Wednesday, 9 April 2008

தென்கொரிய விண்வெளி வீராங்கனையுடன் ரஷிய விண்கலத்தை சுமந்துகொண்டு சோயுஸ் ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

தென்கொரிய விண்வெளி வீராங்கனையுடன் ரஷிய விண்கலத்தை சுமந்துகொண்டு சோயுஸ் ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

முதல் தென்கொரிய பெண்

ரஷியாவின் சோயுஸ் விண்கலம் டிஎம்ஏ-12 கஜக்ஸ்தான் நாட்டில் உள்ள பைக்கானூர் விண்வெளி நிலையத்தில் இருந்து நேற்று பகல் 11.16 மணிக்கு புறப்பட்டது. இதில் தென்கொரியாவைச்சேர்ந்த யி சோ யியான் என்ற 29 வயது பெண் பயணம் செய்கிறார்.

அவருடன் ரஷிய விண்வெளி வீரர்கள் ஒலெக் கோனோனென்கோ, செர்ஜி வோல்கோவ் ஆகியோரும் செல்கிறார்கள். இவர்களில் யி சோ யியான் தான் தென்கொரியாவில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்டு உள்ள முதல் பெண் ஆவார்.

ரூ.70 கோடி செலவில்

உயிரி பொறியாளரான இவர், 36 ஆயிரம் விண்ணப்பதார்களிடம் இருந்து மாற்று விண்வெளி வீராங்கனையாக தான் தேர்ந்து எடுக்கப்பட்டார். முதலிடத்தில் தேர்வு பெற்றவர் 31 வயதான கோ சான் என்பவர் ஆவார். அவர் விண்வெளி நிலைய விதிமுறைகளை மீறிவிட்டதாக ரஷிய அதிகாரிகள் புகார் கூறியதால் அவருக்கு பதிலாக யி சோ யியான் தேர்வு பெற்றார். அவரை விண்வெளியில் அனுப்புவதற்கு அந்த நாட்டு அரசாங்கத்துக்கு 70 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

அவரை விண்வெளிக்கு அனுப்பி வைப்பதற்காக தென்கொரிய அதிபரும் மற்றும் பல தென்கொரியர்களும் கஜகஸ்தான் நாட்டுக்கு வந்து இருந்தனர். விண்கலத்தில் ஏறுவதற்கு முன்பு தென்கொரியப்பெண் பெருவிரலை உயர்த்திக்காட்டி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். சந்தோஷமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

19-ந்தேதி திரும்புகிறார்

முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, வடகொரியாவும், தென்கொரியாவும் இணைந்து ஒரே கொரிய நாடு உருவாகும் நாளை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறினார். ஒரு கொரிய பெண் விண்வெளிக்கு பயணம் செய்வது வடகொரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.

அவர் சர்வசேத விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி ஆராய்ச்சிகள் மேற்கொள்வார். 10 நாட்களுக்கு பிறகு 19-ந்தேதி அவர் பூமிக்கு திரும்புகிறார்.

9-வது ஆசியர்

விண்வெளிக்கு இதற்கு முன்பு 8 ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் சென்று இருக்கிறார்கள். இப்போது செல்லும் யி சோ யியான் 9-வது ஆசியர் ஆவார்.

முதன் முதலில் 1980-ம் ஆண்டு வியட்னாம் நாட்டை சேர்ந்த பாம் டுவான் என்பவர் ரஷிய சோயுஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டார். அதன்பிறகு மங்கோலியா, ஆப்கானிஸ்தான், ஜப்பான், இந்தியா, கஜகஸ்தான், சீனா, மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் விண்வெளிக்கு சென்று திரும்பினார்கள்.

No comments: