Thursday, 17 April 2008

மரண பயம் --ரூபவாஹினி மூன்று ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ளனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மரண அச்சுறுத்தல் காரணமாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முக்கிய மூன்று ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ளனர்.

தினமும் நடைபெற்றுவரும் தாக்குதல்கள் மற்றும் கழுத்தறுப்பு சம்பவங்களை எதிர்நோக்க முடியாமல் ரூபவாஹினியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களான தர்ஸன பனங்கல, வருணலேல்வல, மற்றும் சிந்தன அனுருத்த ஆகியோரே வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா தனது பாதாள உலக குழுவினருடன் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் பிரவேசித்து செய்தி பணிப்பாளரை, தாக்கிய சம்பவத்தை அடுத்து, அரசாங்க தொலைக்காட்சியான ரூபவாஹினியின் முக்கிய ஊழியர்கள் பலர் தாக்கப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

அத்துடன் சிலர் கூட்டுத்தாபன ஊழியர்களின் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தல்களை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிப்புறக்கணிப்புக்களை மேற்கொண்டு தமக்கு எதிராக அச்சுறுத்தல்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்தனர்.

முக்கிய பணிநிறுத்தம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டு சில தினங்களுக்கு பின்னர் அரசாங்கத்திற்கு ஆதரவான சிலர் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியில் அமர்த்தியதுடன் ஊழியர்களுக்கு கதவு அடைக்கப்பட்டது அன்றைய தினமே ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து ஊழியர்கள் தமது பகிஸ்கரிப்புகளை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிக்கு பின்னரும் ரூபவாஹினி ஊழியர்களை சிலர் பின்தொடர்வதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டன. காலி மற்றும் நிட்டம்புவ பிரதேசங்களை சேர்ந்த ஊழியர்கள் இவ்வாறான அனுபவங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்த நிலையில் தாம் பாரிய உயிர் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments: