Tuesday 8 April 2008

நான் ரஜினி நண்பன் என்பது எனக்கு கவுரவம் : அமிதாப்

தூற்றுவோர் தூற்றட்டும் ; முமபையைவிட்டு நான் போகமாட்டேன் என கூறியுள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ரஜினிகாந்துக்கு நண்பனாக இருப்பதை கவுரவமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு பணம் , புகழ் ஈட்டி தந்த மகாராஷ்ட்ரா மாநிலத்தைவிட தான் பிறந்த உத்தரபிரதேச மாநிலத்தின் மீதுதான் அதிக விசுவாசம் வைத்துள்ளதாக நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கூறிய குற்றச்சாட்டு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் , சிவசேனா கட்சி பத்திரிகையான ' சாம்னா ' வும் பிழைக்க வந்த மாநிலத்திற்கு விசுவாசமாக இருப்பதில் நடிகர் ரஜினிகாந்தை அமிதாப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி கட்டுரை ஒன்றை கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.

இதனால் அமிதாப் மிகவும் மனம் நொந்துபோனார்.ஆனால் அந்த கட்டுரை தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளதாகவும் , அமிதாப்பை சிவசேனா தொண்டர்கள் புறக்கணிக்கக் கூடாது என்றும் பால் தாக்கரே பின்னர் பல்டியடித்தார்.

இந்நிலையில், தன் மீதான விமர்சனம் குறித்து முதன் முறையாக மவுனம் கலைத்து மும்பையிலிருந்து நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் அமிதாப்.

அதில் " அவர்கள் ( ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள் ) என் மீது பாட்டில்களை வீசட்டும்... , ஊர்வலம் நடத்தட்டும் , என்னை தூற்றட்டும்... நான் பணியமாட்டேன்.

என்ன நிகழ்ந்தாலும் சரி மும்பையை விட்டு நான் வெளியேற மாட்டேன் " என கூறியுள்ளார்.

ரஜினியுடன் ஒப்பிட்டு பேசியது குறித்து கேள்விக்கு பதிலளித்த அமிதாப் , ரஜினிகாந்துக்கு நான் நண்பனாக இருப்பதை நான் கவுரவமாக உணர்கிறேன்.அவருடன் என்னை ஒப்பிட்டதை எண்ணி இன்னும் அதிக கவுரவமாக கருதுகிறேன் " என பதிலளித்துள்ளார்.

No comments: