ஜனதா விமுக்தி பெரமுனை அல்லது ஜே.வீ.பீ என்று அழைக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி உத்தியோகபூர்வமாக இரண்டாக பிளவடைந்துள்ளது. இலங்கை அரசியலில் மூன்றாவது பெரும் சக்த்தி எனவும், எதிர்கால ஆளும் கட்சி எனவும் பரவலாக சிலாகிக்கப்பட்ட ஜே.வீ.பீயின் நீண்டகால உள் முரண்பாடு இப்போ வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இடது சாரிக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு கியூபா, பொலீவியப் புரட்சிகளின் நாயகர்களில் ஒருவரான சேகுவராவை தனது மாதிரியாக் கொண்டு உருவாகிய தலைவர் றோகணவிஜயவீர. இவரினால் உருவாக்கப்பட்ட ஜே.வீ.பீ 1971ல் ஒரு புரட்சியையும் பின் 1988-89 1990களில் மற்றுமொரு ஆயுதப் புரட்சியையும் செய்து தோல்வியைத் தழுவிக்கொண்டது. இரண்டு புரட்சிகளும்;, ஆயிரக்கணக்கான இளைஞர்களை பலிகொண்டது. 71ல் 25 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக அப்போதைய தகவல்கள் தெரிவித்திருந்தன.
1988,89,90களில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக்காலக்கட்டத்தில் அரச படைகள் ஒருபுறம் ஜே.வீ.பீ மறுபுறம் என பரஸ்பரம் தமது எதிரிகள் என்ற கோதாவில் இளைஞர்கள், யுவதிகள், பெரியவர்கள், புத்திஜீவிகள் என எல்லாத் தரப்பினரையும் போட்டுத் தள்ளினார்கள். ஆறுகள்,குளங்கள், கால்வாய்கள், கடல் நீர்பகுதிகள் என ஒவ்வொரு நாளும் காலையில் மக்கள் சடலங்களைக் கண்டே நித்திரை விழிப்பார்கள் என தென்பகுதி நன்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஏன் இந்தக்காலத்தில் ஜே.வீ.பீ தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரித்திருந்ததுடன், தமிழ் இயக்கங்களுடன் மிக நெருங்கிய உறவையும் பேணி இருந்தன. புளொட் இயக்கத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்த ஜே.வீ.பீ தனது 120ற்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அவ்வியக்கத்தின் மூலம் ஆயுதப் பயிற்சியை வழங்கியிருந்தது. இதே போன்று ஈ.பீ.ஆர்,எல்.எவ் இயக்கத்துடனும் நல்ல உறவைக் கொண்டிருந்தது. 1988,89,90களில் தெற்கில் தேடப்பட்ட பல ஜே.வீ.பீ உறுப்பினர்கள், முக்கியஸ்த்தர்களுக்கு வடபகுதியே புகளிடமாக இருந்தது. பல உறுப்பினர்கள் புளொட், மற்றும் ஈ.பீ.ஆர்,எல்.எவ் முகாம்களில் பாதுகாக்கப்பட்டனர். பலர் இந்தியாவுக்கு வள்ளங்கள் மூலம் அனுப்பப்பட்டு சிலர் அங்கிருந்து வெளிநாடுகளுக்கும் சென்று விட்டனர்;. இவையாவும் தற்போது ஜே.வீ.பீயின் மறக்கப்பட்ட அத்தியாயங்களாகிவிட்டன.
இந்தப் புரட்சிகளுக்கு தலைமை தாங்கிய றோகண விஜவீர ஜனாதிபதி பிரேமதாஸா, அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் றஞ்சன் விஜயரத்ன ஆகியோரின் கூடு நடவடிக்கையில் நாவலப்பிட்டி வலப்பனையில் மறைவிடம் ஒன்றில் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அதுவும் உள்ளிருந்தவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டதாக சில தகவல்கள் தெரிவித்திருந்தன. இந்த நடவடிக்கையுடன் அகட்சியின் உயர் முக்கியஸ்த்தர்கள் பலர் கொல்லப்பட்டனர். பலர் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர, வெளிநாடுகளுக்டகும் சென்றனர். இன்னும் பலர் தலைமறைவாகினர். ஏராளமானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். எப்படி இருந்தபோதும் கட்சியின் மூன்றாவது அல்லது நாலாவது நிலையில் இருந்த சோமவன்ச அமரசிங்க நாட்டில் இருந்து தப்பி இந்தியா சென்று அங்கிருந்து லண்டன் சென்று அரசியல் தஞ்சம் கோரி தன்னைக் காத்துக்கொண்டார்.
பிரேமதாஸாவின் மறைவின் பின் படிப்படியாக ஜனநாயக அரசியலில் தன்னைப் புகுத்திய ஜே.வீ.பீ அனைத்து தேர்தல்களிலும் களத்தில் இறங்கியது. 13 ஆவது திருத்தத்தை எதிர்த்து, மாகாணசபையை நிராகரித்து, இந்திய பொருட்களை பகிஸ்கரித்த ஜே.வீ.பீ மாகாணசபைகளிலும் போட்டியிட்டு எதிர்கட்சி வரிசையில் முக்கிய கட்சியாக உருவெடுத்தது. ஆரம்பத்தில் 1,பின் 2, பின் 3 என இருந்த நாடாளுமன்ற அங்கத்துவம் 2004ஆம் ஆண்டு தேர்தலுடன் 38 ஆசனங்களுடன், பாரிய ஒருபாச்சலாக ஜே.வீ.பீ உருவெடுத்தது. காரணம் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியாகவும், ஜனாதிபதியாகவும் இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஜேவீபீயை இணைத்துக் கொண்டார். அன்றைய காலக்கட்டத்தில் சுதந்திரக் கட்சியிலும் சந்திரிக்காவிடத்திலும் செல்வாக்கு மிக்கவராக இருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கூட்டமைப்பில் ஜே.வீ.பீயைக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றினார். எனினும் அப்போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஸ ஜே.வீ.பீயை கூட்டமைப்பில் கொண்டு வருவதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு இருந்தார். ஒரு கட்டத்தில் கட்சியை விட்டு விலகும் அளவுக்கு முரண்பாடு முற்றி இருந்தது. இந்தக் கூட்டிணைவால் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற பலத்துடன், எழுச்சியுடன் அஞ்சாதவாசம் புரிந்த சோமவன்ஸ நாடு திரும்பி முழு நேர கட்சி நடவடிக்கைகளில் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தினார்.
காலம் செல்ல செல்ல கட்சிக்குள் சிறுசிறு பிரச்சனைகள் ஆரம்பமாகின. முதலில், கடசியின் உயர்மட்ட தலைவராக இருந்த நந்தன குணத்திலக விலகியதுடன் நாடாளுமன்ற எண்ணிக்கை 37 ஆக குறைவடைந்தது. இதன் பின் இக்கட்சியின் முக்கியஸ்த்தரான கந்தும் நெத்தி கட்சியை விட்டு விலகிச் செல்ல முற்பட்டதாக, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக ஊடகங்களில் தகவல்கள் கசிந்தன. எனினும் அது பின் மூடி மறைக்கப்பட்டது. ஆனால் விமலின் தலைமையிலான பிரிவினரின் விலகலுடன், ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற பலம் இப்போ மேலும் 11 ஆல் வீழ்ச்சி கண்டு 27 ஆக குறைந்திருக்கிறது. இவ்வாறான முரண்பாடுகளிடையே, மற்றுமொரு முக்கிய சம்பவம் ஒன்று ஏற்கனவே வெளியில் கசிந்தாலும் உடனடியாக முடி மறைக்கப்பட்டு; பலருக்கும்; தெரியாது போன விடயம் ஒன்றும் உள்ளது. அதவாது கட்சியின் முக்கியமான முடிவுகளை எடுப்பவராகவும், கட்சியை வளி நடத்துபவராகவும், மக்கள் முன் தோன்றாத மிக முக்கிய உயர் தலைவர் ஒரு தமிழர்( ராஜா என அழைக்கப்படுபவர் பெயர் ஞாபகம் வரவில்லை) புலநாய்வுப் பிரிவின்; கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட போது இரகசியமாக நாட்டை விட்டு வெளியில் அனுப்ப வேண்டிய நிலை ஜே.வீ.பீக்கு ஏற்பட்டது. இதற்கு காரணம் விமல் வீரவன்ச என பலராலும் குற்றம்சாட்டப்பட்டது. காரணம் விமலே இந்த தலைவரின் முக்கியத்துவம் குறித்து அரசாங்கத்திற்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கட்டுக்கோப்பாண கட்சி, இரும்புக் கட்சி, இடதுசாரி சிந்தனைகளைக் கொண்ட மாற்றுக் கட்சி, பிராந்திய, சர்வதேச மேலாதிக்கங்களுக்கு எதிரான கட்சி, பதவி,பணம் என்பவற்றிற்கு அப்பால் மக்கள் பணி என பல நாமங்களைத் தனதாக்கிக் கொண்ட கட்சியின் உள்வீட்டுப் பிரச்சனை, இப்போ சந்திக்கு வந்திருக்கிறது.
இடதுசாரிச் சிந்தனை என வெளியில் பிரச்சாரப் படுத்தி கட்சியை பெரிதாகக் காட்ட முற்பட்ட போதும் பாராளுமன்ற, கதிரைச் சுகம், அமைச்சுப் பொறுப்புக்களால் ஏற்பட்ட சுகபோகம், சமூக அந்தஸ்த்து என்பன ஜே.வீ.பீயையும் விட்டு வைக்கவில்லை. நந்தன குணத்திலக, விமல் வீரவன்ச, ரில்வின்சில்வா உள்ளிட்ட பலர் தனிப்பட்ட வியாபாரங்களில் முதலீடு செய்து செல்வத்தைப் பெருக்கலாயினர். இவை அரசாங்கத்தின் துரும்புச் சீட்டாக மாற்றம் பெற்றன. ஏன் ஜே.வீ.பீயின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் சகோதரி சட்டத்திற்கு புறம்பாக நடத்திவந்த விலைமாதர் விடுதியைக் கூட அரசாங்கம் வெளிப்படுத்தியது. எவ்வாறு ஐக்கியதேசியக் கட்சியின் 17 பேர் மீது சுமத்தப்பட்ட கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் தனக்கு சார்பாக பயன்படுத்தி, அவர்களின் ஊழல் தொடர்பான கோவைகள் மூலம் அரச பக்கம் இழுத்துக் கொண்டதோ, ஐக்கியதேசியக் கட்சியை உடைத்ததோ, அதே வாய்பாடு ஜே.வீபீக்கும் பிரயோகிக்கப்பட்டுள்ளது. விமல்வீரவன்சவின் மனைவியின் பெயரில் உள்ள வியாபாரங்கள் தொடர்பான கோவைகள் அரசாங்கத்தின்; கைகளுக்கு சென்றுள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இவரது பெயரில் இருந்த மாத்தறை வீட்டில் திருட்டு மின்சாரம் பெறப்பட்டு இருந்ததாக மின்சார சபை நிரூபித்திருந்தது. இந்த வீட்டில் இவரின் சகோதரி வசித்து வந்தார். இதேபோல் விமலின் தனிப்பட்ட வாழ்வு குறித்தும் ஆங்கில ஊடகம் ஒன்று விலாவாரியாக செய்தி வெளியிட்டிருந்தது. நாட்டின் வளங்கள் சுரண்டப்படுவதாக கூறும், ஒழுக்கம் பற்றிக் கூறும் ஜே.வீ.பீ உறுப்பினர்களின் பல நடவடிக்கைகள் அவ்வப்போது அரசாங்கம் அம்பலப்படுத்தி வந்தது. இவை ஏற்படுத்திய சங்கடம் விரும்பியோ விரும்பாமலோ விமல் அரசாங்கத்தை நியாயப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு உள்ளாகிவிட்டதாக பரவலாக பேசப்படும் விடயமாகிவிட்டது. இந்த நிலையில் இனி அவரோ அல்லது ஜே.வீ.பீயில் இருக்கும் இன்னும் பலரோ வலதுசாரி சந்தர்ப்பவாதப் போக்கில் இருந்து மீழுவது முடியாத காரியமாகத்தான் போகிறது.
மறுபுறம் கொள்கை, அரசியல் சித்தாந்தம் எனப் பேசுகின்ற ஜே.வீ.பீ வெறுமனே புலி எதிர்ப்பு கோஸத்தினூடே தனது அரசியலை முன்கொண்டு செல்கிறது. குறிப்பாக இலங்கைத் தேசம், ஒற்றை ஆட்சி, பிரிக்கப்படாத ஒரே நாடு, பயங்கரவாதம் என்ற அரசியல் வாசகங்களினூடு எத்தனை காலம்தான் சவாரி செய்ய முடியும்? இந்தக் கோஸங்களை தனது பேச்சுத் திறமையுடன் முழங்கியதனால் மட்டும் தான் இன்று சிங்கள மக்களிடம் விமல் நாயகனாக கோலேச்சுகிறார்;. மாறாக அடிமட்ட மக்களின் அடுத்த நேர வாழ்வு குறித்த அக்கறையிலோ, அல்லது அதற்காக உதட்டளவில் கூறும் வர்க்கப் புரட்சி பற்றிய வேலைத்திட்டத்திலோ சிங்கள மக்கள் இன்று ஜே.வீ.பீயை ஆதரிக்கவில்லை. இது அவர்களுக்கே தெரியும் மீண்டும் ஒரு பொதுத் தேர்தல் வந்தால் 10ற்கும் 12ற்கும் இடைப்பட்ட நாடாளுமன்ற அங்கத்துவத்தை மட்டுமே பெறமுடியும் என சில முக்கியஸ்த்தர்கள் கூறியும் இருக்கிறார்கள்.
ஜே.வீ.பீயின் சந்தர்ப்பவாதம் தனியே கொள்கையளவில் மட்டும் அல்ல செயற்பாட்டிலும் கூட என்பதனை முக்கிய உதாரணத்தின் மூலம் காட்டமுடியும். இன்று விடுதலைப் புலிகள் குறித்து மிகக் கடுமையான முழக்கங்களை, விமர்சனங்களை முன்வைக்கும் ஜே.வீ.பீ 1987-1992 காலப்பகுயில் மேற்கொண்ட கொலைகள் குறித்த சுயவிமர்சனத்தை எந்த இடத்திலும் முன்வைக்கவில்லை. ஆயுதப் போராட்டத்தை கைவிட்டதாகக் கூறும் ஜே.வீ.பீ புலிகளிடம் ஆயுதங்களைக் களையவேண்டும் எனக் கூறும் ஜே.வீ.பீ இன்று வரை தனது ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை. அண்மையில் கூட றோகண விஜயவீரவின் பண்டாரவளை வீட்டில் இருந்த ஒரு மர்மப்பெட்டி இனம்தெரியாதவர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்த, ஜே.வீ.பி சார்பு படைச் சிப்பாயே இந்திய பிரதமர் ரஜீவ்காந்தியை தாக்க முற்பட்டு மயிரிளையில் உயிர் தப்பினார் என அன்று இந்திய ஊடகங்கள் கூட செய்தி வெளியிட்டன. அன்று இலக்குத் தவறாது தாக்கப்பட்டு இருந்தால், புலிகளுக்கு முன்னதாகவே, ராஜீவை இலங்கையில் கொலை செய்த புகழ் ஜே.வீ.பீக்கு அல்லது சிங்கள மக்களுக்கு சென்றிருக்கும்.
அரசாங்க புலநாய்வுத்துறை அறிக்கையின் படி ஜே.வீ.பீ 1987-1992 காலப்பகுயில் மேற்கொண்ட கொலைகள்,சொத்தழிப்புகள் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
Killings by the JVP during 1987-1992 over the
13th Amendment
Buddhist monks - 30
Catholic priests - 02
Police officers - 342
Army personnel - 209
Public servants - 487
School principals - 50
Lawyers - 10
Engineers - 03
University professors - 02
Media personnel - 04
Doctors - 04
Family members of army personnel - 69
Family members of police personnel - 93
Gramarakshakas - 98
Estate superintendents - 18
Suspected as government informants - 260
UNP supporters - 1,735
SLFP supporters - 102
United Socialist Front supporters - 64
Politicians - 06
Reputed business persons - 06
Elected representatives - 64
Trade union leaders - 27
Other political killings - 2,892
Total - 6,577
(Source: Government Intelligence Reports)
Property destroyed by the JVP
CTB buses - 613
CTB depots - 16
Trains - 16
Railway stations - 24
Tea factories - 73
Grama Niladhari offices - 294
District Secretariat offices - 79
Post offices - 680
Agriculture service centres - 103
Schools - 08
Co-operative shops - 16
(Source: Government Intelligence Reports)
விடுதலைப் புலிகள் குறித்து ஏராளமான விமர்சனங்கள் உண்டு அவை பேசப்பட வேண்டியவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் சிறுவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள், வைத்தியர்கள், அரசியல்வாதிகள்,அரச அதிகாரிகள், பாதுகாப்பு படையினரின் குடும்ப உறவினர்கள், பொறியியலாளர்கள், பாதுகாப்பு தரப்பினர், கட்சிகளின் ஆதரளவாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள், உறுப்பினர்கள், மலையக தோட்டங்களின் உயரதிகாரிகள், அரசாங்க புலநாய்வாரள்கள் என மொத்தம் 6577 பேரின் உயிர்களை ஜே.வீ.பீ பலி எடுத்ததாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊத்தியோகப்பற்றற்ற வகையில் தொகை அதிகம் எனக் கூறப்படுகிறது. இதனை விட மில்லியன் கணக்கான ரூபாய் சொத்துக்களை அழித்துள்ளனர். இதுவரை எந்த இடத்திலுமே தமது நடவடிக்கைகள் குறித்த சுய விளக்கத்தைத் தானும் வழங்காத ஜே.வீ.பீ தமிழ் மக்களின் போராட்டத்தைப் பற்றிப் பெசுவதற்கு அருகதையற்றது. காலம் காலமாக மக்களை ஏமாற்றும் இவரகளின் சந்தர்ப்பவாதம் இப்போ சந்திக்கு வந்துள்ளன. ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற மோகத்துடன், ஆரம்பித்த உட்கட்சி மோதல்களால் எப்போதோ எதிர்பார்க்கப்பட்ட பிளவு, இப்போ உறுதியாகிவிட்டது. இருதரப்பும் பரஸ்பரம் ஊடகவியலாளர் மகாநாட்டில் குற்றச்சாட்டுக்களை அடுக்கி உள்ளனர். மொத்தத்தில் இனி நடக்கப்போகும் இருசாராரின் வாதப் பிரதிவாதங்கள் இன்னும் பல அறியப்படாத விடயங்களை சந்திக்கு கொண்டுவரப்போகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.
Wednesday, 9 April 2008
சந்திக்கு வந்துள்ள, ஜே.வீ.பீயின் சந்தர்ப்பவாதம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment