Wednesday, 9 April 2008

கிரண்‌பேடியும் 'நோ' - ராகுல் வருவாரா?(வீடியோ இணைப்பு)

ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி மறுத்துவிட்டார். இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி தொடங்குகிறது. இதற்கு திபெத்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏதென்ஸ் நகரில் புறப்பட்டதில் இருந்து ஒலிம்பிக் சுடர் ஓட்டத்துக்கு திபெத்தியர்கள் இடையூறு செய்துவருகின்றனர்.

இந்நிலையில் லண்டன், பிரான்ஸ், அமெரிக்காவை கடந்து வரும் ஒலிம்பிக் சுடர் வரும் 17ம் தேதியன்று தலைநகர் டெல்லியை அடைகிறது.

நாட்டின் பல்வேறு சாதனையாளர்கள் இந்த சுடரை தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்கின்றனர். அப்போது திபெத்தியர்களால் பிரச்னை வராமல் தடுக்க சுடருக்குப் பாதுகாப்பாக தேசிய பாதுகாப்பு கமாண்டோக்களை உடன் செல்ல மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிலையில் சுடரை முதலில் ஏந்திச் செல்வதாக அறிவிக்கப்பட்ட இந்திய கால்பந்து அணி கேப்டன் பூட்டியா, திபெத்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொடர்ஓட்டத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்.

இதனால், அவருக்கு பதிலாக சச்சின் முன்னின்று ஏந்தி செல்வார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது. அவருடன் ஒலிம்பிக் வீரர் மில்கா சிங், அஞ்சு ஜார்ஜ், கிரண் பேடி ஆகியோரும் பங்கேற்பதாக கூறப்பட்டது.

ஆனால் திடீர் திருப்பமாக இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமில்லை என்று கிரண் பேடி அறிவித்துள்ளார்.

அதிகமான பாதுகாப்பு கெடுபிடிகளால் விளையாட்டின் முக்கியத்துவம் பறிபோகிறது. அதீத பாதுகாப்பு ஒலிம்பிக் ஓட்டத்தை மூச்சு திணற செய்வதாக இருக்கும் என்பதால் இந்த ஓட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்தேன் என்று பேடி காரணம் கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இந்திய ஒலிம்பிக் ‌கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது. ராகுல் காந்தி இதில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை

No comments: