மடுவைக் கைப்பற்றும் அரசின் நோக்கம் அரசியல் காரணம் கொண்டதென்பது தெளிவு. கிளிநொச்சியை புலிகளிடமிருந்து கைப்பற்றுவதுதான் அரசின் நோக்கமென்றால் அதற்கான பாதையில் இல்லாத மடுவை கைப்பற்ற ஏன் முயலவேண்டுமென்ற கேள்வி எழுந்தது. அரசின் அரசியல் நோக்கமானது தேவாலயத்திற்கே ஆபத்தாகவும் திருச்சொரூபத்திற்கு பாதிப்பாகவும் அமைந்துவிடலாமென்பதாலேயே திருச்சொரூபத்தை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு குருமார்கள் கொண்டுசென்றனர். குருமார்களின் இந்த நடவடிக்கை அரசின் நோக்கத்திற்கு பெரும் அடியாகிவிட்டதால், திருச்சொரூபம் மடுவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் மடுவை நோக்கிய இராணுவ நடவடிக்கையும் ஸ்தம்பிதமடைந்துவிட்டது. திருச்சொரூபமில்லாத மடுவைக் கைப்பற்றுவதால் எதுவித பலனுமில்லையென்பதால் குருமாரின் நடவடிக்கையால் அரச தரப்பும் படைத் தரப்பும் கடும் அதிருப்தியடைந்துள்ளன. திருச்சொரூபத்தை மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டுவரச் செய்வதற்கான அழுத்தங்களை குருமார்களுக்கு கொடுக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளதுடன், விடுதலைப் புலிகளின் அழுத்தத்தாலேயே குருமார்கள் திருச்சொரூபத்தை பாலம்பிட்டிக்கு கொண்டு சென்றதாகக் கூறி அவர்களைச் சினமடையச் செய்து சொரூபத்தை மீண்டும் மடுத் தேவாலயத்திற்கு கொண்டு வரச்செய்துவிட வேண்டும் அல்லது, தற்போது தேவன்பிட்டி பகுதியில் பாதுகாப்பாக உள்ள சொரூபத்தை மன்னாரில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு வரச்செய்துவிட வேண்டுமென்பதில் அரசு தீவிரம் காட்டுகிறது. திருச்சொரூபத்தை மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டு வந்துவிட்டால் அதன் பின் மடுவை கைப்பற்றும் முயற்சியில் அரச படைகள் மீண்டும் இறங்கும். அல்லது திருச்சொரூபத்தை இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வந்துவிட்டாலும் மடுவைக் கைப்பற்றும் முயற்சியை மீண்டும் தொடங்கி மடுவை கைப்பற்றிய பின், திருச்சொரூபத்தை மீண்டும் மடுத் தேவாலயத்தில் கொண்டு சென்று வைத்து தென்பகுதி பக்தர்களை அழைத்து வந்து அதன் மூலம் அரசியல் இலாபத்தை தேட அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. திருச்சொரூபம் மீண்டும் பழைய இடத்திற்கு வந்தால் அல்லது திருச்சொரூபத்தை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வந்தால் மடுவை நோக்கிய படைநகர்வை ஆரம்பிக்குமாறு அரசு படையினருக்கு உத்தரவிடும். இவையிரண்டும் சாத்தியப்படாது போனால், மடுவை நோக்கி நேரடியாக நகராது வேறொரு நகர்வு மூலம் மடுவைக் கைப்பற்றி விட்டு பின் திருச்சொரூபத்தை பழைய இடத்திற்கு கொண்டு வருமாறு திருச்சபைக்கு அழுத்தம் கொடுக்கலாமென்றும் அரசு கருதுகிறது. தற்போதைய நிலையில் மடுவை எப்படியாவது கைப்பற்றி குருமார்களுக்கு அழுத்தம் கொடுத்து திருச்சொரூபத்தை பழையபடி தேவாலயத்திற்கு கொண்டு வந்து அரசியல் இலாபம் தேட அரசு தீவிர அக்கறை காட்டி வருகிறது. இதனால் மடுவை அண்டிய பகுதியில் நிலைகொண்டுள்ள 57 ஆவது படையணி வேறொரு படைநகர்வை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மடுவிலிருந்து வடக்காக 4 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பாலம்பிட்டியை கைப்பற்றுவதன் மூலம் விடுதலைப் புலிகளின் விநியோக வழிகளைத் தடைசெய்து மடுப்பகுதி மீதான படை நடைவடிக்கையை இலகுவாக்குவதே படையினரின் தற்போதைய உத்தியாகும். இதற்கமைய 57 ஆவது படையணியின் 2 ஆவது பிரிகேட் முள்ளிக்குளத்திலிருந்து பாலம்பிட்டியை நோக்கி முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது அது பாலம்பிட்டியிலிருந்து மூன்று கி.மீ.தூரத்திற்கு அப்பாலுள்ளது. பாலம்பிட்டியை கைப்பற்றி அங்கிருந்து முன் நகர்ந்து பெரிய மடு பின்னர் பள்ளமடுவுக்குச் சென்று விட்டால், மடுவுக்குச் செல்லாமலே புலிகளிடமிருந்து மடுப்பகுதியை முழுமையாகக் கைப்பற்றிவிடலாமென படைத்தரப்பு கருதுகிறது. நீண்ட தூரம் சென்றும் சுற்றிவளைத்துச் செல்வதன் மூலமூமே மடுவுக்கு நேடியாகச் செல்லாது மடுப்பகுதியிலிருந்து புலிகளை அப்புறப்படுத்த வேண்டுமென படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது. மடுவை எப்படியாவது கைப்பற்றி திருச்சொரூபத்தை மீண்டும் அங்கு கொண்டுவந்து விட வேண்டுமென்பதில் அரசு தீவிரம் காட்டுகிறது. இதனால்தான், அரச படைகள் மடுவை நோக்கிச் சென்ற போது திருச்சொரூபம் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று விட்டதால் மடுவை நோக்கிய படைநகர்வும் நின்று விடுமென எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஒரு புறம் மடுவை நோக்கிய நகர்வை மேற்கொண்டவாறு மறுபுறம் மடுத் தேவாலாயத்திற்கு திருச்சொரூபத்தை மீண்டும் கொண்டு வருமாறு அல்லது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சொரூபத்தை கொண்டு வருமாறு குருமார்களுக்கு அரசு மிகக் கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. அதேநேரம், மடுதேவாலயப் பகுதியில் திருச்சொரூபம் இல்லாததால் மடுவை நோக்கிய பாரிய படை நகர்வுக்கு புலிகள் கடுமையான எதிர்ப்பைக் காட்டுவரென்பதை உணர்ந்த படைத்தரப்பு புலிகளின் கவனத்தை மடுப்பகுதியிலிருந்து திசை திருப்பும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால் யாழ்.குடாநாட்டிலிருந்து ஆனையிறவை நோக்கியும் பாரிய படை நகர்வை ஆரம்பிக்கப்போவதாகவும் ஈழப் போர் இதுவரை காணாதளவுக்கு ஒரே நேரத்தில் அனைத்து முனைகளிலிருந்தும் பாரிய நடை நகர்வுகளை ஆரம்பிக்கப்போவதாக படைத்தரப்பு கதை விடுகிறது. அவ்வாறாயின் வடக்கில் இதுவரையென்ன ஒரு முனையிலா அல்லது இரு முனையிலா யுத்தம் நடக்கிறது. கடந்த ஒருவருடத்திற்கு மேலாக வடக்கில் அனைத்து முனைகளிலும் கடும் யுத்தம் நடக்கிறது. வவுனியா, மன்னார், மணலாறு, யாழ்குடா என சகல முனைகளூடாகவும் வன்னிக்குள் நுழைவதற்கான பாரிய படைநகர்வுகளில் படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் பலனெதுவும் கிடைக்கவில்லை. இதனால்தான் ஈழப்போர் இதுவரை காணாதளவிற்கு ஒரே நேரத்தில் அனைத்து முனைகளிலும் பெரும் நகர்வுகளை மேற்கொள்ளப்போவதாக படைத்தரப்பு கூறுகிறது. 25 வருடகால ஈழப்போரில் புலிகளின் பலம் என்ன என்பதை படையினர் நன்கறிந்துள்ளனர். அதேநேரம், உலகின் எந்தவொரு மரபுவழி இராணுவமும் எந்தவொரு படை நடவடிக்கையையும் எதிரிக்கு அறிவித்துவிட்டுச் செய்வதில்லை. அவ்வாறு படையினர் அறிவிக்கின்றார்களென்றால் அவர்கள் பலவீனமடைந்து வருகின்றார்கள் அல்லது எதிரியை திசைதிருப்பிவிட்டு வேறோரிடத்தில் படை நடவடிக்கையை ஆரம்பிக்கப் போகின்றார்களென்பது அர்த்தம். யாழ்.குடாநாட்டில் தற்போது புதிதாக நிலைகொண்டுள்ள கவசப் படையணியை (Mechanised infant Brigade) மையமாக வைத்தே அங்கு புதிய போர்முனையைத் திறக்க படைத்தரப்பு முயல்கிறது. ஏற்கனவே இந்தக் களமுனையில் படையினரால் ஒரு அசைவைக் கூட மேற்கொள்ள முடியாதுள்ளது. இங்கு, சாணேற முழம் சறுக்கும் நிலையே உள்ளது. 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கவசப் படையணியின் டாங்கிகள் சகிதம் கிளாலி மற்றும் முகமாலையூடாக புலிகளின் பகுதிக்குள் படையினர் மேற்கொண்ட மிகப் பெரிய முன்நகர்வு முயற்சி படுதோல்வியில் முடிவடைந்தது. படை நடவடிக்கை ஆரம்பித்து சில மணி நேரத்தில் படையினர் பாரிய அழிவைச் சந்தித்தனர். இரு பட்டாலியன் படையணிகள் ஒரு சில மணிநேரத்தில் களமுனையிலிருந்து அப்புறப்படுத்தப்படும் நிலையேற்பட்டது. ஆறு யுத்த டாங்கிகள் அழிந்தன. அதில் சில புலிகள் வசம் சிக்கின. அந்த அனுபவத்தை படையினர் இன்று வரை மறக்கவில்லை. அதன் காரணமாகவே இன்று வரை படையினரால் அந்தக் களமுனையில் பாரிய படைநகர்வு குறித்து சிந்திக்க முடியாதுள்ளது. எனினும் குடாநாடு தற்போது கவசப் படையணியின் தாயகமாயிருப்பதாகப் படையினர் கருதுவதால் அங்கு அவற்றைப் பயன்படுத்தி பாரிய படைநகர்வு முயற்சியொன்றை மேற்கொள்ள முயலக்கூடும். ஒட்டகச் சிவிங்கியின் கழுத்துப்போன்று குறுகிய அகலம் கொண்ட தென்மராட்சி களமுனையில் படையினர் பாரிய நகர்வை மேற்கொள்ள முனைந்தால் அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க புலிகள் தயாராயிருப்பரென்பது படையினரும் அறிந்ததொன்று. அத்துடன் கவசப் படையணியின் டாங்கிகளை வரிசையாக முன்னால் நகரவிட்டு அதன் பின்னால் படையணிகளை நகர்த்தி புலிகளின் பகுதிகளுக்குள் புகுந்து விடலாமென படைத்தரப்பு கருதுகிறது. எனினும் கவசப் படையணியை எதிர்கொள்வதற்காக புலிகள் பாரிய பொறிக்கிடங்குகளைத் தயார் செய்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் படைத்தரப்பு கூறுகின்றது. புலிகளின் பொறிகள் எங்கு , எவ்வாறிருக்குமெனத் தெரியவில்லை. அதேநேரம், படையினர் தங்கள் கவசப் படையணிகளை எந்தளவுக்கு விஸ்தரித்து அதன் ஆற்றலை அதிகரித்தார்களோ அந்தளவுக்கு விடுதலைப் புலிகளும் தங்கள் கவச எதிர்ப்பு படையணியை விஸ்தரித்து அதன் ஆற்றலையும் அதிகரித்துள்ளனர். புலிகளின் கவச எதிர்ப்பு படையணி மிக நவீன ஆயுதங்கள் சகிதம் பயிற்சிகளை முடித்துள்ளது. டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை பெருமளவில் பெற்றுள்ள புலிகள் அந்தப் படையணி உறுப்பினர்களின் எண்ணிக்கையை பலமடங்காக அதிகரித்து தயார்படுத்தியுள்ளனர். இந்தப் படையணி குடாநாட்டில் இராணுவ கவசப் படையணிக்கு மிகப் பெரும் சவாலாயிருக்குமென கருதப்படுகிறது. குடாநாட்டை பொறுத்தவரை படையினரால் புலிகளின் பகுதிக்குள் நுழைவதற்கு இரு மார்க்கங்களே உள்ளன. கிளாலி - முகமாலை - நாகர்கோவில் முன்னரங்க நிலைகளிலிருந்து தரைவழியாக முன்நகர்தல் மற்றும் டாங்கிகளுடன் கடல் வழியிலான தரையிறக்கம் என்பனவே அவையாகும். எனினும் வடமராட்சி கிழக்கு கடல் வழியொன்றே படையினரின் தரையிறக்கத்திற்கு வாய்ப்பான பகுதியாகும். அதனை எதிர்கொள்ளவும் புலிகள் திட்டங்களைத் தயாரித்துள்ளனர். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பை விட புலிகளின் பகுதியை அண்டிய கடல்கள் பரவைக் கடல்களென்பதால் அவை ஆழம் குறைந்த கடலேரிகளாகும். இவற்றினூடாக பாரிய தரையிறக்கங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளில்லை. குடாநாட்டை பொறுத்தவரை படையினரால் புலிகளின் பகுதிக்குள் நுழைவதற்கு இரு மார்க்கங்களே உள்ளன. கிளாலி - முகமாலை - நாகர்கோவில் முன்னரங்க நிலைகளிலிருந்து தரைவழியாக முன்நகர்தல் மற்றும் டாங்கிகளுடன் கடல் வழியிலான தரையிறக்கம் என்பனவே அவையாகும். எனினும் வடமராட்சி கிழக்கு கடல் வழியொன்றே படையினரின் தரையிறக்கத்திற்கு வாய்ப்பான பகுதியாகும். அதனை எதிர்கொள்ளவும் புலிகள் திட்டங்களைத் தயாரித்துள்ளனர். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பை விட புலிகளின் பகுதியை அண்டிய கடல்கள் பரவைக் கடல்களென்பதால் அவை ஆழம் குறைந்த கடலேரிகளாகும். இவற்றினூடாக பாரிய தரையிறக்கங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளில்லை. குடாநாட்டை பொறுத்தவரை தற்போது நான்கு படையணிகள் நிலைகொண்டுள்ளன. 51, 52, 53 , 55 ஆவது படையணிகளே மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் கட்டளையின் கீழ் இங்கு செயற்படுகின்றன. இந்த நான்கு படையணிகளில் 53 ஆவது மற்றும் 55 ஆவது படையணிகளே போரிடும் அணிகளாகும். ஏனைய இரு படையணிகளும் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்த நான்கு படையணிகளிலும் 33,000 படையினர் உள்ளனர். இதைவிட விமானப் படை, கடற்படை, பொலிஸாரென எண்ணாயிரம் பேருள்ளனர். இவர்களே குடாநாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வேறெந்தவொரு பகுதியிலும் இந்தளவிற்கு படையினர் குவிக்கப்படவில்லையென்ற நிலையில் குடாநாட்டில் 41,000 படையினர் குவிக்கப்பட்டுள்ளதன் மூலம் குடாநாட்டை இழந்து விடக் கூடாதென்பதில் அரசும் படைத் தரப்பும் எந்தளவுக்கு அக்கறைகொண்டுள்ளன என்பது தெளிவு. வடபகுதி போர் முனையில் அவசர வெற்றிகளை எதிர்பார்த்த அரசால் இதுவரை குறிப்பிடத்தக்களவு வெற்றிகளைப் பெறமுடியவில்லை. யாழ். குடாவில் போர் ஆரம்பித்தநாள் முதல் இதுவரை ஒரு அங்குலம் கூட நகர முடியாத நிலையிலேயே படையினர் உள்ளனர். `ஏ9'வீதி மூடப்பட்டு ஒன்றே முக்கால் வருடங்கள் தாண்டிய நிலையிலும் குடாநாட்டில் முன்நகர்வு முயற்சியென்பது படையினருக்கு வெறும்கானல் நீராகவே உள்ளது. வன்னியை மையப்படுத்திய ஒரு முனையில் இந்த நிலைமையென்றால் மறுமுனைகளான வவுனியா, மன்னார், மணலாறிலும் படையினருக்கு சாதகமான நிலையில்லை. மன்னாரில் மடுவை நோக்கிய முனையில் மட்டும் கடந்த ஒரு வருடத்தில் ஆறு கி.மீற்றர் தூரம் படையினர் நகர்ந்துள்ளனர். இந்தக் களமுனையில் இதுவொரு இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியல்ல. அரசியல் நோக்கத்திற்காகவே இந்தக் களமுனையில் பல நூற்றுக் கணக்கான படையினர் மடிந்துள்ளனர். அரசின் தகவல்படி தினமும் இங்கு மூன்று படையினர் உயிரிழப்பதுடன் 25 முதல் 30 படையினர் படுகாயமடைந்த நிலையில் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். எனினும் உண்மையான இழப்புகள் இதைவிட அதிகமென்றே கூறப்படுகிறது. வன்னிக்கள முனையில் திறந்தவெளிச் சமர்க்களத்தை கொண்டது மன்னார் களமுனையென்பதால் இங்கு அதிகரித்த படையயினரின் எண்ணிக்கையும் கனரக ஆயுதங்கள் போன்ற பாரிய ஆயுதங்களின் எண்ணிக்கையுமே வெற்றி, தோல்விகளைத் தீர்மானிக்கின்றன. எனினும் இவ்விரு பலமும் புலிகளை விட படையினரிடமே அதிகமிருந்தும் அந்தச் சமர்க்களத்தில் எதிர்பார்த்த வெற்றியை படையினரால் பெற முடியாதிருப்பது அங்கு இடம்பெறும் பாரிய படைநகர்வுகளுக்கு பெரும் பின்னடைவாகவேயுள்ளது. அதேநேரம், வவுனியா, மணலாறு களமுனை அடர்ந்த காடுகளைக் கொண்டிருப்பதால் இங்கு படையினர் பலத்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இந்த மூன்று களமுனைகளிலும் புலிகளின் போராளிகளின் எதிர்த்தாக்குதல்கள் படையினருக்கு பலத்த இழப்புக்களையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தும் அதேநேரம், பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றது. அனுபவமுள்ள போராளிகளை விட அனுபவம் குறைந்த போராளிகள் இந்தக் களமுனைகளில் போரிட்டாலும் அவர்கள் பெரும் அனுபவசாலிகளைப் போன்று போரிடுவது படையினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. படையினரைப் போல் கனரக ஆயுதங்களுடனல்லாது சிறிய ரக ஆயுதங்கள் மூலமும் தந்திரோபாயத் தாக்குதல்கள் மற்றும் புதுப்புது உத்திகள் மூலமும் தினமும் அவர்கள் படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்திவருவதால் வடபகுதி கள முனையில் படையினர் களைப்பும் விரக்தியுமடைந்து வருகின்றனர். விதுரன் |
Sunday, 20 April 2008
புதிய கள முனைகளை திறப்பதற்கு முயற்சி? மடுவைக் கைப்பற்றும் அரசின் நோக்கம் பிசுபிசுத்துப் போய்விட்டது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment