மொழிச் சட்டம் மற்றும் மாகாண சட்டங்களை தூசி தட்டி எடுக்கவே 20 ஆண்டு காலம் கடத்தும் சிங்களவர்களின் அரசியல் வரலாற்றின் இலட்சணத்தைப் பார்த்தால் தமிழர்கள் எப்படி நம்புவார்கள் என்று சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
இந்நாட்டில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் நிலவுகின்றது. விடுதலை புலிகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று கூறுவதற்கு நான் தயங்கவில்லை.
ஆனால் இந்நாட்டில் அரச பயங்கரவாதமும் நிலவுகின்றது. இதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
1989 ஆம் வருடத்தில் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட போது அன்று அதனை இன்றைய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரச பயங்கரவாதம் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதுபோல இன்று தமிழர்கள் கடத்தப்பட்டு கொல்லப்படும் போது நான் அதனை அரச பயங்கரவாதம் என்று கூறுகின்றேன்.
சிங்கள மட்டும் சட்டம் 1956 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அதை 1988 ஆம் ஆண்டில் 16 ஆவது அரசியல் திருத்தச்சட்டமாக மாற்றி சிங்களத்துடன் தமிழையும் ஆட்சி மொழியாக அறிவித்தீர்கள். இந்த அறிவிப்பு வருவதற்கும் 22 வருடங்கள் ஆகின.
ஆனால் இந்த சட்ட மாற்றம் வந்தும் என்ன பயன்? தலைநகரம் கொழும்பு மாநகரத்தில் தமிழ் பேசும் மக்கள் 50 விழுக்காடுகளுக்கு மேல் வாழ்கின்றனர்.
இங்கே உள்ள 19 காவல் நிலையங்களில் எதிலாவது தமிழில் முறைப்பாடு செய்ய முடியுமா? அரச அலுவலகங்களில் தமிழில் கருமம் ஆற்ற முடியுமா?
அதேபோல் 1987 ஆம் ஆண்டில் மாகாண சபை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை அன்றே தமிழ் பேசும் மக்கள் நிராகரித்து விட்டார்கள். அது வேறு விடயம்.
இந்த ஒன்றுக்கும் உதவாத சட்டத்தினை மீண்டும் தூசி தட்டி எடுத்து மேசையில் வைப்பதற்கே 20 ஆண்டுகாலம் ஆகியுள்ளது.
அதிலும் காவல்துறை, காணி அதிகாரங்களை களவாடி விட்டீர்கள். மாகாண சபைச் சட்டம் பற்றி பேசிகிறீர்களே தவிர, இது முழுமையாகச் சட்டத்தில் உள்ளபடி அமுல்படுத்தப்படும் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் கிடையாது.
உங்கள் அரசியல் வரலாற்றின் இலட்சணம் இதுதான்.
இந்நிலையில் சிங்கள அரசாங்கங்களை தமிழர்கள் எங்கனம் நம்பமுடியும்?
இந்நிகழ்ச்சி நடைபெறும் கொள்ளுப்பிட்டிக்கு சமீபமாக அரச தலைவர் செயலகம் அமைந்துள்ளது.
இதுதான் அன்றைய நாடாளுமன்றம் ஆகும். இந்த கட்டடத்திற்கு முன்னால் காலிமுகக் கடற்கரை புல்வெளியில் அமர்ந்து தமிழ் தலைவர்கள் செல்வநாயகம், நாகநாதன், அமிர்தலிங்கம் போன்றோர் சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து 1956 ஆம் ஆண்டில் சத்தியாக்கிரகம் செய்தனர்.
அவர்கள் அங்கிருந்தப்படி நாடாளுமன்ற கட்டடத்தினை நோக்கி குண்டு வீசவில்லை. ஒரு கல்லைத்தானும் எடுத்து வீசவில்லை.
இது முழுக்க முழுக்க சாத்வீக சமாதான அகிம்சை போராட்டம் ஆகும். ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது?
அன்றைய அரசாங்கம் குண்டர்களை ஏவிவிட்டு அவர்களை தாக்கியது. இரத்தம் வடியும் நிலையில் அந்த தமிழ்த் தலைவர்கள் சத்தியாக்கிரகத்தை முடித்து நாடாளுமன்ற சபைக்குள் நுழைந்த போது அரசாங்கத்தின் அமைச்சர்கள், அவர்களை பார்த்து கேலி செய்தார்கள். இதுதான் இந்நாட்டில் தமிழர்களின் சாத்வீகப் போராட்டத்திற்கு கிடைத்த பரிசு.
தமிழ் ஆயுதப் போராளிகள் 1980-க்குப் பின்பே உருவானார்கள். விடுதலைப் புலிகளும் ஏனைய போராளிகளும் ஆகாயத்தில் இருந்து பூமிக்கு குதித்து இங்கே இனப்பிரச்சினையை உருவாக்கி விடவில்லை. தீராத இனப்பிரச்சினையும், அரசாங்கங்களின் அடக்குமுறையும், தமிழ்த் தேசிய வாதத்தை தூண்டிவிட்டது. தமிழ்த் தேசிய வாதத்தை தீவிரவாதமாக மாற்றியது.
தமிழ்த் தீவிரவாதத்தை இன்று பிரிவினைவாதமாகவும், பயங்கரவாதமாகவும் மாற்றியுள்ளது.
இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கின்றது. அதற்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது.
ஆனால் இலங்கையில் இனப்பிரச்சினையே கிடையாது என்று சொல்பவர்கள் இருக்கின்றனர்.
இங்கே நிகழ்வது பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே என்று கூறி அனைத்தையம் விடுதலைப் புலிகளின் பிரச்சினையாக மட்டுமே பார்க்கின்றவர்கள் இருக்கின்றனர்.
இது தமிழர்களை மேலும் பிரிவினைவாதத்தை நோக்கி தள்ளுகின்றது.
இலங்கையில் வாழ்வது சிங்களத் தேசிய இனம் மட்டுமே. ஏனைய அனைவரும் சிறுபான்மை இனக்குழுக்கள் என ஜாதிக ஹெல உறுமய கூறுகின்றது.
இது பைத்தியக்கார சிந்தனையாகும். என்னிடம் கேள்வி கேட்ட ஒருவர் இலங்கையை தமிழர்கள் "இலங்கை" என்ற சொல்லை பயன்படுத்தி அழைப்பது தவறு என்று கூறுகின்றார்.
"லங்கா" என்று அழைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இத்தகைய கருத்துகள் தமிழ் மக்களை வேதனைபடுத்துகின்றன.
தமிழ் மொழி ஒரு வளமான மொழி.
எமது மொழியில் உள்ள வார்த்தைகளை பயன்படுத்துவதனை எவரும் தடுக்க முடியுமா?
எமது அயல்நாட்டை இந்தியா, பாரதம் ஆகிய பல பெயர்களில் அழைக்கின்றனர்.
அதேபோல் ஜப்பானை நிப்போன் என்றும் அழைக்கின்றனர். இவை எல்லாம் உலக வழக்கு.
இலங்கையின் தேசிய கீதத்தையும், தேசியக் கொடியையும் ஏற்றுக்கொள்கின்றீர்களா எனக் கேட்கின்றனர்.
இத்தகைய கேள்விகளை கேட்பவர்களுக்கு இலங்கையின் தேசிய கீதம் அதே மெட்டில் தமிழ் மொழியிலும் இருப்பது தெரியவில்லை.
தேசியக் கொடியில் மாற்றத்தினை ஏற்கனவே சிங்கள அரசியல் தலைவரான பிலிப் குணவர்த்தனவே கோரியிருந்தார்.
ஒரு மிருகத்தின் உருவம் தேசியக் கொடியில் இடம்பெறக்கூடாது என சொல்லியிருந்தார்.
இந்நிலையில் தமிழர்களின் அபிலாசைகளை எடுத்து பேசுவதற்கு எனக்கு உரிமை இல்லையா? என்றார் அவர்.
Saturday, 12 April 2008
சிங்களவர்களின் அரசியல் வரலாற்றின் இலட்சணத்தை பார்த்தால் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?: சிங்கள தொலைக்காட்சியில் மனோ கணேசன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment