Tuesday, 15 April 2008

ரணில்- மங்கள சமரவீர -சோமவன்ச இணைந்து புதிய கூட்டணி செயற்பட வைக்க முயற்சி

* மங்கள- அநுரகுமார பேச்சுவார்த்தை

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) சோமவன்ச அமரசிங்கவின் தலைமையிலான அணியுடன் ரணில்- மங்கள சமரவீர ஆகியோரின் புதிய அமைப்பான தேசிய சபை இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து நம்பகமாகத் தெரியவருகிறது.

இந்த இணைவு தொடர்பில் ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் பிரதான அமைப்பாளர் மங்கள சமரவீரவுக்கும் ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்காவுக்கும்மிடையில் ஏற்கனவே பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருப்பதாகவும் அறியவருகின்றது.

அண்மைக்காலத்தில் ஜே.வி.பி.க்குள் முரண்பாடு ஏற்பட்டு அக்கட்சியின் பிரசாரச் செயலாளரான விமல் வீரவன்ச தலைமையில் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனித்தியங்கத் தீர்மானித்துள்ளனர்.

விமல் வீரவன்ச தன்னை கட்சியிலிருந்து வெளியேற்றச் சதி நடைபெறுவதாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். ஆனால் விமல் வீரவன்ச கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயற்படுவதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க அவருக்குப் போதிய காலவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்க ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்திருந்தார்.

இதனிடையே ஜே.வி.பி.யை சின்னாபின்னப்படுத்துவதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் குற்றச்சாட்டுச் சுமத்தியிருக்கும் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.டி.லால்காந்த ஜானாதிபதியினதும் அவரது சகோதரரினதும் திட்டத்தின் பிரதிபலனை விரைவில் அவர்களே அனுபவிக்க நேரிடலாமெனவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஜே.வி.பி.யை ஜாதிக சபா எனும் தேசிய சபையுடன் இணைத்துக் கொள்வது தொடர்பான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியவருகின்றது.

இம்முயற்சியின் ஆரம்பகட்டப் பேச்சுக்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமாரதிசாநாயக்கா ஆகியோருக்கிடையில் இடம்பெற்றதாகவும் அதில் சாதகமான முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அநுர குமாரதிசாநாயக்கா ஜே.வி.பி. தலைமைத்துவத்தின் அனுமதியுடனேயே இப்பேச்சுக்களில் பங்கேற்றதாகவும் அறிய வருகிறது. தேசிய சபையைப் பலப்படுத்தும் பொருட்டு அனைத்து அரசியல் கட்சிகளினதும் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் கூடுதல் அக்கறை காட்டப்பட்டு வருவதாக சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் அரசாங்கத்துடனும் முரண்பட்டிருக்கும் ஜே.வி.பி. அரசாங்கத்தை ஆட்டம் காணச் செய்யும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க விருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த சுட்டிக் காட்டியுள்ளார். ஜே.வி.பி.யிலிருந்து சிலர் வெளியேறுவதாலோ அல்லது வெளியேற்றப்படுவதாலோ அக்கட்சி பலமிழக்கப் போவதில்லை எனவும் கிராமிய மட்டத்தில் அக்கட்சி பலமடைந்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜே.வி.பி. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் லால்காந்த பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் தேசிய சபையுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் அது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதாக கருதப்பட முடியாதெனவும் கூறினார்.

எவ்வாறாயினும் தேசிய சபையுடன் இணைவதற்கான இறுதி முடிவெதுவும் இதுவரையில் எட்டப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது வெளிநாட்டிலிருக்கும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமாரதிசாநாயக்கா இவ்வார இறுதியில் நாடு திரும்பவிருப்பதாகவும் அதன் பின்னர் தேசிய சபையுடன் விரிவாக ஆராயப்படவிருப்பதாகவும் தெரியவருகின்றது. இதேவேளை, ஜே.வி.பி.யை தேசிய சபையுடன் இணைத்துக் கொள்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி சாதகமான சமிக்ஞையை வெளிக்காட்டி இருப்பதாகவும் அறிய வருகின்றது.

1 comment:

ttpian said...

Nayana thara&Thrissa are interested in joining in this alliance!