Tuesday, 22 April 2008

”யானைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லீம்களின் உரிமைகளை பிள்ளையானுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் செயலாகும்” - பா உ ஹிஸ்புல்லாஹ்

நிச்ச யமாக நீங்கள் யானைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் உங்களது உரிமைகளை பிள்ளையானுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் செயலாகும். யானைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பிள்ளையானின் வெற்றியை உறுதி செய்யும் வாக்குகளாகும். என்று ஓட்டமாவடியில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது பா உ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

1988ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் முதலமைச்சராக இருந்த வரதராஜபெருமாள் முஸ்லிம்களுக்கு செய்த அட்டூழியங்கள், அநியாயங்கள் அநேகம். அவர் மாகாண சபைக்கான தனியான பொலிஸ் பிரிவை நிறுவி முஸ்லிம்களை கொன்று குவிததார். குறிப்பாக இராணுவப் படையிலிருந்த முஸ்லிம் இளைஞர்கள் தேர்ந்தெடுத்து கொன்று குவித்தார். வரதராஜபெருமாளின் நிர்வாகத்தின் கீழ் முஸ்லிம்கள் ஒரு நரக வாழ்க்கையே வாழ நேரிட்டது. இந்த நிலை மீண்டும் வரவேண்டுமா? இந்த நிலையை கொண்டு வருவதற்காகத்தான் தலைவர் ரவூப் ஹக்கீம் செயற்படுகிறார் என்றும் அவர் கூறினார்.

அங்கு மேலும் உரையாற்றுகையில் மே 11ஆம் திகதி கிழக்கில் ஒரு முஸ்லிம் முதலமைச்சர் தெரிவானால் புலிகளின் தாகமான வடகிழக்கு தாயகம் உடைத்தெறியப்படும் என துணை அமைச்சர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம். எனவே வடகிழக்கு தமிழர்களின் தாயகமாகவே புலிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் கிழக்கிலிருக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்த வகையிலே பிள்ளையானின் நடவடிக்கைகளும் அமையும்.

எனவே ஒரு முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்று நிம்மதியாக நியாயமாக சுதந்திரமாக வாழ வேண்டுமானால் எங்கள் பின் ஒன்றுபடுங்கள். எங்களுக்கு தனிநாடு தேவையில்லை. ஹக்கீம் சொல்வதுபோல் அரசாங்கத்தை முடக்க உருவாக்கப்பட்ட கட்சியல்ல முஸ்லிம் காங்கிரஸ். அரசாங்கத்தோடு இணைந்து தமக்கான உரிமைகளைப் பெற்று வாழ்வது தான் எங்களது கொள்கை.

இதைத்தான் மறைந்த தலைவர் மர்ஹம் அஸ்ரப் எங்களுக்கு காட்டித்தந்தார். பிரேமதாஸவுடன் கூட்டுச் சேர்ந்தார். அதேபோல சந்திரிக்காவுடனும் கூட்டுச் சேர்ந்தார். இவ்வாறு அமையும் ஆட்சியில் பங்காளியாக இருந்த எமது சமூகத்துக்கு அரும்பெரும் சேவைகளை செய்தார். அதேபோல உரிமைகளையும் பெற்றார்.

ஆனால் எமது தலைவரின் கொள்கைகளை சின்னாபின்னப்படுத்தும் செயற்பாடுகளில் ஹக்கீம் செயற்படுகிறார். இவ்வாறுதான் அவரால் செயற்பட முடியும். அவரின் வலைப்பின்னல் தற்போது அப்படித்தான் இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக முஸ்லிம் சமூகத்தின்பால் ஹக்கீமுக்கு உடன்பாடில்லை. முதலமைச்சர் பெறும் எண்ணம் ஹக்கீமுக்கு இல்லை. அதனைத் தடுக்கும் வகையில்தான் ஹக்கீம் செயற்படுகிறார் எனக் குறிப்பிட்டார் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்.

No comments: