Monday, 7 April 2008

பிரான்ஸில் ஒலிம்பிக் ஜோதி அணைக்கப்பட்டது - சீனா அதிர்ச்சி(வீடியோ இணைப்பு)

Olympic torch
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தின்போது திபெத்திய ஆதரவாளர்களால் இருமுறை ஜோதி அணைக்கப்பட்டது. சீனாவுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் தொடங்கியுள்ளது. லண்டனில் நேற்று தொடர் ஓட்டம் நடந்தது. திபெத்தியர்களின் போராட்டத்தையொட்டி ஜோதிக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் கூட திபெத்தியர்களின் போராட்டம், ஜோதி பறிப்பு முயற்சி ஆகியவற்றால் தொடர் ஓட்டம் பரபரப்பாகவே இருந்தது.

வெம்ப்ளி ஸ்டேடியம் பகுதியில் இங்கிலாந்து படகுப் போட்டி வீரர் ஸ்டீவ் ரெட்கிரேவ் ஜோதியை ஏந்தியபடி தொடர் ஓட்டப் பேருந்தில் ஏறினார். அப்போது போராட்டக்கார்கள் பேருந்தில் ஏற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்புப் படையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். ஜோதி பின்னர் பலத்த பாதுகாப்புடன் தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டது.

இதேபோல ஒரு கட்டத்தில் ஜோதியைப் பறிக்க ஒரு போராட்டக்காரர் முயன்றார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தொலைவுக்கு தொடர் ஓட்டம் நடந்தது. வழியெங்கிலும் சீனாவுக்கு எதிராக திபெத்தியர்களும், பிறரும் போராட்டம் நடத்தியபடி இருந்தனர். மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

இங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகேயும் திபெத்தியர்கள் பெரும் திரளாக கூடி போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது.

முன்னதாக லண்டன் கொண்டு வரப்பட்ட ஒலிம்பிக் ஜோதியை, சீன தூதர் பூ யிங், சைனா டவுனில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார். சீன தூதரகத்தில் இந்த நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. ஆனால் அப்பகுதியில் திபெத்தியர்கள் கூடியிருந்ததால் வம்பே வேண்டாம் என்று சைனா டவுனுக்கு நிகழ்ச்சியை மாற்றிவிட்டனர். சைனாடவுனிலிருந்து ஜோதி தொடர் ஓட்டம் தொடங்கியது.

ஒலிம்பிக் ஜோதி ஓட்டம், திபெத்தியர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்களின் போராட்டம் காரணமாக பரபரப்பாகவே காணப்பட்டது.

பாரீஸில் இருமுறை அணைப்பு:

இந்த நிலையில் லண்டனில் தப்பிய ஒலிம்பிக் ஜோதிக்கு பிரான்ஸில் பெரும் ஆபத்து ஏற்பட்டது. திபெத்திய ஆதரவு போராட்டக்காரர்களால் ஒலிம்பிக் ஜோதி இருமுறை அணைக்கப்பட்டது.

பாரீஸ் நகரின் ஈபிள் கோபுரம் அருகே வீல்சேரில் வீரர் ஒருவர் ஜோதியை ஏந்தியபடி வந்தபோது திபெத்திய ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு ஜோதியை அணைத்தனர். மேலும் திபெத் வாழ்க என்றும் கோஷமிட்டனர்.

இதையடுத்து ஓட்டம் நிறுத்தப்பட்டு அருகில் இருந்த பேருந்துக்குக் கொண்டு ெசல்லப்பட்டு ஜோதி ஏற்றப்பட்டது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஓட்டம் தொடர்ந்தது.

பின்னர் செயின் ஆற்றங்கரையையொட்டியுள்ள சாலையில் ஜோதி ஓட்டம் நடந்தபோது எதிர்ப்பாளர்கள் திபெத்திய கொடியுடன் ஜோதியை முற்றுகையிட்டனர். இதில் மீண்டும் ஜோதி அணைந்தது.

இதையடுத்து மீண்டும் ஜோதியை ஏற்றினர். ஆனால் தொடர்ந்து ஓட்டத்ைத நடத்துவதா என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

ஜோதி ஓட்டத்தையொட்டி 3000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்கு இருந்தும் கூட திபெத்திய ஆதரவாளர்களால் இருமுறை ஜோதி அணைக்கப்பட்டது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக ஈபிள் கோபுரம் பகுதியிலிருந்து ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் தொடங்கியது. பல்வேறு வீரர்கள், வீராங்கனைகளில் இதில் பங்கெடுத்துக் கொண்டனர்.

No comments: