முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய தற்கொலைக் குண்டுதாரியுடன் முன்னர் தங்கியிருந்தார் எனக் குற்றஞ்சாட்டி பல்கலைக்கழக மாணவர் ஒருவரை தெஹிவளைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தமது அடையாள அட்டைகளைக் காண்பிக்கத் தவறியதாக கடந்த வியாழக்கிழமை தெஹிவளையில் 37 பேர் கைதுசெய்யப்பட்டபோதே குறிப்பிட்ட மாணவரும் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
கைதுசெய்யப்பட்டவர்களில் 12 பேரை தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதுடன், மேலும் 18 பேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பிணையில்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குக் காரணமான தற்கொலைக் குண்டுதாரியின் உறவினர்கள் கடந்த ஒருவருடத்துக்கு முன்னர் பல்கலைக்கழக மாணவரின் தெஹிவளை, கௌடானா வீதியிலுள்ள வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்கு இருந்துள்ளனர்.
இதனைக் காரணமாகக் காட்டி குறிப்பிட்ட பல்கலைக்கழக மாணவரின் தந்தையார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த வியாழக்கிழமை அந்தப் பல்கலைக்கழக மாணவரும் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
அடுத்தவாரம் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் பரீட்சையில் கலந்துகொள்வதற்கு குறிப்பிட்ட மாணவர் அனுமதிக்கப்படவேண்டுமென அவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment