அமெரிக்காவில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போலி ஆவணங்களைக் கொடுத்து விசா பெற முயன்றதாக இந்தி துணை நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தை சேர்ந்தவர் ஜெயா பட்டேல் (வயது 19). இவர் மும்பையில் தங்கியிருந்து இந்தி சினிமா படங்களில் நடித்து வருகிறார். ஒரு சில படங்களில் குரூப் டான்சராகவும் சில படங்களில் கதாநாயகியின் தோழி, கல்லூரி மாணவி உள்பட பல துணை வேடங்களில் நடித்துள்ளார்.
இந் நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்வதற்காக திட்டமிட்டார்.
இதற்காக அகமதாபாத்தை சேர்ந்த பெரோஸ் என்ற ஏஜெண்டை அணுகி விரைவாக பாஸ்போர்ட் கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கூறினார். ஏஜெண்டிடம் பாஸ்போர்ட், விசா, விமானடிக்கெட் செலவுகளுக்காக ரூ. 5 லட்சம் கொடுத்தார்.
ஏஜெண்ட் பெரோஸ் நடிகை ஜெயா பட்டேலுக்காக போலி பாஸ்போர்ட் தயார் செய்தார். அதில் ஹைதராபாத்தை சேர்ந்த ஷேக் மினாத் (19) என்று பட்டேலின் பெயரை மாற்றினார். 10ம் வகுப்பை வரை படித்து இருப்பதாகவும், விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டார்.
மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலையில் இருப்பதால் அமெரிக்காவுக்கு வீட்டு வேலைக்கு செல்வதாக போலி ஆவணங்களில் குறிப்பிட்டு இருந்தார்.
போலி ஆவணங்களுடன் ஜெயா பட்டேல் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.
விமான நிலையத்தில் குடியுரிமை சான்றிதழ்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். அப்போது அதில் குறிப்பிட்டு இருந்த தகவல்களுக்கும், ஜெயா பட்டேலின் உடை, பேச்சு மற்றும் செயல்பாடுகள் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதிகாரிகள் ஜெயா பட்டேலிடம் குறுக்கு விசாரணை நடத்தியபோது அவர் வைத்திருப்பது போலி பாஸ்போர்ட் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை மத்திய குற்றப்பிரிவு போலி பாஸ்போர்ட் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் உதவி கமிஷனர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய பிரகாசம் ஆகியோர் ஜெயாபட்டேலிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் உண்மையை ஒத்துக் கொண்டார் ஜெயா பட்டேல்.
ஆனால் தான் நடிகை என்பதை அவர் கடைசி வரை சொல்லவே இல்லை. போலீஸ் விசாரணையில் அவர் நடிகை என்பது தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் போலீஸார் அடைத்தனர்.
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்றது, போலி பாஸ்போர்ட் தயாரிக்க உடந்தையாக இருந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் ஜெயா பட்டேல் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவோ போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கி நடிகை புளோரா கைதானார். இந்த நிலையில் இப்போது இந்தி துணை நடிகை கைதாகியுள்ளார்.
Monday, 21 April 2008
விசா மோசடி: சென்னையில் இந்தி துணை நடிகை கைது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment