Sunday, 20 April 2008

இலங்கையில் நடக்கும் குண்டுத்தாக்குதல் குறித்து சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர் சங்கம் ஆராயும் * விரைவில் தென்னாபிரிக்காவில் மாநாடு

இலங்கையில் இடம்பெறும் குண்டுத்தாக்குதல் தொடர்பாக தென்னாபிரிக்காவில் சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் ஆராயவுள்ளது. கேப்ரவுணில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டினை தென்னாபிரிக்காவுடன் இணைந்து எகிப்து மற்றும் ஈரான் போன்ற நாடுகள் ஏற்பாடு செய்துள்ளன. இலங்கையில் நடக்கும் குண்டுத்தாக்குதல்களுடன் டாபூரில் இடம்பெறும் கொலைகள்,பாலியல் வல்லுறவுகள், காசாவில் ஏற்படும் பொதுமக்கள் இழப்பு கொலம்பியாவின் அரசியல் விவகாரம், சோமாலிய வன்முறைகள் போன்ற உலகின் முக்கிய பிரச்சினைகளை இந்தச் சங்கம் ஆராயவுள்ளது. இலங்கை உட்பட இந்த நாடுகளில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை விரைந்து முடிவெடுக்கவேண்டும் என தென்னாபிரிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது. சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் கடந்த பெப்ரவரி 21 ஆம் திகதி கொழும்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசியல் தலைவர்களைச் சந்தித்து உரையாடியிருந்தனர். கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஜெனீவாவில் கண்டனப்பேரணி நடத்திய ஈழத் தமிழர்கள் பொதுக்கூட்டத்தின் முடிவில் சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர் சங்கத்திடம் மனு கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: