Tuesday, 22 April 2008

"லவ் விடுமுறை' சலுகை அளிக்க வேண்டும் என்று கோருகிறோம்'

ஹெல்சிங்கி: பின்லாந்தில் விவாகரத்து எண்ணிக்கையை குறைக்க, புது திட்டத்தை அரசு கொண்டு வர உள்ளது. அது தான், ஊழியர்களுக்கு "லவ் விடுமுறை' சலுகை அளிக்கும் திட்டம்!


ஐரோப்பிய நாடான பின்லாந்தில், மணமான சில மாதங்களில் விவாகரத்து செய்யும் ஜோடிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தான் இந்த புது திட்டத்தை கொண்டு வருவது பற்றி எம்.பி.,க்கள் ஆலோசித்து வருகின்றனர். எதிர்க்கட்சியான சோஷலிச ஜனநாயக கட்சி மூத்த எம்.பி.,டோமி டாபர்மான் , இந்த நகல் திட்டத்தை தயார் செய்துள்ளார். பார்லிமென்ட்டில் 100 எம்.பி.,க்கள் ஆதரவு இருந்தால் மசோதாவை நிறைவேற்றி, சட்டமாக்கி விடலாம். இப்போது 50 எம்.பி.க்கள் கையெழுத்து போட்டுள்ளனர்.


டாபர்மான் கூறுகையில்,"காதல் என்பது மனிதனின் அடிப்படை உரிமை. அதற்காக ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு தனி விடுப்பு சலுகை அளிப்பது முக்கியம். இதற்காக, ஆண்டுக்கு ஆறு நாட்கள், சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இதற்காகத்தான் நான் மசோதாவை கொண்டு வந்துள்ளேன். ஆளும் கட்சியினரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கண்டிப்பாக இந்த மசோதா நிறைவேறும்' என்றார். பின்லாந்தில், ஆண்டுக்கு 10 நாள் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது; 25 நாள் சம்பளத்துடன் கூடிய கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இத்துடன், "லவ் விடுமுறை' சலுகை அளிக்க வேண்டும் என்று சட்டம் வந்தால், பின்லாந்து ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு கூடுதல் விடுமுறை கிடைக்கும்.


டாபர்மான் மேலும் கூறுகையில்,"ஐரோப்பிய நாடுகளில் விவாகரத்து அதிகரித்து வருகிறது; இந்த நிலை பின்லாந்திலும் சமீப காலமாக உள்ளது. இதை தடுக்கவே, "லவ் விடுமுறை' சலுகை அளிக்க வேண்டும் என்று கோருகிறோம்' என்றும் தெரிவித்தார்.

No comments: