ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வடக்குகிழக்கு மாகாணத்தின் கிழக்குப் பிராந்தியத்தை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தம்pழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிஷ்கரிப்பது தொடர்பில், கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையில்
இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கிழக்கு பிராந்தியத்தை சிங்களமயப்படுத்தும் தனது நோக்கத்தை அடைவதற்காக அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் நிதி சேகரிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அரசாங்கம் கிழக்கு பிராந்தியத்தின் பல பகுதிகளை அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள அநீதியை இதுவரை ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் மேற்கொள்ளவில்லை என ஆர்.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ, தான் மேற்கொள்ளும் எந்தவொரு அரசியல், இராணுவ மற்றும் மனிதாபிமான நடவடிக்கையின் போதும் சிங்கள தேசியவாத கொள்ளையை பின்பற்றுவதன் மூலம், தன்னை ஒரு சிங்கள தேசியவாதியாக அடையாளபடுத்தியுள்ளார். இதன் காரணமாகவே அரசாங்கம், 19 வருடங்களாக இலங்கை அரசியல் அமைப்பில் உள்ள மாகாணசபை முறைமையை அமுல்படுத்தவதை தவிர்த்து வருகிறது. நிலத் தொடர்பிலான அதிகாரம், தனியான காவற்துறை அமைப்பு போன்ற எத்தகைய ஏற்படுகளுமின்றி வடகிழக்கு மாகாணம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
இது வரலாற்று ரிதியாக ஏற்படுத்தப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் சிங்கள தேசியவாதத்தை வெளிப்படுத்துகிறதென சம்பந்தன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். வடக்குகிழக்கு பகுதிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் கூறும் இராணுவ ரீதியிலான தாக்குதல்களில், பெருமளவில் தமிழ் மக்களும் முஸ்லிம்;களுமே பாதிக்கப்படுகின்றனர்.
இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இந்த மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் அந்தப் பகுதிகளில் உள்ள பாடசாலை, அரசாங்க கட்டிடங்கள் உள்ளிட்ட பெருமளவிலான பொதுச் சொத்துக்களும்; சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை வடக்குகிழக்கில் மாத்திரமின்றி நாட்டின் ஏனைய பகுதிகளிலும் படுகொலைகள், ஆட்கள் காணாமற் போதல்கள் என்பவை அதிகமாக இடம்பெறுகின்றன. ஒட்டுக் குழுக்களின் உதவியுடன் இராணுவம் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளினால், தமிழ் மக்கள் பயங்கரவாத மயப்படுத்தப்படுவதுடன், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறவும் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வை முன்வைக்காது பயனற்ற அரசியல் ஏற்பாடுகளை செய்வதற்கு ராஜபக்ஷ அரசாங்கம், நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு துணை இராணுவ குழுவான கருணா குழுவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.
தமிழ் பேசும் சமூகத்தின் நீதியான அரசியல் இலக்குகளை இல்லாதொழிப்பதே ராஜபக்ஷ அரசாங்கத்தின் தெளிவான கொள்கையாக இருந்து வருகிறது. இந்தநிலையிலேயே இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனது அடிப்படை அரசியற் கொள்கைகளை விட்டுக் கொடுக்க விரும்பாத நிலையில், கிழக்கு மாகாணசபைத் தேர்தலை பகிஷ்கரிப்பது என்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஆர்.சம்பந்தன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Wednesday, 2 April 2008
மஹிந்த அரசாங்கம், தமிழர்களுக்கு இழைத்துள்ள அநீதியை இதுவரை எந்த அரசாங்கமும் இழைக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment