Tuesday 8 April 2008

ஏ.பி.சீ. ஊடக நிறுவனத்தின் மூன்று அலைவரிசைகளுக்கு அனுமதி.

ஊடக அமைச்சினால் இடைநிறுத்தப்பட்ட ஏ.பி.சீ. ஊடக நிறுவனத்தின் மூன்று வானொலிச் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. ஹிரு எப்.எம், சூரியன் எப்.எம், மற்றும் கோல்ட் எப்.எம் ஆகிய வானொலிச் சேவைகள் எதிர்வரும் மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஊடக நிறுவனத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் எமது இணையதளத்திற்கு தெரிவித்தார்.
எனினும், ஏ.பி.சீ. ஊடக நிறுவனத்தின் சன் எப்.எம். மற்றும் ஸா எப்.எம். ஆகிய வானொலிச் சேவைகளுக்கு அரசாங்கம் இதுவரை அனுமதி வழங்கவில்லை எனத் தெரியவருகிறது. யுத்தம் தொடர்பான செய்தியொன்றின் மூலம் மக்களை தவறான வழியில் இட்டுச் செல்ல முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் ஏ.பி.சீ. நிறுவனத்திற்குச் சொந்தமான 5 வனொலிச் சேவைகளின் ஒலிபரப்புக்களை ஊடக அமைச்சு கடந்த ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி இடைநிறுத்தியது. ஏ.பீ.சீ நிறுவனத்திற்கு 24 பண்பலைகள் ஏற்கனவே காணப்பட்டன. எனினும் தற்போது 15 பண்பலைகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன. ஹிரு எப்.எம். வானொலிச் சேவைக்குச் சொந்தமான 107.9 பண்பலையை கூட அரசாங்கம் மீண்டும் வழங்கவில்லை எனத் தெரியவருகிறது. ஹிரு எப்.எம். வானொலிச் சேவையின் ஒலிபரப்பு நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கும் பொருட்டு நேற்றைய தினம் முதல் பரீட்சார்த்த ஒலிபரப்பு நடைபெற்றுவருகிறது. ஏ.பி.சீ. ஊடக நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரெய்னோ சில்வாவின் சகோதரரான, மேல்மாகாணசபையின் ஐக்கிய தேசியக் கட்சிஉறுப்பினர், துமிந்த சில்வாவின் அழுத்தங்கள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரசாங்கம் பல தடவை குற்றஞ்சாட்டியிருந்தது. ஏ.பி.சீ. ஊடக நிறுவனத்தின் மீதான தடையை அடுத்து துமிந்த சில்வா ஜனாதிபதியை சந்தித்து ஆளுங்கட்சியில் இணைந்தார். இந்த நிலைமையின் கீழ் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள மூன்று வானொலிச் சேவைகளின் அரசியல் கொள்கைகளை முற்றுமுழுதாக மாற்ற நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர். ஏ.பி.சீ. நிறுவனத்திற்குச் சொந்தமான ஏனைய 9 பண்பலை வரிசைகளையும் பெற்றுக் கொள்வதில் ஜனாதிபதியின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவுவதாகத் தெரியவருகிறது.

No comments: