Saturday, 26 April 2008

ஜே.வி.பி.யின் உள்விவகாரத்தில் தலையிடுவது தொடர்பாக தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தில் கருத்து முரண்பாடு

ஜே.வி.பி.யின் உள்விவகாரத்தில் தலையீடு செய்ததன் மூலம் தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து கலந்துரையாட கூட்டமொன்று ஏற்பாடு செய்யுமாறு நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அமில தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எட்டு விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என அந்த இயக்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் தம்பர அமில தேரர், இயக்கத்தின் தலைவருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம்திகதி ஆரம்பிக்கப்பட்ட எமது அமைப்பு நாட்டின் பிரதேச தேசிய பிரவாகமாக குறுகிய காலத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது.

தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விஸ்தரிக்க ஜே.வி.பி. கட்சி என்ற வகையில் எவ்வளவு பங்காற்றியுள்ளதென்பது தலைவர் என்ற ரீதியில் நீங்கள் நன்றாக அறிந்த ஒன்றே என தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால்தான் ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச முதலில் தலைவராகவும், பின்னர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

கடந்த காலங்களில் எமது பயணம் ஜே.வி.பி.யுடன் இணைந்த ஒன்றாகவே அமைந்திருந்தது.

எனினும், தற்போது ஜே.வி.பி.யில் ஏற்பட்டுள்ள விரிசல் நிலை காரணமாக தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்திலும் பல்வேறு குழப்ப நிலைகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக ஊடகங்களுக்கு விடப்படும் சில அறிக்கைகள் நிறைவேற்றுக் குழுவிற்கு அறிவிக்கப்படாமல் விடுக்கப்படுகிறது.

விமல் வீரவன்சவிற்கும் கட்சிக்கும் இடையிலான பிரச்சினையில் தேசப்பற்றுடைய அமைப்பு தலையீடு செய்வது உசிதமாக அமையாது என தேரர் தமது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: