Monday, 14 April 2008

தலைமை செயலாளர் போன் ஒட்டு கேட்பா?-அரசு மறுப்பு

LK Tripathi
சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதியின் தொலைபேசி உளவுப் பிரிவினரால் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், அவரும் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி உபாத்யாயாவும் பேசிய பேச்சு உளவுத்துறையால் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாகவும் இன்று ஒரு ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் விவகாரம், வழக்கு குறித்து இருவரும் பேசிக் கொண்ட உரையாடல் என்ற பெயரில் ஒரு நீண்ட உரையாடலையும் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இதே போல பல மூத்த அதிகாரிகளின் தொலைபேசிகளும் உளவுத்துறையினரால் ஒட்டு கேட்கப்பட்டு வருவதாக அந்த நாளிதழ் கூறியுள்ளது.

ஆனால், இதை தமிழக அரசு கடுமையாக மறுத்துள்ளது. மேலும் தவறான செய்தி வெளியிட்ட அந்த நாளிதழ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

இன்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் மாநில உளவுப் பிரிவினரால் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளின் தொலைபேசிகள் கண்காணிக்கப்படுவதாகவும், அது குறித்து ஓர் உரையாடலையும் உள் நோக்கத்தோடும் அரசுக்கு களங்கம் கற்பிக்கும் எண்ணத் தோடும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஏடு தொடர்ந்து பல முறை இப்படிப்பட்ட உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருகிறது. எனவே இந்தச் செய்தி முற்றிலும் தவறானது, உண்மைக்கு மாறானது என்று தெரிவிப்பதோடு, இந்தச் செய்திக்குக் காரணமானவர்கள் மீது அரசு சட்டப்படியான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடரும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.

இதே நாளிதழ் தான் சமீபத்தில் அரசியல் கட்சித் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதாக செய்தி வெளியிட்டது என்பதும் அதையும் தமிழக அரசு மறுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: