Thursday, 17 April 2008

'காசி'கள் ஒளிபெற ஆயிரம் ரசிகர்களுடன் விக்ரம் கண்தானம்

காசி' படத்தில் கண் பார்வையற்றவராக வந்து மனதைக் கொள்ளையடித்த நடிகர் விக்ரம் தனது பிறந்தநாளையோட்டி, ரசிகர்கள் ஆயிரம் பேருடன் இணைந்து இன்று கண்தானம் செய்தார்.

விக்ரமும், அவரது ரசிகர்கள் ஆயிரம் பேரும் தங்களது கண்தான பத்திரங்களை சென்னை - ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்களிடம் அளித்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கண் பார்வையற்றவர்களின் துயரங்களை 'காசி' படத்தில் நடித்தபோது உணர்ந்தேன். தானத்தில் சிறந்த தானம் கண்தானம். சமுதாயம் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. அந்தச் சமுதாயத்திற்கு ஏதாவது திருப்பி கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால், கண்தானம் செய்வதென முடிவு எடுத்தபோது, என் ரசிகர்களும் கண் தானம் செய்ய முன் வந்தனர்" என்று விவரித்தார்.

விரைவில் கண் வங்கி ஆரம்பித்து அதன் மூலம் ரசிகர்களை கண் தானம் செய்ய வழிவகை செய்யப்படும் என்ற அவர், "நான் புதிதாக தொடங்கியுள்ள வெப்சைட் (சீயான்விக்ரம்.நெட்) மூலம் ரசிகர்கள் என்னுடன் நேரடி தொடர்பு வைத்து கொள்ளலாம். சிறந்த கடிதங்கள் எழுதுவோர், குறிப்பிட்ட நாளில் குடும்பத்தோடு என்னைச் சந்திக்கலாம்' என்றார்.

முன்னதாக, இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், நடிக-நடிகையர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை விக்ரமிடம் தெரிவித்தனர்.

நிழல் உலகத்தில் மட்டுமே அக்கறை செலுத்தாமல், நிஜத்திலும் அக்கறையுடன் செயல்படும் சீயான் பாராட்டுக்குரியவரே!

No comments: