Sunday, 20 April 2008

சென்னை ஐகோர்ட்டில் தமிழை ஆட்சி மொழியாக மத்திய அரசு அறிவிக்கும் கருணாநிதி நம்பிக்கை

சென்னை ஐகோர்ட்டில் தமிழை கொண்டுவரும் நல்ல அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று நம்புவதாக முதல்-அமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய சட்ட மந்திரி கருத்து

கேள்வி: சென்னை ஐகோர்ட்டில் தமிழைக் கொண்டு வருவது பற்றி மத்திய அரசுக்கு தாங்கள் வைத்த வேண்டுகோள் என்னவாயிற்று?

பதில்: இந்தக் கோரிக்கை பற்றி மத்திய சட்ட மந்திரி எச்.ஆர்.பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, சென்னை ஐகோர்ட்டின் மொழியாக தமிழை ஆக்க வேண்டுமென்ற தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் கோரிக்கைக்கு மத்திய அரசு எந்த விதமான எதிர்ப்பையும் தெரிவிக்காது என்றும், மத்திய அரசு இந்தப் பிரச்சினையை ஆதரவாகவே அணுகும் என்றும் சொல்லியிருக்கிறார்.

டெல்லியிலே நடைபெற்ற ஒரு மாநாட்டில் படிக்கப்பட்ட எனது பேச்சில் இந்தக் கோரிக்கையை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவூட்டி, நமது சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதின் தொடர்ச்சியாக நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தான் மத்திய சட்டத் துறை மந்திரி இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். பல மாதங்களாக மத்திய அரசின் ஒப்புதலுக்காக இந்தக் கோரிக்கை காத்துக் கொண்டுள்ளது என்பதை நினைவிலே கொண்டு, அமைச்சர் உறுதி அளித்திருப்பதைப் போல விரைவில் நல்லதொரு அறிவிப்பை மத்திய அரசின் சார்பில் வெளியிடுவார் என்று நம்புகிறேன்.

சரப்ஜித் சிங்குக்கு தண்டணை

கேள்வி: பாகிஸ்தானில் லாகூர் சிறையில் வாடும் இந்தியர், சரப்ஜித் சிங்குக்கு தூக்கு தண்டனை வழங்குவது பற்றி?

பதில்: பொதுவாக உலகளவில் தூக்குத் தண்டனை கூடாது என்ற கருத்துடையவன் நான். பலமுறை அதனை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறேன். சரப்ஜித் சிங்கை பொறுத்தவரையில் அவர் 1991-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் சிறையிலே 17 ஆண்டுகளாக வாடி வருகிறார். கடந்த 1-ந் தேதியன்று அவரை தூக்கில் போட முடிவு செய்யப்பட்டதாக செய்தி வந்தது. அதன் பின்னர் இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்க அந்தத் தூக்கு தண்டனை ஏப்ரல் 30-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்தக் கெடு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டதாக முதலில் ஒரு செய்தியும், அந்தச் செய்தி தவறானது என்று பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்திருப்பதாக அதைத் தொடர்ந்து ஒரு செய்தியும் வந்துள்ளது. வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் மத்திய அரசின் கருத்து எதுவோ, அதற்கு முரண்படாத கருத்து தான் நம்முடைய கருத்தும் என்று நான் பல முறை சொல்லியிருக்கிறேன். சரப்ஜித் சிங் தூக்குத் தண்டனையைப் பொறுத்து உலக நாடுகள் எல்லாம் ஒன்றாக வேண்டுகோள் விடுத்து அவரது உயிரை காத்திட வேண்டுமென்பது நம்முடைய விருப்பமாகும்.

ரத்தம் சிந்துவதை தடுக்க

கேள்வி: "ஒகேனக்கல் குடிநீர் திட்ட விஷயத்தில் ஒருமைப்பாடு, இறையாண்மை, மனசாட்சி, நீதிக்கு மரியாதை எல்லாவற்றையும் சுய நலக்கூடையில் குப்பையாய் கொட்டிவிட்டு, கூசாமல் தமிழகத்தைச் சீண்டுவதிலேயே குறியாயிருக்கும் கர்நாடக அரசின் வேண்டாத்தனத்தைக் கண்டிக்காமல், கண்மூடித்தனமாக சமாதானம் என்ற பொய்மைக்குள் தமிழ்நாட்டைச் சிறைப்படுத்தியது அநியாயம்'' என்று கோவில்பட்டி, ச.ஆ.கேசவன் என்பவர் "ஆசிரியர்-கடிதம்'' எழுதி, அதனை "இந்தியா டுடே'' இதழில், அந்தப் பத்திரிகையின் எடிட்டர் பிரபு சாவ்லா வெளியிட்டிருக்கிறாரே?

பதில்: இப்போது கோவில்பட்டி கேசவனுக்கும், இந்தியா டுடே ஆசிரியர் பிரபு சாவ்லாவுக்கும் நான் எடுத்த தற்காலிக முடிவு கண்மூடித்தனமாகத் தான் தெரியும். நாளை கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறும்போது, அங்குள்ள சமூக விரோதிகளும், வெறியர்களும் இந்த நியாய, அநியாயங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இந்தப் பிரச்சினைக்காக இருதரப்பிலும் இரத்தம் சிந்துவார்களே, அப்போது இந்தக் கண்மூடித்தனம் அந்த இருவருக்கும் "கண்திறப்புத்தனமாக'' தெரியும்!.

இரண்டு மாநிலங்களையும் சேர்ந்த அப்பாவி மக்களின் உயிர், மற்றும் உடைமைகளின் பாதுகாப்பைக் கருதி, ஒரு சில மாதங்களுக்கு இந்தத் திட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்ததற்காக போராட்டம், ஆர்ப்பாட்டம் என்றெல்லாம் தாண்டிக் குதிக்கிறார்களே, இவர்கள் எல்லாம் கடந்த பல ஆண்டுகளாக இந்த ஒகேனக்கல் திட்டம் பற்றி எந்த வகையிலும் வாயையே திறக்கவில்லையே; அப்போதெல்லாம் வாய் மூடி மௌனியாக இருந்து விட்டு, தற்போது தி.மு.க அரசு தானாக முன் வந்து தூங்கிக் கொண்டிருந்த திட்டத்திற்கு புத்துயிர் கொடுத்து, ஜப்பான் வங்கியிலிருந்து கடன் தொகையும் பெற்று நிறைவேற்ற முன் வந்துள்ள நிலையில் சவடால் உரைப்பது; சவால் விடுவது தான் வேடிக்கையாக உள்ளது.

டாக்டர் ராமதாஸ்

கேள்வி: டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் நடப்பாண்டில் ஐகோர்ட்டு தீர்ப்பின்படி உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமல் படுத்தும் மத்திய அரசின் முடிவை பா.ம.க. ஒப்புக்கொண்டதாகச் சொல்லியிருக்கிறாரே?.

பதில்: அதே பேட்டியில் டாக்டர் ராமதாஸ், இட ஒதுக்கீட்டுக் கொள்கையிலிருந்து கிரிமிலேயர் என்ற யோசனையையே நீக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயர்கல்வி நிறுவனங்களில் கிரிமிலேயர் காரணமாக இட ஒதுக்கீட்டை அமல் படுத்தாமல் விட்டால் ஓராண்டு வீணாகிவிடும் என்றும் சொல்லியிருக்கிறார்.

ஜப்பானிடம் நிதியுதவி

கேள்வி: "ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்காக 1300 கோடி ரூபாயை ஏன் ஜப்பானுக்குப் போய் வாங்க வேண்டும், இருந்த இடத்தில் இருந்தே மிரட்டி வசூல் செய்துவிடலாமே? அரசியல் கட்சிகளுக்கு பணம் சப்ளை செய்வதற்காகவே இங்கே 2 பேர் இருக்கிறார்கள். அரசியலுக்கு வந்த பிறகு தான் எனக்கு இதெல்லாம் தெரியும்'' என்று தே.மு.தி.க. தலைவர் கூறியதாக "இந்தியா டுடே'' எழுதியிருக்கிறதே?.

பதில்: அரசியலில் இத்தனை ஆண்டுக் காலமாக இருக்கும் எனக்கு அந்த 2 பேர் யாரென்று தெரியவில்லை. ஆனால் அவருக்கு தெரிந்திருக்கின்றது. அப்படியே தெரிந்தாலும், அவர் சொல்வதைப் போல யாரையும் மிரட்டி வசூல் செய்கிற பழக்கம் எனக்கு வராது. அரசியலுக்கு வந்த பிறகு குறுகிய காலத்தில் இதைப்போல பல விஷயங்கள் அவருக்கு தெரிந்திருக்கிறது.

தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு

கேள்வி: தமிழக உயர் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை புலனாய்வுத் துறை போலீசார் ஒட்டுக் கேட்டதாகக் கூறி, ஒரு ஆங்கில பத்திரிகை வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க.வினர் ஒரு சி.டி. கேசட்டைத் தூக்கிக் காட்டி பயமுறுத்திய காட்சி புகைப்படமாக வெளிவந்திருக்கிறதே?.

பதில்: அவர்களின் அந்த மிரட்டலுக்கெல்லாம் யார் பயப்படுவார்கள்?. அவர்கள் சி.டி. கேசட்டைக் காட்டுவது இருக்கட்டும். அ.தி.மு.க. ஆட்சியிலே நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள் குறித்து அவர்கள் கையெழுத்தோடு கூடிய கோப்புகளையெல்லாம் தூக்கிக் காட்டினால் இவர்கள் எங்கே போய் ஒளிந்து கொள்வார்கள்?

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி அறிக்கையில் கூறியிருக்கிறார்.

No comments: