Friday, 25 April 2008

அதே விலைதான் தருவோம்; யாகூவை தருகிறீர்களா, இல்லையா : மைக்ரோசாப்ட் இறுதி கெடு

சான்பிரான்சிஸ்கோ : யாகூவை வாங்கிக்கொள்ள நாங்கள் ஏற்கனவே அறிவித்த அதே 44.6 பில்லியன் டாலர்தான் தருவோம். நீங்கள் யாகூவை தருகிறீர்களா இல்லையா என்று இம் மாதம் 26 ம் தேதிக்குள் ( சனிக்கிழமை ) சொல்லுங்கள் என்று யாகூ நிறுவனத்திற்கு மைக்ரோசாப்ட்டின் தலைமை நிதி அதிகாரி கிரிஸ் லிட்டெல் இறுதி கெடு விதித்துள்ளார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற தேடுதல் இயந்திரமான யாகூவை, பில்கேட்ஸ் இன் மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கிக்கொள்ள பல மாதங்களாக முயன்று வருகிறது.இது குறித்து கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி மைக்ரோசாப்ட் நிறுவனம், யாகூ நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில் 44.6 பில்லியன் டாலர் ( ரூ.1,78,400 கோடி )கொடுத்து யாகூவை வாங்கிக்கொள்வதாக தெரிவித்திருந்தது. ஆனால் யாகூவோ இந்த தொகை மிக குறைந்த தொகை என்றும் இதற்கு மேல் கூடுதல் தொகை தர சம்மதித்தால் மட்டுமே இதுகுறித்து பரிசீலனை செய்ய முடியும் என்றும் சொல்லிவிட்டது. இதற்கிடையில் வேறு சில நிறுவனங்களும் யாகூவை வாங்கிக்கொள்ள முயற்சித்து பின்னர் அதிலிருந்து பின்வாங்கி விட்டன. மைக்ரோசாப்ட மட்டுமே இன்றுவரை அதை வாங்கிக்கொள்வதில் அதிக ஆர்வமாக இருந்து வருகிறது. இந்த இழுபறி தொடர்ந்து இன்று வரை நீடித்து வருகிறது. இந்த நிலையில் தான் சைக்ரோசாப்டின் தலைமை நிதி அதிகாரி கிரிஸ் லிட்டல், நாங்கள் ஏற்கனவே சொன்ன 44.6 பில்லியன் டாலர்தான் தருவோம். நீங்கள் யாகூவை தருகிறீர்களா இல்லையா என்று ஏப்ரல் 26ம் தேதி சனிக்கிழமைக்குள் சொல்லுங்கள் என்று இறுதி கெடு விதித்துள்ளார். ஒரு வேளை சனிக்கிழமை அன்று இந்த தோகைக்கு யாகூ ஒத்துக்கொள்ளவில்லை என்றால், இந்த திட்டத்தில் இருந்து மைக்ரோசாப்ட் விலகிவிடும். அல்லது நேரிடையாக யாகூ பங்குதாரர்களிடம் இருந்து யாகூவை வாங்க முயற்சிக்கும் என்று சொல்லப்படுகிறது.

No comments: