Saturday, 26 April 2008

அமைச்சரின் மனைவிக்காக ஜனாதிபதி பெண்களுக்கான மரண தண்டனையில் சலுகை


தோட்ட அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவிக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு சலுகை வழங்கும் வகையில் ஜனாதிபதி பொண்களுக்கு பொது மன்னிப்பு வழங்கத் தீர்மானித்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு விசேட ஜனாதிபதி மன்னிப்பொன்றை வழங்குமாறு அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விசேட மன்னிப்பை வழங்க தீர்மானித்துள்ளார். இது தொடர்பான உத்தரவு கடந்த 24ம் திகதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தோட்ட அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் வேண்டுகோளுக்கு அமைய வழங்கப்பட்டிருக்கும் இந்த விசேட உத்தரவிற்கு அமைய மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆயுள் தண்டனை வவழங்கப்படவுள்ளது. ஆண் மற்றும் பெண் என்ற வேறுபாடின்றி வழங்கப்படும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு இந்த முறை பெண்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இதன்படி 2008ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ மணர தண்டனை விதிக்கப்பட்ட மற்றும் முறையீட்டு காலம் முடிவடைந்து சிறைத்தண்டனை அனுபவிக்கும் பெண்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படவுள்ளது. இந்த உத்தரவிற்கு அமைய மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை வழங்கப்படவுள்ள பெண்களின் விபரங்களை வழங்குமாறு மகசீன் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு மூன்று வருடங்களாக கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மகசீன் சிறைச்சாலையில் அவருக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகத் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த அமைச்சரின் மனைவிக்கு உணவு பொருட்கள் வெளியிலிருந்து கிடைக்கப் பெறுவதாகவும் சிறைச்சாலை சட்ட விதிகளின்படி மாதத்திற்கு ஒரு தடவையே கைதியை உறவினர்கள் பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.சிறைச்சாலை வைத்தியசாலை அதிகாரிகளின் விசேட பரிந்துரையின் அடிப்படையில் குறித்த அமைச்சரின் மனைவி தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரியவருகிறது.

No comments: