தமிழக தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதியும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஏடிஜிபி உபாத்யாயாவும் தொலைபேசியில் பேசியது ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இந்த உரையாடல் டேப்பை ஜெயா டிவி ஒலி-ஒளிபரப்பியது. அதே போல இந்த உரையாடலை டெக்கன் கிரானிக்கிள் ஆங்கில பத்திரிக்கை வெளியிட்டது.
டேப்பில் இருப்பது என்ன?:
இந்த இரு அதிகாரிகளும் மாஜி முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் தொடர்பாக பேசியதைத் தான் இந்த உரையாடல் விளக்குகிறது. இதில் சட்ட விரோதமான பேச்சு ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோட நாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா திடீரென பங்குதாரராக சேர்ந்து கொண்டதும், திடீரென விலகிக் கொண்டதாகக் கூறியது குறித்தும் இரு அதிகாரிகளும் பேசியுள்ளனர். கோடநாடு எஸ்டேட் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில் அது தொடர்பாக அரசின் சார்பில் எப்படி வாதங்களை எடுத்து வைப்பது, என்னென்ன டாகுமெண்டுகளை சேகரிப்பது என்று இருவரும் பேசியுள்ளனர்.
ஜெயாவுக்கு ரூ. 3.8 கோடி பணம் ஏது?
மேலும் எஸ்டேட்டில் பங்குதாரார திடீரென சேரவும் விலகவும் ஜெயலலிதாவுக்கு எங்கிருந்து ரூ. 3.8 கோடி வந்தது, அதற்கு கணக்கு இருக்கிறதா, கணக்கு இருந்தால் அதை வருமான வரி தாக்கலில் காட்டியுள்ளாரா என்று தகவல்கள் சேகரிக்குமாறு உபாத்யாயாவுக்கு திரிபாதி ஆலோசனை தருவது தான் இந்த டேப் உரையாடலின் முக்கிய பகுதி.
ஜெயலலிதாவின் வருமான வரிக் கணக்கு விவரத்தை வருமான வரித்துறையிடம் இருந்து பெற்று அதில் இந்த ரூ. 3.8 கோடிக்கு கணக்கு இருக்கிறதா என்று பார்க்கச் சொல்கிறார் திரிபாதி.
ஒரு தலைமைச் செயலாளர், அரசின் வழக்குக்குத் தேவையான விவரங்களை சேகரிக்க தனக்குக் கீழ் உள்ள லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிக்கு எப்படி ஆலோசனை தருவாரோ அப்படித்தான் உள்ளது இந்த டேப்.
ஜெயலலிதாவை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும், எப்படியாவது அவருக்கு எதிராக டாகுமெண்ட்களை தயார் செய்ய வேண்டும் என்றெல்லாம் அந்த உரையாடல் தரம் தாழ்ந்ததாக இல்லை. திரிபாதி மிக டீசண்டாக சேகரிக்க வேண்டிய தகவல்களை சொல்ல, சரி சார்.. ஓகே சார் என்பதோடு உபாத்யாயா நிறுத்திக் கொள்கிறார்.
அவ்வப்போது தனது சந்தேகங்களையும் உபாத்யாயா எடுத்துச் சொல்ல அதற்கும் மிக நாகரீகமாக விளக்கம் தருகிறார் தலைமைச் செயலாளர். இதைத் தான் மாபெரும் கான்ஸ்பிரஸி திட்டம் தீட்டியது போல சில மீடியாக்கள் சித்தரித்து வருகின்றன.
ஜெயலலிதாவுக்கு ரூ. 4 கோடி ஏது? என்பது தான் விஷயமே. ஆனால், அந்த கோர் விஷயத்தை அப்படியே விட்டுவிட்டு இருவரும் பேசியதை உளவுத் துறையே ஒட்டுக் கேட்டது போலவும், அதே போல பிறரது பேச்சுகளும் ஒட்டு கேட்கப்படுவதாகவும் செய்தி பரபரப்பப்பட்டு வருகிறது.
லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் டேப் ஆன உரையாடல்:
இதற்கிடையே இந்த ஒட்டு கேட்பு நடந்தது எங்கே என்பது தொடர்பாக இது குறித்து விசாரித்து வரும் க்யூ பிராஞ்ச் தனிப் படை போலீசாருக்கு லீட் கிடைத்துவிட்டது.
`கியூ' பிராஞ்ச் ஐ.ஜி. சங்கர் ஜிவால் தலைமையிலான படையினர் இந்த ஒட்டு கேட்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களது `டேப்' உரையாடலை இந்தப் படையினர் உன்னிப்பாக கேட்டபோது ஒரு உண்மை புலப்பட்டது. லஞ்ச ஒழிப்பு இயக்குனர் உபாத்யாயாவின் பேச்சு மிகத் தெளிவாகவும், தலைமைச் செயலாளரின் பேச்சு தெளிவற்ற நிலையில் தூரத்தில் இருந்து பேசுவது போலவும் உள்ளது.
இதனால் லஞ்ச ஒழிப்பு இயக்குனர் அலுவலகத்தில்தான் இந்த உரையாடல் பதிவானதாக சந்தேகம் எழுந்தது.
இதையடுத்தே நேற்று முன்தினம் இரவு சென்னை அடையாறு கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு இயக்குனர் அலுவலகத்தில் க்யூ பிராஞ்ச் படையினர் சோதனையிட்டனர்.
நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பித்த சோதனை அதிகாலை 4 மணி வரை நீடித்தது. இந்தச் சோதனையில் டெலிபோன் பேச்சு லஞ்ச ஒழிப்பு இயக்குனர் அலுவலகத்தில்தான் பதிவானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பதிவு செய்தவர் உபாத்யாயா?:
லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியான உபாத்தியாயா மற்றவர்களுடன் தொலைபேசியில் பேசும் பேச்சை டேப் செய்வது வழக்கம். துறைரீதியான பேச்சுகள், வழக்குகள் தொடர்பான முக்கிய பேச்சுக்களை அவர் டேப் செய்யது வாடிக்கை. இதை க்யூ பிராஞ்சிடமும் உபாத்யாயா ஒப்புக் கொண்டுள்ளார்.
வழக்குகள் தொடர்பாக தனக்கு மீண்டும் டீடெய்ல்ஸ் தேவைப்பட்டால் அதைப் பெற போன் உரையாடல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் முறையை கடைபிடித்து வந்துள்ளார் உபாத்யாயா. இது முழுக்க முழுக்க தனது பணிக்காகவே செய்து வந்துள்ளார்.
ஆனால், அவர் தலைமைச் செயலாளருடன் அவ்வாறு பேசி டேப் செய்த உரையாடலை அவருக்கே தெரியாமல் யாரோ சி.டியில் பதிவு செய்து பத்திரிகைகளுக்கு கொடுத்துள்ளனர். இதன்மூலம் உபாத்யாயாவையும் சிக்கலில் மாட்டிவிட முயற்சி நடந்துள்ளது.
உளவுத்துறைக்கு தொடர்பில்லை:
க்யூ பிராஞ்ச் விசாரணையின் இந்த டேப் விவகாரத்தில் உளவுப் பிரிவு போலீசாருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
உபாத்யாயாவின் கம்யூட்டரில் இருந்து இந்த உரையாடலை திருட்டுத்தனமான டேப் செய்து வெளியில் கசிய விட்டது யார் என்பதே இப்போதுள்ள கேள்வி.
இதற்கான விடையைத் தேடும் பணியில் அரசு நியமித்துள்ள விசாரணை கமிஷன் இறங்கும்.
அரசு, தலைமைச் செயலாளர், உளவுத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை என அனைவர் மீதும் ஒரே நேரத்தில் சேற்றை வாரியிறைக்கும் முயற்சியாகத் தான் இந்த டேப் லீக் செய்யப்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது.
No comments:
Post a Comment