Sunday, 20 April 2008

ஈராக்கில் உள்ள `அமெரிக்க படையினர் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துங்கள்' தீவிரவாதிகளுக்கு அல்கொய்தா தளபதி உத்தரவு(video annex)

`ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினர் மீதான தாக்குதலை அடுத்த மாதம் முழுவதும் தீவிர படுத்த வேண்டும்' என்று தீவிரவாதிகளுக்கு அல்கொய்தா தளபதி அபு ஹம்சா அல் முஹாஜிர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

4 ஆயிரம் வீரர்கள்

ஈராக்கில் அமைதியை நிலை நாட்டும் பணியில், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினர் ஈடுபட்டு உள்ளனர். அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அல்கொய்தா மற்றும் ஈராக்கில் உள்ள தீவிரவாதிகள் கூறி வருகின்றனர். மேலும் அமெரிக்க படையினர் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, இங்கிலாந்து ராணுவத்தின் ஒரு பகுதியினர் திரும்பி விட்டனர். ஆனால் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து முகாமிட்டு உள்ளது. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 4 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் பலியாகி உள்ளனர். இது குறித்து அதிபர் புஷ், கடந்த வாரம் கவலை தெரிவித்து இருந்தார்.

ஒரு மணிநேர கேசட்

இந்த நிலையில், அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஈராக் தளபதி அபு ஹம்ஸா அல் முஜாஹிர், ஒரு ஆடியோ கேசட்டை வெளியிட்டுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் ஓடும் அந்த கேசட்டில், `4 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததை கொண்டாட வேண்டும்' என்று கூறியுள்ளார். லண்டனில் உள்ள தீவிரவாதத்தை கண்காணிக்கும் நிறுவனம் ஒன்று இந்த கேசட்டை வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த கேசட்டில், `இந்த மகிழ்ச்சியை வித்தியாசமான முறையில் நாம் கொண்டாட வேண்டும். இந்த கொண்டாட்டத்தில், தோல்வியடைந்த புஷ்சையும் கலந்து கொள்ள செய்வோம். அடுத்த ஒருமாத காலத்துக்கு `நேர்மையான தாக்குதலை' தொடங்க வேண்டும். ஈராக்கில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க வீரரின் தலையையும் அதிபர் புஷ்சுக்கு அன்பளிப்பாக கொடுக்க வேண்டும்' என்று அல் முஜாஹிர் தெரிவித்துள்ளார்.

தற்கொலைப்படை

ஈராக்கில் உள்ள சன்னி பிரிவு தீவிரவாதிகளுக்கு இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். இதற்கிடையே, பாக்தாத் நகருக்குள் அல்கொய்தா தீவிரவாதிகள் நுழைந்து இருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்கள் கார் வெடிகுண்டு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல்களில் ஈடுபடக் கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

No comments: