Thursday, 10 April 2008

இனவாத பேச்சுக்கும், இன ரீதியிலான வாக்களிப்புக்கும் இடமா?-கிழக்கு மாகாணசபைத் தேர்தல்

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் களம் வேகமாக சூடுபிடித்துள்ளது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் முழு மூச்சுடனும், முழு வீச்சுடனும் களத்தில் குதித்துள்ளன. ஆளும் கட்சி வழமையான பாணியில் எதிர்க்கட்சியின் முக்கிய புள்ளிகளை தம் வசமாக்கிக் கொள்ள முற்பட்டுள்ளது. ஏற்கனவே மு.கா.வின் முக்கிய பிரமுகராகவிருந்த முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கடந்த புதன்கிழமை ஆளும் கட்சியில் சேர்ந்து தேர்தல் களத்திலும் குதித்துள்ளார்.

தமது அணி வெற்றி பெற்றால் தமக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்து உள்ளதாக அவர் கூறுகிறார். அன்றே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரீ. ஹஸனலி மற்றும் மு.கா. தவிசாளர் பசி~ர் சேகுதாவூத் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகி தேர்தல் களத்தில் குதித்தனர்.

ஆளும் கட்சியினர் கிழக்கு மாகாணத்திலுள்ள 3 மாவட்டங்களுக்கும் பல கபினட் அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக தெரியவருகிறது. இரு சாராரும் இந்தத் தேர்தலுக்கு எவ்வளவு முக்கியத்துவத்தை அளித்துள்ளனர் என்பதை இதன் மூலம் உணர முடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்@ராட்சித் தேர்தலின் போது இந்தளவு தீவிரம் எந்த தரப்பிலும் காணப்படவில்லை. அந்தத் தேர்தலின் போது முடிவுகள் முன்கூட்டியே தெளிவாக இருந்தமை அதற்கு காரணமாகும்.

இந்த தேர்தலின்போது நிலைமை அவ்வாறு இல்லை. குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.க.வுடன் கூட்டு சேர்ந்ததை அடுத்து வெற்றியை பற்றிய ஆளும் கட்சியின் நம்பிக்கைக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது. எனவேதான் அவர்கள் தீவிரம் காட்டுகிறார்கள். அதைக் கண்டு எதிர்க்கட்சியும் முழு வீச்சையும் செலுத்த முற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.க.வுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுவது என்பது ஏற்கனவே தெரிந்த விடயம் தான். ஆனால், அக்கட்சி தனித்து போட்டியிடுவது பற்றியும் கருத்து வெளியிட்டிருந்ததால் கடந்த வாரம் வரை தேர்தல் அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை.

ஆகவே, அதுவரை தேர்தலைப் பற்றி பேசுவோர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க பதில் தலைவர் பிள்ளையானை மையமாக வைத்து பேசி வந்தனர். இப்போது பிள்ளையான் மறைக்கப்பட்டு ஹக்கீம் மேலெழுந்துள்ளார்.

முதலமைச்சர் விவகாரம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழர் ஒருவருக்கே வழங்கப்பட வேண்டும் என பிள்ளையான் முதலில் அரசாங்கத்திடம் கேட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், இப்போது தமக்கு முதலமைச்சர் பதவியை வழங்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என ஹிஸ்புல்லாஹ் கூறுகிறார்.

அதேவேளை, தமது அணியில் கூடுதல் ஆசனங்களை பெறும் கட்சியில் மிக கூடுதலான வாக்குகளைப் பெறுபவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என ஐ.தே.க.வும், மு.கா.வும் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக ஒரு செய்தி கூறியது. அந்த அணியில் மு.கா. பிரமுகர்களை போன்று பிரபல்யம் பெற்றவர்கள் இருப்பதாக தெரியவில்லை. எனவே, இது ஒரு வகையில் ஐ.தே.க., மு.கா. தலைவருக்கு முதலமைச்சர் பதவியை ஜனநாயக முறையில் விட்டுக்கொடுத்தது போலாகும்.

இந்தத் தேர்தல் மட்டக்களப்பு மாவட்ட உள்@ராட்சி சபைத் தேர்தலைப்போல் வன்முறைகளின்றி நடைபெறுமா? என்பதே இப்போதுள்ள கேள்வியாகும். குறிப்பாக கிழக்கு மாகாணத்திலிருந்து அம்மாகாணத்தைப் பற்றி நன்கு பரீட்சையம் உள்ள பொலிஸ் அதிரடிப்படை (STF) விலகிக் கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த கேள்வி எழுகிறது.

நீண்ட காலமாக பல்வேறுபட்ட சமூகங்கள் மத்தியில் கடமையாற்றி பழக்கப்பட்ட பொலிஸ் அதிரடிப்படை கிழக்கு மாகாணத்திலிருந்து நீக்கப்படுவது தேர்தல் பாதுகாப்புக்கு குந்தகமாகவே அமையலாம்.

வடக்கிலே அப்படையின் தேவையென்பது வேறு விடயம். அதேவேளை, பிள்ளையான் குழு ஆயுதம் தரித்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஐ.தே.க. மட்டக்களப்பு மாவட்ட உள்@ராட்சி சபைத் தேர்தலுக்கு முன்பிருந்தே குறைக்கூறி வருகிறது. அதில் நியாயமில்லாமல் இல்லை.

உள்@ராட்சி சபைத் தேர்தலின் போதும் சில முஸ்லிம்களே முஸ்லிம்களின் வீடுகளுக்கு குண்டெறிந்து இருந்தனர். கடும் போட்டி நடக்கக்கூடிய இம்முறை அது போன்ற சம்பவங்கள் நடக்காது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. ஐ.தே.க., ஸ்ரீ.ல.சு.க. மட்டுமன்றி சிங்கள தலைமை உள்ள மேலும் பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன. குறிப்பாக சிங்ஹலயே மஹா சம்மத் பூமி புத்திர பக்~ய எனும் சிங்கள தீவிர கருத்துள்ள கட்சியும் போட்டியிடுகின்றது.

அதுவொரு புறமிருக்க ஹிஸ்புல்லாஹ் தமக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கப் போகிறது என்கிறார். மு.கா.வும் நிச்சயமாக முஸ்லிம்களுக்கே முதலமைச்சர் பதவியென்ற கோ~த்தை முன்வைக்கலாம்.

மாகாணத்தில் 3 சமூகங்களும் ஏறத்தாள சரி சமமாக வாழ்ந்த போதிலும் தமிழர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவோ என்னவோ பிள்ளையான் முதலமைச்சர் பதவியை கோருகிறார் போலும்.

காணிப் பிரச்சினை

அதேவேளை, முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை கிழக்கிலுள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும். இதில் ஹெல உறுமயவும் சம்பந்தப்பட்டுள்ளது. சில முஸ்லிம் அமைச்சர்களும், ஹெலஉறுமயவும் ஓரணியில் நின்றபோதிலும் ஹெல உறுமய அவர்களின் கருத்தை மதிக்கும் என எதிர்பார்க்க முடியாது. இந்த நிலையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இனவாத பேச்சுகளுக்கு முக்கிய இடம் கிடைக்கும் என ஊகிக்க முடியும்.

அணிகளைப் பார்த்தால் ஐ.ம.சு.மு., பிள்ளையான் குழு பிரதானமாகவும், EM, ஹெல உறுமய, தேசிய காங்கிரஸ் போன்ற சிறு கட்சிகளும் ஓரணியில் போட்டியிடுகின்றன. ஐ.தே.க. மற்றும் மு.கா. மற்றொரு அணியில் போட்டியிடுகின்றன. மக்கள் விடுதலை முன்னணி தனித்துப் போட்டியிடுகின்றது. அவர்களுக்கு இது வெறும் கொள்கை பரப்புக்கான வாய்ப்பு மட்டுமே. புளொட், பத்மநாபா மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒன்றாக இணைந்து தமிழர் ஜனநாயக தேசிய கூட்டணி என்ற பெயரில் போட்டியிடுகின்ற அதேவேளை, ஈ.பி.டி.பி. தனித்து போட்டியிடுகிறது.

எனவே, இது முக்கிய இரு முனைப் போட்டியாயினும் பல முனைகளிலிருந்து பல்வேறுபட்ட குரல்களை எழுப்பக்கூடிய தேர்தலாகும்.

வாக்குகள் பிரியும்

சிங்கள வாக்குகள் இரு பிரதான கட்சிகளுக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் போய்ச் சேரும். புலிகளின் செல்வாக்கு இன்னமும் கிழக்கு மாகாணத்தில் இருந்தால் தமிழ் மக்களின் ஒரு சாரார் வாக்களிப்பிலிருந்து விலகுவர். அல்லது புலிகளுக்கு ஆதரவான குழுவொன்று இருந்தால் அதற்கு வாக்களிப்பர்.

எது நடந்தாலும் அது தமிழ் வாக்குகளையாவது பிள்ளையான் குழுவிற்கு கிடைப்பதை தடுக்கும். EM, தேசிய காங்கிரஸ் போன்ற மு.கா. விலிருந்து பிரிந்தவர்களுக்கு இருக்கும் ஆதரவை பொறுத்தே முஸ்லிம் வாக்குகள் சிதறுமா இல்லையா என்பதை கூறமுடியும்.

அவர்களும் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. முஸ்லிம் வாக்குகளின் அரைவாசியை பறித்தாலன்றி மாகாணசபையில் மிக பெரும் கட்சிக் குழுவாக மு.கா. வருவதை தடுக்க முடியாது. சிங்கள வாக்குகளில் அரைவாசியையாவது ஐ.ம.சு.மு. பெற்று தமிழ் வாக்குகளில் அரைவாசியையாவது பிள்ளையான் குழுவென்று, முஸ்லிம் அமைச்சர்கள் பெற்றால் அவ்வணி வெற்றிபெறுவதை தடுக்க முடியாது.

அதேவேளை, ம.வி.மு. போன்றவை சிங்கள வாக்குகளை சிதறடித்து புலிகள் தலையிட்டு தமிழ் வாக்குகளை தடுத்து விடும் நிலை வந்தால் ஐ.தே.க. முதன்மையாகக் கொண்ட அணி வெற்றிபெறும். அவ்வாறானதோர் நிலைமை ஏற்பட்டால் முஸ்லிம் வாக்குகளுக்கான அடிதடி அதிகரிக்கும்.

தேர்தல்கள் ஆணையாளர்
இன்று கட்சிகளின் செயலாளர்களுடன் சந்திப்பு
விருப்பு இலக்கம் அடங்கிய வர்த்தாமானி நேற்று வெளியீடு

கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நீதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க 08-04-08 கட்சிச் செயலாளர்களை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் தேர்தல் ஏற்பாடுகள், வேட்பாளர்களின் பாதுகாப்பு உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் டபிள்யு.பி. சுமனசிறி தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள், பொலிஸ் மா அதிபர் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். வேட்பாளர்களுக்கு அளிக்கப்படவுள்ள பாதுகாப்பு குறித்து இங்கு முக்கியமாக கவனம் செலுத்தப்படவுள்ளதோடு சகல வேட்பாளர்களின் பாதுகாப்பிற்கும் தலா இரு பொலிஸார் வீதம் வழங்க நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் உதவித் தேர்தல் ஆணையாளர் கூறினார். மேலதிக பாதுகாப்பு தேவையானவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை தருவிப்பது குறித்தும் இங்கு ஆராயப்படவுள்ளதோடு இடம்பெயர்ந்தவர்களுக்கு வாக்களிக்க வசதிகள் அளிப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்களான வர்த்தமானி அறிவித்தல் (07-04-08) வெளியிடப்பட்டதாகவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. 3 மாவட்டங்களில் இருந்தும் வேட்பாளர்களின் விபரங்கள் அடங்களான தகவல்கள் அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.

இதேவேளை வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் உதவித் தேர்தல் திணைக்களத்தினூடாக வழங்கப்பட்டுவருவதாக உதவித் தேர்தல் திணைக்களம் குறிப்பிட்டது.

thank you:inayam

No comments: