Sunday, 6 April 2008

அமைச்சர் மீதான குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணை இரகசிய பொலிஸாரிடம் மரதன் ஓட்டப் போட்டியாளர் போன்றே குண்டுதாரி ஊடுருவல்

வெலிவேரிய பகுதியில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணை இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படவேண்டிய பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் இவ்வாறானதொரு குண்டுத் தாக்குதல் எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து விஷேட பொலிஸ் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய என்.கே.இலங்ககோன் தெரிவித்தார்.

இவ்வாசாரணைகளின் போது பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்டிருந்த குறைபாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படுவதோடு அதற்கான காணரங்களும் கண்டறியப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது

வெலிவேரிய பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பானது மரதன் ஓட்ட போட்டியாளராக வருகை தந்திருந்த தற்கொலை குண்டுதாரி ஒருவராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் இதுவரை மேற்கொண்ட விசாரரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை அடுத்தே இதுவொரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தற்போது இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இரகசிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அத்துடன் அமைச்சர் மேற்படி வைபவத்திற்கு வருகை தரவுள்ளார் என்பது உறுதியாக்கப்பட்டதன் பின்னர் அப்பிரதேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் இவ்வாறானதொரு குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறித்து பொலிஸாருக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அப்பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விஷேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் இலக்கு வைக்கப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்களின் பட்டியலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளையின் –பெயரும் இடம்பெற்றிருப்பதாக பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அமைச்சுருக்குரிய பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமை குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: