Monday, 7 April 2008

பிரிவினையையும் கிழக்கை இந்தியா சுரண்டுவதையும் தடுப்போம்!!! - ஜேவிபி பா உ ஆர் சந்திரசேகரன்

பிரிவினை வாதத்தை தோற்கடிக்கும் ஒரு களமாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) பயன்படுத்தப் போவதாக அம்முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

இந்த தேர்தல் மூலம் “முதலமைச்சரை” பெற்றுக்கொள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் கிழக்கிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே பிரிவினைவாதம் விதைக்கப்படுகிறது. இந்த விடயத்தை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு “பிரிவினைவாதத்தை தோற்கடிப்போம்” என்ற பிரதான தொனிப்பொருளின் அடிப்படையிலேயே ம.வி.முன்னணி கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகிறது. இதற்காக 3 இனங்களையும் சேர்ந்த வேட்பாளர்களை உள்ளடக்கியதாக எமது கட்சி வேட்பாளர் பட்டியலை தயாரித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முக்கிய பங்காளியாக ம.வி.முன்னணி இருக்கிறது என்பதை மறைக்க முடியாது. வட – கிழக்கு இணைப்பை ம.வி. முன்னணியே பிரித்தது. இதனடிப்படையிலே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 1987ஆம் ஆண்டு இந்தியா மாகாணசபை முறையை இந்நாட்டு மக்கள் மத்தியில் திணித்தது. எனவே, இந்தியா பொருளாதார ரீதியாக ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்தியா தனது பொருளாதார சுரண்டலை ஆரம்பித்திருக்கிறது. மின்சார உற்பத்தி, எண்ணெய் குதங்கள் மீதான ஒப்பந்தம் போன்றவற்றுக்காக மட்டக்களப்பில் சுமார் 900 ஏக்கர் காணி இந்தியாவுக்கு “வர்த்தகவலயம்” என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, கிழக்கு மாகாணசபைத் தேர்தல் இந்தியாவுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தன்மையை கொண்டிருக்கிறது. இந்த விடயங்களிலிருந்து மக்களையும், நாட்டையும், நாட்டு வளத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ம.வி. முன்னணிக்கு இருக்கிறது. எனவேதான் ம.வி. முன்னணி “பிரிவினை வாதத்தை தோற்கடிப்போம்” என்ற தொனிப் பொருளில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் குதிக்க சகல ஆயத்தங்களையும் மேற்கொண்டு வருவதாக ராமலிங்கம் சந்திரசேகரன் மேலும் குறிப்பிட்டார்.

No comments: