Friday, 18 April 2008

மலேசியாவில் 3 தமிழர்கள் முறைகேடாக கைது

கோலாலம்பூர்: மலேசியாவில் முறையான ஆவணங்களுடன் வேலை பார்த்து வந்த 3 தமிழர்களை, அந்நாட்டு அதிகாரிகள் முறைகேடாக கைது செய்துள்ளனர். கடந்த 18 நாட்களாக அவர்கள் முகாமில் அல்லலுற்று மீண்டுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த மீனாட்சி (52) என்ற விவசாயி, ஷேக் ராஜேந்திரன் (40) என்கிற டெய்லர், முருகேசன் (24) என்கிற தச்சர் ஆகியோர் மலேசியாவில் முறையான ஆவணங்களுடன் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி அவர்கள் மூன்று பேரையும் மலேசியா குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து முகாமில் அடைத்தனர்.

இந்த சட்டவிரோத கைது குறித்து மலேசிய இதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நியூ ஸ்டிரெய்ட் டைம்ஸ் இதழுக்கு மீனாட்சி அளித்துள்ள பேட்டியில், நான் எனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன். அதிகாலை 1.30 மணியளவில் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அங்கு வந்தனர்.

எனது பாஸ்போர்ட்டைக் காட்டுமாறு கூறினர். நானும் எனது சட்டைப் பையில் வைத்திருந்த பாஸ்போர்ட் நகலைக் காட்டினேன். ஒரிஜினல் எனது சூட்கேஸில் இருப்பதாக தெரிவித்தேன். ஆனால் அதை அவர்கள் கேட்கவில்லை. மாறாக என்னை அங்கிருந்து கூட்டிச் சென்று விட்டனர் என்றார்.

மீனாட்சி கைது செய்யப்பட்டபோது அதை அறையில் ஷேக் ராஜேந்திரனும் தூங்கிக் கொண்டிருந்தார். அவரையும் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் முருகேசன் அங்கு வரவே அவரையும் அதிகாரிகள் கூட்டிச் சென்றுள்ளனர்.

மூன்று பேரையும் ஒரு ராலியில் ஏற்றி, செமன்யா என்ற இடத்தில் உள்ள முகாமுக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு 18 நாட்களாக அவர்கள் சரியான சாப்பாடு கூட தரப்படாமல் சித்திரவதைக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் மலேசியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு இவர்களின் நிலை தெரிய வந்து அவர் விரைந்து சென்று 3 பேரையும் மீட்டுள்ளார்.

முகாமில் படு மோசமான நிலையில் தாங்கள் இருந்ததாக ஷேக் கூறியுள்ளார். அவர் கூறுகையில், மகா மோசமான முகாம் அது. சாப்பாடு வாயில் வைக்கவே முடியாது. நான் சாப்பிட பயந்து சாப்பிடாமலேயே இருந்தேன். 18 நாட்களும் நான் சரிவர சாப்பிடவில்லை. மனிதர்களால் சாப்பிடவே முடியாத அளவுக்கு அது மோசமாக இருந்தது என்றார்.

No comments: