Sunday, 20 April 2008

கிழக்குத் தேர்தல்: ஒரேயொரு அப்பமும் ஏராளமான குரங்குகளும்!-மப்றூக்

கிழக்குத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த கையோடு, பிரசாரக் களத்தில் குதிக்கத் தொடங்கி விட்டனர் திருவாளர் அபேட்சகர்கள்! அதிலும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்படுவதற்கு முன்பே சிலர் அட்டகாசம் பண்ணத் தொடங்கி விட்டனர். குறிப்பாகக் கடந்த இரு வாரங்களுக்கு முன்பே அரசாங்கத் தரப்பினரான ஐ.ம.சு.முன்னணியைச் சேர்ந்த அமைச்சர் அதாஉல்லாவும் அவரின் வேட்பாளர்களும் அம்பாறை மாவட்டத்தில் தமது பிரசாரத்தைத் தொடங்கி விட்டனர். அம்பாறையில் நடந்த முதலாவது பிரசாரக் கூட்டம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்!

அரசாங்கத்தின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் கூட்டமைப்பில் பல்வேறு கட்சிகள் இடம்பெறுகின்றன. உதாரணமாக, அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் ஒருபுறம், மறுபுறம் அமைச்சர் பேரியலின் ஆசிர்வாதத்தைப் பெற்ற நுஆ அபேட்சகர்கள். இன்னொரு பக்கம் பிரதியமைச்பி மயோன் தரப்பார்! இப்படி ஒவ்வொரு அமைச்சரும் தமது சார்பில் ஒவ்வொரு வேட்பாளர் குழுவைக் களமிறக்கி வைத்துள்ளனர். இந்த அனைத்துத் தரப்புகளும் போட்டியிடுவதென்னவோ வெற்றிலைச் சின்னத்தில்தான் என்றாலும், விருப்பு வாக்குப் பெறும் போரில் இவர்களுக்கிடையில் வெட்டுக் குத்துகள் நிகழத்தான் போகின்றன என்கிறார் நமது மூத்த ஊடக நண்பர்!

மேற்படி அனுமானத்தை மறுப்பதற்குமில்லைதான்! ஏனெனில் - கடந்த 6 ஆம் திகதி ஞாயிறன்று அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் அதாஉல்லா, தனது விருப்புக்குரிய வேட்பாளர்களுக்கு ஆதரவு வேண்டிப் பேசும்போது வெற்றிலைச் சின்னத்துக்கும், தனது வேட்பாளர்கள் மூவரின் இலக்கங்களுக்குமே வாக்களிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். அம்பாறை மாவட்டத்தில் அதாஉல்லாவின் தரப்பில் மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை கிழக்குத் தேர்தலுக்கான வாக்களிப்பைப் பொறுத்தவரையில், வாக்காளர்கள் அதிக பட்சமாக மூன்று வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளைச் செலுத்தக் கூடிய சந்தர்ப்பம் வழங்கப்படும். ஆனால், ஒரு வேட்பாளருக்கு ஒரு விருப்பு வாக்கினை மட்டுமே வழங்க முடியும்! அதனால்தான் மூன்று விருப்பு வாக்குகளையும் தனது மூன்று வேட்பாளர்களுக்கும் அளிக்குமாறு அமைச்சர் அதாஉல்லா பிரசாரம் செய்கிறார். இவ்வாறே அமைச்சர் பேரியலும் வருவார். அவரும் இதுபோலவே தெரிவு வாக்குகளை தனது வேட்பாளர்களுக்கு வழங்குமாறு மக்களிடம் மன்றாடுவார்! ஆக - ஒரே சின்னத்தில் போட்டியிடும் இவர்கள், விருப்பு வாக்குகளுக்காக பிரிந்து நின்று நிச்சயம் மோதத்தான் போகிறார்கள்!

இதேவேளை, இந்தத் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து மு.காங்கிரஸ் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதை ரவூப் ஹக்கீம் எடுத்த மிக மோசமான தீர்மானமாகவும் மு.கா.வின் மரச்சின்னத்தை காவு கொடுத்து விட்டதாகவும் எதிர்க்கட்சியினர் தீவிரமாகக் குற்றம் சுமத்திப் பிரசாரம் செய்வது பற்றி மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லைபோலவே தெரிகிறது. காரணம், இவ்வாறு மாற்றுச் சின்னத்தில் மு.கா. போட்டியிடுவது இதுதான் முதன் முறையல்ல. மறைந்த தலைவர் அஷ்ரப் காலத்திலேயே சந்திரிகாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர் உட்பட மு.கா.வேட்பாளர்கள் அனைவரும் பொதுத் தேர்தலொன்றின் போது கதிரைச் சின்னத்தில் போட்டியிட்டிருக்கின்றனர். ஹக்கீம் தமைமையேற்ற பிறகும் பொதுத் தேர்தலொன்றில் மு.காங்கிரஸ் கட்சியினர் யானைச் சின்னத்தில் போட்டியிட்டிருக்கின்றார்கள். ஆக, மக்கள் - கடந்த காலங்களிலும், மரம் தவிர்ந்த சின்னத்தினூடாக போட்டியிட்ட மு.கா. வேட்பாளர்களுக்கு வாக்களித்து அனுபவப்பட்டிருக்கின்றனர்!

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் அரசாங்கத் தரப்புக்கும், மு.கா. கூட்டணியினருக்கும் பலத்த போட்டியொன்று நிலவும். இந்த மாவட்டத்துக்கான 14 ஆசனங்களில் ஒன்றை ஜே.வி.பி. பெறும் என நம்பப்படுகிறது. ஏனைய 13 இல் பெரும்பான்மையைப் பெறப்போவது யார் என்பதே இங்குள்ள இராட்சதக் கேள்வியாகும். அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரை, இங்கு மிக அதிகமான அமைச்சர்கள் காணப்படுகின்றனர். இவர் கள் அனைவரும் களத்தில் இறங்கி வாக்கு வேட்டை நடத்தும் போது, வெற்றி - அரச தரப்பைச் சென்றடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஒரு பிரிவினர் நம்புகின்றனர்! ஆனால், மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான கடந்த தேர்தலின்போது, அமைச்சர் அமீர் அலி நெருப்பு மாதிரி வேலை செய்திருந்தார். ஆயினும் அவரது சொந்தப் பகுதிகளிலேயே அவரின் வேட்பாளர்கள் கோட்டை விட, எதிரித் தரப்பான மு.கா. வேட்பாளர்கள்தான் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டும் வேறோர் தரப்பினர் அமைச்சர்களின் அதிகாரங்களொன்றும் மக்கள் தீர்ப்பினை மாற்றி விட முடியாது என்கின்றனர்.

இதேவேளை, அம்பாறையில் மு.கா. தரப்புக்கான வெற்றி வாய்ப்புகளே அதிகமாக இருப்பதாக கணக்கொன்றைக் காட்டுகிறார் அப்பிரதேசத்து அரசியல் முக்கியஸ்தர் ஒருவர். ஆயினும், மு.கா. தரப்பில் அப்பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள சில வேட்பாளர்களின் பலவீனங்கள், கட்சிக்கான வாக்குகளைச் சேகரிப்பதில் தடைகளை ஏற்படுத்தி விடக்கூடும் என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது. உதாரணமாக, அக்கரைப்பற்றில் மு.கா. சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர், அப்பிரதேச சபைக்கான கடந்த தேர்தலின் போது 500 க்கும் குறைந்த வாக்குகளையே பெற்றவராவார். கிட்டத்தட்ட 24 ஆயிரம் வாக்காளர்களுள்ள அப்பிரதேசத்தில், அதிலும் வேட்பாளரொருவருக்கு ஒரு வாக்காளர் 3 விருப்பு வாக்குகளையும் வழங்கக் கூடிய நிலையிருந்த போதிலும் கூட, இவரால் அத்தேர்தலில் 500 க்கும் குறைவான வாக்குகளையே பெற முடிந்ததென்றால் இந்தத் தேர்தலில் மு.கா.வுக்கு இவரால் பெற்றுக் கொடுக்கக் கூடிய வாக்குகள் எத்தனையாக அமையும் என்று ஒரு மனக்கணக்குப் போட்டுப் பாருங்கள்! மு.கா. சார்பாக அட்டாளைச்சேனையில் போட்டியிடும் அபேட்சகரின் நிலையும் இதுபோன்றதே. அவராலும் கட்சிக்கு பெரிதாக வாக்குகள் எதனையும் பெற்றுக் கொடுத்து விட முடியாது என்று, மு.கா. பிரமுகரொருவரே கவலைப் படுகிறார்.

இந்நிலையில், அம்பாறையில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களிலும், மாவட்டம் தழுவிய ரீதியில் மிக அதிகமான வாக்குகளைப் பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகளுள்ளவர் மு.கா.வின் முதன்மை வேட்பாளர் ஹசன் அலி என்றே நம்பப்படுகிறது! பொது மக்களுடனான உறவு மற்றும் அபவிருத்திச் செயற்பாடுகள் போன்றவைகளில் படு பலவீனமானவர் என்று இவர் விமர்சிக்கப்பட்டாலும் கூட, அதிக வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் ஹசன் அலிக்கு இரண்டு விடயங்கள் கைகொடுக்கலாம்!

1. தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இவர் இராஜினாமாச் செய்ததா மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அனுதாப அதிர்வுகளு அதனூடாக இவர் பெற்றுள்ள தியாகி எனும் நற்பெயரும்!

2. மு.கா.வின் பொதுச் செயலாளர் என்கின்ற வகையில் இவர் தேசிய ரீதியில் பெற்றுள்ள பிரபலம்.

திருகோணமலையிலும் அம்மாவட்டத்துக்குரிய 10 ஆசனங்களில் பெரும்பான்மை ஆசனங்களை மு.காங்கிரஸ் கைப்பற்றலாம் அல்லது அரைவாசிக்குக் குறையாமல் பெறலாம் என்றே ஊகக் கணிப்புகள் கூறுகின்றன. அதேவேளை, ஜே.வி.பி. இங்கும் ஒரு உறுப்பினரைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பிருக்கின்றது. ஹிஸ்புல்லாவுடன் இணைந்து அரச தரப்புக்குச் சென்ற மு.கா.வின் திருகோணமலை மாவட்ட முன் னாள் பாராளுமன்ற உறுப்பினர் திடீர் தௌபீக்கின் இந்த மாறுதலானது, மு.கா.வுக் கான வாக்குகளில் பாதிப்புகள் எதனையும் ஏற்படுத்தாது என்பதை, அங்குள்ளவர்கள் சிலருடன் எழுமாறாகப் பேசிப்பார்த்த போது அறிய முடிந்தது!

ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அங்கு மு.கா.வால்; இரண்டு ஆசனங்களைப் பெறுவதற்கே அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. இம்மாவட்டதுக்கான ஆசனங்களின் ஒதுக்கீடு 11 ஆகும்! சுமார் 3 இலட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட இங்கு முஸ்லிம் மக்களின் வாக்குகள் 90 ஆயிரம் மட்டும்தான்! ஏனையவை தமிழர்களின் வாக்குகளாகும். இந்த நிலையில், அரசாங்கத்தின் வெற்றிலைச் சின்னத்தில் பிள்ளையானின் த.ம.வி.புலிகள் அமைப்பும் இணைந்து போட்டியிடுவதால் வெற்றிலைச் சின்னத்துக்கு தமிழ் மக்களின் வாக்குகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், ஹிஸ்புல்லாவின் பிரிவும் மு.கா.வின் ஒரு தொகை வாக்குகளை அரச தரப்புக்குப் பெற்றுக் கொடுக்கும். குறிப்பாகக் காத்தான்குடியில் மு.காங்கிரஸ் பெரும் பின்னடைவொன்றை சந்திக்கலாம். காரணம், அப்பிரதேசம் ஹிஸ்புல்லாவின் பிறந்தகமாகும். அந்தவகையில், அரசாங்கத்தரப்புக்கு இம்மாவட்டத்தில் ஒன்பது ஆசனங்கள் கிடைக்கலாம் என்று மு.கா. தரப்பினரே கூறுகின்றனர். இருந்தபோதிலும், முஸ்லிம் காங்கிரஸ் 03 உறுப்பினர்களைப் பெறுவதற்கும் வாய்ப்பொன்று இருக்கிறது. அதாகப்பட்டது, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ.தே.கட்சிக்கு ஆதரவான சுமார் 15 ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் இம்முறை யானைச் சின்னத்துக்கே வாக்களிப்பார்களாயின் மு.கா. கூட்டணி மூன்று ஆசனங்களை வெற்றி கொள்ளலாம்! ஆனாலும் நிகழ்தகவு அடிப்படையில் இது சாத்தியம் குறைந்த வாய்ப்பேயாகும்!

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களின் வாக்களிப்பிலும் கூட, கட்சிகளின் வெற்றி, - தோல்விக்கான சாத்தியங் கள் தங்கியுள்ளன. உதாரணமாக, மட்டக்களப்பினைப் போன்று அம்பாறை மாவட்டத்தில் த.ம.வி.புலிகளின் ஆதிக்கம் அதிகமில்லை அல்லவா? எனவே, இங்குள்ள தமிழ் வாக்காளர்களில் கணிசமானதோர் தொகையினர் அரசாங்கத்தரப்புக்கு எதிராகக் தமது வாக்கினைப் பிரயோகிப்பதற்கு முயற்சிக்கலாம். அவ்வாறு வெற்றிலைச் சின்னத்துக்கு எதிராக இடப்படும் வாக்குகள் யானைச் சின்னத்துக்குக் கிடைக்குமாயின் அது - மு.கா. கூட்டணிக்கு ஆகக்குறைந்தது மேலுமொரு ஆசனத்தையாவது பெற்றுக் கொடுக்கும்! திருகோணமலை மாவட்டத்திலும் இதே நிலைதான் என்கிறார் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர் ஒருவர்!

அம்பாறைத் தேர்தல் களத்தில் இம்முறை ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் விடயங்களிலொன்று, அதாஉல்லா தரப்பில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் அமைச்சரின் அந்தரங்கச் செயலாளரும், தேசிய காங்கிரஸின் அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பைக்குக் கிடைக்கப்போகும் தேர்தல் முடிவாகும்! காரணம், இவர் இத்தேர்தலில் தோற்றுவிடுவாராயின் சிலவேளை, அமைச்சர் அதாஉல்லாவின் அரசியல் அஸ்தமனத்துக்கே அது ஆரம்பமாக அமைந்து விடவும் கூடும்!

எப்படியென்கிறீர்களா? சற்று விளக்கமாகப் பார்ப்போம். அதாவது, அமைச்சர் அதாஉல்லா மு.கா.வை விட்டுப் பிரிந்த பின்னர் அவருக்கு அவரின் சொந்த ஊரான அக்கரைப்பற்று முழுமையாக ஆதரவளித்தது. அதற்கடுத்து அவருக்கு அதிகமான வாக்குகளை எவ்விதமான எதிர்பார்ப்புகளுமின்றி அள்ளிவழங்கிய பிரதேசம் அட்டாளைச்சேனையேயாகும். சுமார் 05 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் அதாஉல்லாவுக்கு இப்பிரதேசத்தில் இருக்கின்றன. மேற்படி வாக்குகளை அமைச்சருக்குப் பெற்றுக் கொடுப்பவர்தான் இந்த உதுமாலெப்பை! இவர் அதாஉல்லாவின் மிக விருப்புக்குரியவர். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இவரை மாகாணசபை உறுப்பினராக்க வேண்டும் என்பதற்காகவே, அதாஉல்லா தனது ஊரான அக்கரைப்பற்றில் வெற்றிலைச் சின்னத்தில் வேட்பாளர்கள் எவரையும் களமிறக்கவில்லை என்று அவரின் தரப்பில் கூறப்படுகிறது. மட்டுமன்றி, அக்கரைப்பற்று மக்களின் சுமார் 20 ஆயிரம் வாக்குகளை உதுமாலெப்பைக்கும் மேலும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் சார்பான சம்மாந்துறை மற்றும் மருதமுனையைச் சேந்த வேட்பாளர்களுக்கும் வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் அதாஉல்லா பகிரங்கமாக உறுதியளித்துள்ளார். இதை நம்பித்தான் உதுமாலெப்பையும் பயப்படாமல் களத்தில் குதித்திருக்கின்றார்.

thank you:innayam

1 comment:

ttpian said...

so many cook will spoil the cake!