நோர்வேயும் தென்னாபிரிக்காவும் இணைந்து அமைதி முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்று தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தேசிய இணைப்பாளரும், பிரதம பேச்சாளருமான தமிழ் தில்லைக்கூத்தன் வீரபத்திரன் வலியுறுத்தியுள்ளார். |
இது தொடர்பில் சுவிசிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (25.04.08) வெளிவந்த "நிலவரம்" மாதமிருமுறை ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணல்: கேள்வி: தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆற்றிவரும் பணிகள் பற்றி விளக்க முடியுமா? பதில்: இலங்கைத் தீவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மோதல், இது விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை உட்பட ஏனைய உலக நாடுகள் காட்டி வரும் பாராமுகம் என்பன ஈழத் தமிழர்களுக்காகக் குரல் தர எவரும் தயாராக இல்லை என்பதை உணர்த்தி நிற்கின்றது. கடந்த நான்கு தசாப்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன. 1956 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் தமிழை இலங்கைத் தீவின் அதிகாரபூர்வ மொழியாக இல்லாமல் செய்தது. நாங்கள் இனத்தால், மொழியால் ஒன்றுபட்டவர்கள். தொலைவில் வாழ்ந்தாலும் தமிழர்களாகிய நாங்கள் எமது சகோதரர்களுக்காகக் குரல்தரக் கடமைப்பட்டவர்கள். ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளன. ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன. ஆனால், அவை யாவும் சிங்களத் தலைமைகளால் மதிக்கப்படாமல் கிழித்தெறியப்பட்டுள்ளன. 1987 ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கூட தன்னிச்சையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அனைத்துலக அனுசரணையுடன் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் இருந்து கூட சிறிலங்கா அரசு வெளியேறியுள்ளது. இவை பற்றி நாங்கள் அனைத்துலக சமூகத்துக்கு விளக்கி வருகின்றோம். திம்புப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் கூடக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. தென்னாபிரிக்காவில் வாழும் தமிழர்களாகிய நாங்கள், சிறிலங்கா அடக்குமுறைக்கு எதிரான மக்கள் அமைப்பு, நீதிக்கும் சமாதானத்துக்குமான திராவிடர் அமைப்பு என்பனவற்றுடன் இணைந்து தென்னாபிரிக்கத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளோம். இதன் ஊடாக தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சோடு தொடர்புகளை ஏற்படுத்தியதன் மூலம் ஒரு அமுக்கக் குழு என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம். அதுமட்டுமின்றி தென்னாபிரிக்காவின் சிறப்புத் தூதுவர் இப்ராகிம் இப்ராகிம் உட்பட பல முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து சிறிலங்கா தொடர்பான பிந்திய தகவல்களைப் பெற்று சிறிலங்கா அரசாங்கத்தைப் பேச்சுவார்த்தை மேசைக்கு வரச்செய்ய அழுத்தத்தைப் பிரயோகிக்குமாறு கோரியுள்ளோம். சமாதான முன்முயற்சிகளில் இருந்து நோர்வே விலகியுள்ள நிலையில், நோர்வே வகுத்த பாத்திரத்தை தென்னாபிரிக்கா ஏற்றுக்கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம். 2002 ஆம் ஆண்டில் சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகி போர் நிறுத்தப்பட்டமை எமக்கு மகிழ்வைத் தந்தது. உண்மையில் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 24 இல் விடுதலைப் புலிகளே ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தைப் பிரகடனம் செய்தார்கள். ஆனால், அது அதிக நாள் நீடிக்கவில்லை. அதனை வரவேற்றதைப் போன்று சமாதானத்திற்காகப் பாடுபட்ட மறைந்த தமிழ்ச்செல்வன், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோரையும் நாம் எமது மண்ணில் வரவேற்றோம். ஒஸ்லோப் பேச்சுக்கள், ஜெனீவாப் பேச்சுக்கள், ரோக்கியோப் பிரகடனம் என்பனவற்றின் தோல்வி கவலையைத் தருகின்றது. விடுதலைப் புலிகளை அமெரிக்கா தடை செய்தமையால் வாசிங்ரனில் நடைபெறவிருந்த பேச்சுக்கள் தடைப்பட்டமை முக்கியமானதொரு விடயம். இது உண்மையிலேயே ஏமாற்றத்தை அளித்த விடயம். அதேவேளை, நோர்வேயும் ஐரோப்பாவின் ஏனைய சில நாடுகளும் விடுதலைப் புலிகளின் வருகைக்கு அனுமதி அளித்திருந்தமை வரவேற்கத்தக்க விடயமே. தென்னாபிரிக்காவில் நாம் வாழ்ந்த போதிலும் இலங்கைத் தீவில் தொடரும் மோதல் காரணமாக சட்டவிரோத கைதுகள், தடுத்து வைப்புகள், கொலைகள், பாலியல் வல்லுறவுகள் என்பன இடைவிடாமல் நடைபெற்று வருவதனை நாம் அறிவோம். அனைத்துலக மன்னிப்புச் சபையானது அதிகரித்து வரும் கடத்தல்கள் உட்பட அராஜகச் செயற்பாடுகளுக்காக அரசாங்கத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. அது தவிர அமெரிக்க அரசாங்கம் கூட அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களுக்காக சிறிலங்கா அரசாங்கத்தை அண்மையில் கண்டித்திருந்தது. அனைத்துலக நாடுகளிடம் இருந்தும், பொறுப்பு வாய்ந்த ஏனைய நிறுவனங்களிடம் இருந்தும் நாளாந்தம் வெளிவந்தபடி இருக்கும் கண்டனங்ககள், சிறிலங்கா அரசு சமாதான வழிமுறைக்கு வந்தே ஆகவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது. தொடரும் மோதலில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தேவைக்கும் அதிகமானவை. தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிடப்பட்ட முறையில் நடைபெறும் சிங்களக் குடியேற்றங்கள் தமிழரின் விகிதாசாரத்தைக் குறைப்பதற்காகவே செய்யப்படுகின்றன. இனச் சுத்திகரிப்புப் பாணியினாலான கொலைகளை இனியும் பொறுக்க முடியாது. எனவே, விடுதலைப் புலிகளுடனும், உலகு எங்கும் பரந்து வாழும் அவர்களின் ஆதரவாளர்களுடனும் கரம் கோர்த்து தமிழர்கள் தலைவிதியைத் தாமே தீர்மானிப்பவர்களாக சமாதானத்துடன் வாழ வழி செய்யப்பட வேண்டும் எனக்கோரி வருகின்றோம். இது அனைத்துலகக் கோரிக்கையாகும். கேள்வி: தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக்குழு எவ்வாறு தோற்றம் பெற்றது? இதன் காரணகர்த்தாக்கள் யார்? பதில்: கடந்த 20 வருடங்களுக்கு முன்னர், தென்னாபிரிக்காவில் வாழும் தென்னிந்தியத் தமிழர்கள் மத்தியில் இருந்த ஈழத்தமிழ் அனுதாபிகளைக் கொண்ட குழுவினால் ஆரம்பிக்கப்பட்டது. தமது சகோதரர்கள் இலங்கைத் தீவில் அநியாயமாகப் படுகொலை செய்யப்படுவது இங்கு வாழ்ந்த தமிழரிடையே ஒரு விழிப்புணர்வைத் தோற்றவித்தது. வயோதிபர்கள் நடுத்தர வயதினர், இளையோர் எனச் சுமார் 50 வரையானோர் இந்த அமைப்பைத் தோற்றுவித்தனர். சிறுபான்மையினரால் பெரும்பான்மையினர் ஆளப்பட்ட இருண்ட வரலாற்றைக் கொண்டவர்கள் நாங்கள். ஆனால், சிறிலங்காவில் இதற்கு மாறாக பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்க முனைகின்றனர். ஜனநாயக நாடு எனக் கூறப்படும் ஒரு பல்லின பல மத நாட்டில் பௌத்தம் மாத்திரமே அதிகாரபூர்வ மதமாக இருக்கையில், அந்நாட்டின் ஜனநாயகம் எவ்வாறு இருக்கும் எனக் கற்பனை பண்ண முடிகின்றது. பேச்சச் சுதந்திரம், மதச் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் ஆகியவை ஒரு மனிதனின் அடிப்படைச் சுதந்திரங்கள் ஆகும். தமிழ் பேசும் தமிழர்கள் மாத்திரமின்றி, கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கூட சிங்கள அரசின் ஒடுக்குமுறைக்கு இலக்காகி வருகின்றனர். வடக்கு - கிழக்கில் தமிழர்களிடையே கலந்து வாழும் முஸ்லிம்கள் தமிழிலேயே அல்லாவை வழிபடுகின்றார்கள். ஒற்றுமையாக வாழ்ந்த தமிழர்களிடையேயும் முஸ்லிம்களிடையேயும் சிறிலங்கா ஆயுதப் படைகளே திட்டமிட்ட ரீதியில் பிளவை ஏற்படுத்தின. சமாதானத்தை விரும்பாத விடுதலைப் புலிகள் முஸ்லிம்களின் உரிமைகளை மீறி வருவதாகக் காட்டுவதற்கு முயற்சிகள் செய்யப்படுகின்றன. எமக்குக் கிடைக்கின்ற செய்திகளின்படி கடத்தல் அதிகரித்துள்ளன. வயது வேறுபாடின்றி தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். செம்மணிப் புதைகுழியில் இருந்து 600-க்கும் அதிகமான தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு அனைத்துலக மன்னிப்புச் சபை உட்பட பல அனைத்துலக அமைப்புகள் சாட்சிகளாக உள்ளன. ஆனால் எத்தனை சாட்சியங்கள் இருந்தாலும், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் சிறிலங்கா அரசு அவற்றை மறுதலித்தே வருகின்றது. செஞ்சோலையில் மனிதாபிமானமற்ற முறையில் நடாத்தப்பட்ட 61 பிள்ளைகளின் கொலையில் அவர்கள் விடுதலைப் புலிப் போராளிகள், எனவே சிறிலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகின்றது. இது எவ்வாறு நியாயப்படுத்தப்பட முடியும்? ஆனால் உலகம் அனைத்தையும் பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்கிறது. பிரான்ஸ் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்ட போதும் உலகம் அமைதியே காத்தது. மனிதாபிமானப் பணியாளர்கள் ஆபத்துக்கு இலக்காகும் போதும் கூட ஐ.நா. சபை அமைதியாகவே உள்ளது. சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக், "விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் வெற்றி கொள்ள முடியாது" எனத் தெரிவித்திருந்தார். இருந்த போதிலும் ஏற்கனவே அதல பாதாளத்தில் உள்ள பொருளாதாரம் மேலும் சரிவை எதிர்கொள்கின்ற போதிலும் போரினைத் தொடர்வர் என சிங்கள தேசம் கங்கணம் கட்டிச் செயற்படுகின்றது. இது விடயத்தில் புத்த பிக்குகளும் முக்கியமான பங்கை ஆற்றி வருகின்றனர். அவர்களும் போருக்கு ஆதரவாகவே உள்ளனர். "நாங்கள் மிருகங்களைக் கொல்வதனை எதிர்க்கிறோம். ஆனால், தமிழர்களைக் கொல்வதனை எதிர்க்கவில்லை" என அவர்கள் நாடாளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் அனைத்துலக சமூகம் அமைதி காப்பதனை நாம் ஆட்சேபிக்கின்றோம். மதகுருமாரும், ஏனைய மனிதநேயத்தை மதிப்போரும் சிறிலங்காவில் நடைபெறும் அட்டூழியங்களைக் கண்டிக்க முயற்சிக்க வேண்டும். அனைத்துலக சமூகத்தின் அனுசரணையுடன் அல்பேனியாவில் இருந்து கொசவோ பிரிந்து சென்றிருக்கின்றது. ஆபிரிக்காவைப் பாருங்கள். எத்தியோப்பியா மற்றும் மாலவி ஆகிய நாடுகளில் மக்கள் அண்மையில் சுதந்திரத்தைப் பெற்றுள்ளார்கள். பலஸ்தீன மண்ணைப் பாருங்கள். அங்கு மோசமான படுகொலைகள் நடைபெறுகின்ற நிலையில் தீர்வொன்றை எட்ட அனைத்துலக ரீதியில் முயற்சிகள் செய்யப்படுகின்றன. சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்கிவிட அமெரிக்கா கூட முயற்சி செய்து வருகின்றது. உலகின் அரைவாசி நாடுகள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளன. அனைத்துலக சட்டங்களின் மூலம் இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட முடியும். கேள்வி: இந்திய வம்சாவழித் தமிழர்கள் உலகின் பல நாடுகளிலும் பரந்து வாழ்கிறார்கள். தாய்த் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்க்கு அடுத்ததாக தென்னாபிரிக்காவில் வாழும் தமிழர்களே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அதிகமாகக் குரல் தந்து வருகின்றார்கள். இதற்கான சிறப்புக் காரணங்கள் எதுவும் இருக்கின்றதா? பதில்: சு.ப.தமிழ்ச்செல்வன் சமாதானப் புறாவாக விளங்கினார். அவர் கொல்லப்பட்டு விட்டார். அவரது கொலையானது சிறிலங்கா அரசானது சமாதானம் மீது அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதனைக் காட்டுகின்றது. முன்னாள் அரச தலைவர் சந்திரிகாவின் பதவிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் உச்சநிலையை அடைந்தன. மாவீரர்களின் கல்லறைகள் கூடச் சிதைக்கப்பட்டன. கொல்லப்பட்ட சிறார்களின் அங்கங்கள் கூட வெட்டியெடுக்கப்பட்டன. பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் பாலுறுப்பில் வைத்து குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. இவை மனிதாபிமானச் செயற்பாடுகளா? நாங்கள் 21 ஆம் நூற்றாண்டில்தானா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இந்த அநியாயங்களைப் பார்க்க உலகம் குருடாகி விட்டதா? சிறிலங்காவில் நடைபெறுகின்ற பல்வேறு அட்டூழியங்களுக்கு இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில், அண்மையில் தனது வருடாந்தப் பாதீட்டில் சிறிலங்காவிற்கு பெருந்தொகை நிதியை இந்தியா ஒதுக்கியுள்ளது. இது போர் தொடர்வதனை ஊக்குவிக்கும். போர் தொடர்ந்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். மறுபுறம் தமிழீழம் உருவாவதைத் தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்கின்றார்கள். அதற்காக இந்தியா அவர்களை அடக்கி ஒடுக்குகின்றது. என்னைப் பொறுத்தவரை இந்தியா இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விட்டுவிட்டு 1987 இல் சிறிலங்காவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்தியாவே சிறிலங்காவிற்கு மிக அண்மையில் உள்ள பெரிய நாடு. எனவே, அங்கு நடைபெறும் அநீதிகளைத் தட்டிக்கேட்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது. தமிழ் நாட்டுக்கு அடுத்ததாக நாமும் மலேசியத் தமிழர்களும், அமெரிக்காவில் உள்ள தமிழர்களும், பிரித்தானியாவில் உள்ளோரும் ஓரளவில் குரல் எழுப்பி வருகின்றோம். ஆனால் புலம்பெயர் ஈழத் தமிழர்களின் பணி காத்திரமானது. அவர்கள் ஈழ விடுதலைக்காக மாபெரும் ஆதரவை வழங்கி வருகின்றனர். கேள்வி: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றீர்கள்? பதில்: சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்படும் கொடுமைகளை அனைத்துலக சமூகத்தின் முன் எடுத்துச் செல்வதே எமது பிரதான பணி. தென்னாபிரிக்காவின் கடந்தகால நிறவெறிக் கொடுமைகளின் போது இசைக் கலைஞர்களே அங்கே நடைபெற்ற அநியாயங்களை உலகம் முழுக்க எடுத்துச் சென்றனர். அதேபோன்று விளையாட்டு வீரர்களும். சிறிலங்கா துடுப்பெடுத்தாட்ட அணி தென்னாபிரிக்காவிற்கு வந்த போது நாங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினோம். ஆபிரிக்க தேசியக் காங்கிரசின் தலைவர் தேக்கப் சுமா வரை நாங்கள் அழுத்தம் தருகிறோம். சிறப்புத் தூதுவர் இப்ராகிம் இப்ராகிம் கூட ஆபிரிக் தேசியக் காங்கிரசின் மத்திய குழுக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார். அவர் ஒரு விடுதலைப் புலிகளின் அனுதாபியும் கூட. நாங்கள் ஒரு சுதந்திர நாட்டில் வாழ்கிறோம். கடந்த பெப்ரவரி 4 இல் சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாளையொட்டி கடைப்பிடிக்கப்பட்ட கரிநாளின் போது ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்பாட்டமொன்றை நடாத்தினோம். எங்கள் நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடாத்த அரசாங்கம் அனுமதித்திருந்தது. எம்மைப் பொறுத்த வரை இது விடயத்தில் தென்னாபிரிக்க அரசு எதிர்வரும் நாட்களில் காத்திரமான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கின்றோம். கேள்வி: தென்னாபிரிக்கப் குடிமகன் என்ற ரீதியில் நிறவெறிக் கொடுமையை நீங்கள் நேரில் அனுபவித்திருப்பீர்கள். ஈழத் தமிழர்களாகிய நாமும் சிறிலங்கா அரசின் இனச் சுத்திகரிப்புக் கொடுமையை அனுபவித்து வருகிறோம். இவை இரண்டையும் நீங்கள் எவ்வாறு ஒப்பிடுகிறீர்கள். பதில்: ஒரு கட்டத்தில் அமைதி வழித் தீர்வொன்று பற்றிய எதுவித நம்பிக்கையும் அற்றவர்களாக நாம் இருந்தோம். பெரும்பான்மையான மக்கள் கறுப்பர்களாக இருந்த போதும் அதிகாரம் சிறுபான்மையினரான வெள்ளையரிடமே இருந்தது. சுதேச குடிமக்கள் சிறப்புப் பிரதேசங்களில் வாழுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். மறைந்த முன்னாள் அரச தலைவர் பி.டபிள்யூ. போத்தா நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, "நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கால நாட்டைக் கட்டியெழுப்புவோம்" என்றார். ஒரு ஆபிரிக்க வெள்ளையரின் வாயில் இருந்து அத்தகைய வார்த்தைகள் வெளிவந்தன என்பதை அப்போது நம்ப முடியாமல் இருந்தது. ஆனால், நிறவெறிக் கொள்கை காலவதியாக ஆரம்பித்ததின் அறிகுறியாக அந்த உரை விளங்கியது. இதனையடுத்து ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் மீதான தடை நீக்கப்பட்டது. மேலும், ஆபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கமானதே உண்மையில் சமாதானத்திற்கு வழிவிடுவதாக அமைந்திருந்தது. இறுதியில் அனைவரும் ஓரிடத்தில் இருந்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான பேச்சுகளில் ஈடுபட்டார்கள். இதுவே சிறிலங்காவில் தற்போதைய தேவையாகவும் உள்ளது. 2002 போர் நிறுத்த உடன்படிக்கையின் பின் ஏழு சுற்றுப் பேச்சுக்கள் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கான பேச்சுக்களாக அமைந்தன. ஆனால், இது போன்ற பேச்சுக்களே புதிய தென்னாபிரிக்கா உருவாக வழிசமைத்தது. ஆனால் சிறிலங்கா விவகாரத்தில் பல்வேறு தடைக்கற்கள் உள்ளன. கருணா குழு விவகாரம், டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவை. இவர்கள் தமிழ் மக்களிடையே மேலும் பிளவுகளை ஏற்படுத்த முனைகின்றனர். தற்போதைய நிலையில் நோர்வேயும், தென்னாபிரிக்காவும் இணைந்து அனுசரணை வழங்கி விடுதலைப் புலிகளையும், சிறிலங்கா ஆயுதப் படைகளையும் பேச்சுவார்த்தை மேசையில் அமர்த்தி - ஒரு சில சலுகைகளை விட்டுக் கொடுப்புகளை வழங்கி பேச்சுக்களில் ஈடுபடுத்தினால் சமாதானத் தீர்வொன்றை எட்டுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என்றே நான் கருதுகிறேன். கேள்வி: ஈழத்தமிழர் விவகாரத்தில் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் நிலைப்பாடு என்ன? ஈழப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டால் தென்னாப்பிரிக்கா அதனை அங்கீகரிக்கக்கூடிய நிலை உள்ளதா? பதில்: சமாதான வழிமுறை ஊடாக தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட வேண்டும் எனவே தற்போது தென்னாபிரிக்கா விரும்புகின்றது. அதற்கான முன்முயற்சியில் ஈடுபடுவதற்கான விருப்பைத் தெரிவித்திருக்கும் அரசு அதற்கு அனுசரணை வழங்குமாறு எம்மைக் கேட்டிருக்கின்றது. ஈழப்பிரகடனம் மேற்கொள்ளப்பட்டால் என்னாகும் எனக் கூறுவது கடினம். ஆனால், அத்தகைய நிலையொன்று உருவாவதற்குச் சில வேளைகளில் உதவுவக்கூடும். தென்னாபிரிக்காவும் இருண்ட இறந்தகாலம் ஒன்றைக் கொண்டுள்ளது. பிரதேசவாதம், சமஸ்டி என பல விடயங்கள் பரீட்சிக்கப்பட்டுள்ளன. தற்போது புதிய அரச தலைவராக தபோ எம்பகி இருக்கிறார் கட்சியின் தலைவராக யேக்கப் சுமா இருக்கிறார். புதிய சிந்தனை அவர்களிடையே உருவாகியிருக்கின்றது. கடந்த கால அனுபவம் அவர்களிடத்தே இருக்கின்றது. இந்நிலையில் போரிடும் சக்திகளைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வர அவர்களால் நிச்சயமாக முடியும். அதேவேளை, பொருத்தமான தருணத்தில் சரியான, தேவையான பங்களிப்பை தென்னாபிரிக்கா நல்கும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. கேள்வி: தென்னாபிரிக்காவில் சுமார் 4 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவருமே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு ஆதரவு வழங்குகின்றார்களா? பதில்: சிறிலங்காவில் தொடரும் மோதல்கள் தொடர்பாகத் தெரியப்படுத்தப்பட்டவர்கள் நிச்சயமாக எமக்கு ஆதரவு வழங்குகின்றார்கள். ஆனாலும் பலர் இதுபற்றி அறியாமல் இருக்கிறார்கள். பெரும்பாலான தமிழர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். ஆகவே, உலக விவகாரங்களை அவர்கள் அறிவார்கள். ஒரு சிறிய தீவில் பாரிய பிரச்சினை நடைபெறுவது அவர்களுக்குத் தெரியும். தென்னாபிரிக்கத் தமிழர்களில் இளையோரின் ஒத்துழைப்பு எமக்கு அதிகமாக உள்ளது. குறிப்பாக யோகன்னர்ஸ்பேர்க், டேர்பன் ஆகிய பகுதிகளில் "தமிழ் மிரர்" என்ற பத்திரிகையை நடாத்தி வருகின்றனர். ஊடகத்தைப் பொறுத்தவரை இளையோரின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அதேவேளை ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களை நடாத்தும் போது முன்னணியில் அணிவகுத்துச் செல்பவர்களாகவும் அவர்களே உள்ளனர். நீங்கள் குறிப்பிட்டதைப் போன்று தமிழ்பேசும் மக்கள் 4 லட்சம் பேர் வாழ்கிறோம். இவர்கள் மத்தியியே எமது நடவடிக்கைகளுக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அது தொடர்ந்தும் அதிகரிக்கும் என நம்புகிறோம். இதுவரை நாங்கள் முன்னெடுத்த அனைத்துச் செயற்பாடுகளும் வெற்றியாகவே முடிந்துள்ளன. எனினும், இன்னும் அதிகமானோரை அவற்றில் பங்குபற்றச் செய்யும் முயற்சியில் நாம் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளோம். இது தமிழருக்கு மாத்திரமான பிரச்சினையல்ல. இது மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இந்நிலையில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்க காங்கிரஸ், ஏனைய நிறுவனங்கள், மாணவர்கள் எனப் பல தரப்பாரும் எம்மோடு கரம் கோர்த்துள்ளார்கள். தென்னாபிரிக்க தேவாலய சபை கூட எமது செயற்பாடுகளில் பங்கெடுக்கின்றது. ஆபிரிக்க தேசிய காங்கிரசின் - இளைஞர் அணியும் எங்களோடு ஒத்துழைக்கின்றது. யேக்கப் சோமா அவர்களை தலைமைப் பதவிக்குக் கொண்டு வருவதில் முன்னின்றவர்கள் இவர்களே. கேள்வி: உலகின் பல நாடுகளிலும் தமிழர்கள் பரந்து வாழ்ந்தாலும் தமிழர்களுக்குச் சொந்தமான நாடொன்று உலகில் இல்லை. இன்று தென்னாபிரிக்காவில் தமிழர்கள் தமது அடையாளத்தை இழந்துவிடும் அபாயத்தில் இருக்கின்றனர். தமிழர்களுக்கு என ஒரு நாடு விரைவில் உருவாகா விட்டால் இத்தகைய நிலை அனைத்துத் தமிழர்களுக்குமே ஏற்படக்கூடிய ஏதுநிலை உள்ளது. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? பதில்: இது மிக முக்கியமான விடயம். உலகம் முழுவதும் 100 மில்லியன் தமிழர்கள் பரந்து வாழ்கின்றார்கள். மிகப் பழமையானதும் நன்கு வளர்ச்சியடைந்ததுமான மொழியான தமிழ் செம்மொழியாக உள்ளது. இது ஐக்கிய நாடுகள் சபையாலும் வேறு நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதேவேளை, எமது கொடியை தமிழர்களின் கொடியாக ஏற்றுக்கொள்ளுமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கொடி எமது இன அடையாளத்தை மட்டுமல்ல, எமது கலாசாரத் தொன்மையை, மொழியின் செழுமையைப் புலப்படுத்துவதாக உலகம் முழுதும் வலம் வர வேண்டும். தமிழர்களின் கொடியான புலிக்கொடி தொடர்பில் நாம் பெருமிதம் அடைகிறோம். ஐ.நா. சாசனம் கூட முற்றாக இடம்பெயரச் செய்யப்பட்ட ஒரு சமூகம் தமக்கு என ஒரு நிலத்தைப் பெறவும், கொடியை வைத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளமையை இந்த விடத்தில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். தூயவன் பாதம் துதிக்க வேண்டும் வீர சுதந்திரம் பெறுதல் வேண்டும் வீர வாழ்வை மக்கள் நடத்த வேண்டும். என்பது தமிழரின் நீண்டநாள் அபிலாசை. ஈழம் உதயமானால் உலகு எங்கும் பரந்து வாழும் ஒவ்வொரு உண்மையான தமிழனும் நிச்சயம் மகிழ்ச்சி அடைவான். ஐ.நா. சபையில் தமிழரின் கொடி பட்டொளி வீசிப் பறக்கும் நாளில் இந்த உலகக் குடும்பத்தில் நாமும் ஒருவர் என்ற பூரிப்பு உதயமாகும். உலக மாந்தருடன் சகோதர சகோதரிகளாக நாமும் கைகோர்த்து வாழலாம். கேள்வி: சுவிசிலிருந்து வெளிவரும் "நிலவரம்" இதழுக்கு நீங்கள் வழங்கிய நேர்காணலுக்கு நன்றி! சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன? பதில்: புலம்பெயர் வாழ் ஈழத்தமிழரைப் பொறுத்தவரை சுவிஸ் வாழ் மக்கள் மிகவும் காத்திரமான பங்களிப்பை நல்கி வருகின்றார்கள். சுவிஸ் என்றவுடன் நினைவுக்கு வருவது ஜெனீவா. ஜெனீவாப் பிரகடனத்தை விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அத்தகைய பெருமை மிக்க நாட்டில் வாழும் நீங்கள் பேறு பெற்றவர்கள். உங்கள் பணியை இடைவிடாது தொடருங்கள். உங்கள் இலட்சியம் எட்டப்படும் வரை தென்னாபிரிக்கத் தமிழர்களின் உதவி தொடர்ந்து கொண்டே இருக்கும். |
Friday, 25 April 2008
நோர்வேயும், தென்னாபிரிக்காவும் இணைந்து அமைதி முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்: தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரதிநிதி வீரபத்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment