் குறைந்த அளவிலான ஊதிய உயர்வையும் பரிந்துரை செய்திருப்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதேபோல முப்படையினருக்கும் ஊதிய கமிஷன் பரிந்துரைகள் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் முப்படைகளையும் சேர்ந்த 107 அதிகாரிகள் ராஜினாமா செய்வதாக அறிவித்து கடிதம் கொடுத்துள்ளனர். மார்ச் 24ம் தேதிதான் ஊதியக் கமிஷன் பரிந்துரை மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. அதன் பின்னரே இத்தனை பேரும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து மூத்த பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்புப் படையினருக்கு வெறும் 15 சதவீத ஊதிய உயர்வே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது அவர்களை வெறுப்படைய செய்துள்ளது.
லெப்டினன்ட் கர்னல், கர்னல் அளவிலான மேலும் பல அதிகாரிகள் பதவி விலகக் கூடும் என்றார்.
பொதுவாக வாரத்திற்கு 2 அல்லது 4 ராஜினாமாக்கள் மட்டுமே நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 15 நாட்களில் 107 அதிகாரிகள் ராஜினாமாக் கடிதம் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊதியக் கமிஷன் பரிந்துரையால் ஏற்பட்ட விளைவே இது என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே பாதுகாப்புப் படையில் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுகிறது. ராணுவத்தில் மட்டும் 11 ஆயிரம் அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டியுள்ளது. கடற்படையில் 3000 பேரும், விமானப்படையில் 6000 பேரும் தேவைப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தோணியுடன் தளபதிகள் சந்திப்பு:
உயர் பாதுகாப்பு படை அதிகாரிகள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து முப்படைகளின் தலைமைத் தளபதிகளும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியை சந்தித்து நிலைமையை விளக்கினர்.
மேலும், பாதுகாப்புப் படையினருக்கு என தனியாக ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கோரினர். இதுகுறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக அந்தோணி அவர்களிடம் தெரிவித்தார்.
உயர் நிலைக்குழு அமைப்பு:
இந்த நிலையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் கோரிக்ககளை பரிசீலிக்க உயர்நிலைக் குழு ஒன்றை மத்திய அரசு அவசரமாக அறிவித்துள்ளது.
இந்தக் குழுவில் நிதித்துறை செயலாளர் சுப்புராவ், உள்துறைச் செயலாளர் மதுக்கர், பாதுகாப்புத் துறை செயலாளர் விஜய் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

No comments:
Post a Comment