Saturday, 26 April 2008

'எதிரியின் பலத்தை குறைத்து மதிப்பிடவில்லை'-- சரத் பொன்சேகா

முகமாலை முன்னரங்கப் பகுதி மோதல்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளின் பலத்தை தாம் குறைத்து மதிப்பிடவில்லையெனக் கூறியுள்ளார்.

கடந்த புதன்கிழமை முகமலை முன்னரங்கப் பகுதியில் படைத்தரப்பினருக்கு ஏற்பட்ட இழப்புக்களானது வடக்கை முழுமையாகக் கட்டுப்படுத்தும் தமது நோக்கத்தைத் தடுக்காது எனவும், விடுதலைப் புலிகளின் பலத்தை தாம் குறைத்து மதிப்பிடவில்லையெனவும் கொழும்பு ஊடகமொன்றிடம் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் கடந்தகால மோதல்களில் பல்வேறு இழப்புக்களைச் சந்தித்திருந்த போதும், வடக்கை முழுயையாகக் கைப்பற்றும் காலம் மிகத்தொலைவில் இல்லையென அவர் நம்பிக்கை வெளியிட்டார். முகமாலை மோதல்களில் 150 பேர் கொல்லப்பட்டதாகவும், இதற்கு உயர்இராணுவ அதிகாரிகளின் கவனயீனமே காரணமெனவும் வெளியான தகவல்களை மறுத்திருக்கும் இராணுவத் தளபதி, 53 மற்றும் 55ஆம் படைப்பிரிவுகள் எதிர்களின் பலம் தொடர்பாக உன்னிப்பாக அவதானித்தே வந்ததாகக் கூறியுள்ளார்.

இந்த மோதலில் ஈடுபட்டிருந்த 53ஆம் 55ஆம் படைப்பிரிவுகள் தமது எல்லையை எட்டியிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா அந்த ஊடகத்திடம் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: