Tuesday, 22 April 2008

தமிழ் மக்களுக்கு ஆதரவாகப் பேசவிடாமல் ஜே.வி.பியைத் தடுத்தவர் வீரவன்ஸவாம்! புளுங்குகிறார் அக்கட்சியின் சந்திரசேகரன்

விமல் வீரவன்ஸ தனிக்கட்சி தொடங்கினால் அக்கட்சியால் ஜே.வி.பிக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்றும், ஜே.வி.பி. போன்று கட்டுக்கோப்பான ஒழுக்கமான கட்சியாக அது இருக்காது என்றும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பிரச்சினைகள் வந்தபோதெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றில் குரல் கொடுக்கவிடாமல் ஜே.வி.பியைத் தடுத்தவர் விமல் வீரவன்ஸதான் என்றும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக ஜே.வி.பியின் எம்.பியும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான ராமலிங்கம் சந்திரசேகரன் கூறியவை வருமாறு:விமல் வீரவன்ஸ தனிக்கட்சியொன்றை ஆரம்பிக்கப் போகிறார் என்று கதையடிபடுகின்றது. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.

ஆனால் வீரவன்ஸ ஆரம்பிக்கும் கட்சியால் ஜே.வி.பிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.ஜே.வி.பி. ஒரு கட்டுப்பாடான ஒழுக்கமுடைய கட்சி. அப்படியானதொரு கட்சியை யாராலும் உருவாக்க முடியாது.

விமல் வீரவன்ஸ கட்சி உருவாக்கினால் அது ஜே.வி.பியைப் போல் ஒரு பலமான, ஒழுக்கமான கட்சியாக நிச்சயம் இருக்காது.

விமல் வீரவன்ஸ மீது அதிக குற்றச்சாட்டுகள் உள்ளன. அவரை கட்சி விலக்கவில்லை. அவர் விரும்பினால் கட்சியின் மத்திய குழுவுக்கு வந்து அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கலாம்.விமலுடன் மத்திய குழு உறுப்பினர்களோ, முன்னணி எம்.பிக்களோ, அரசியல் குழு உறுப்பினர்களோ அல்லது மாவட்டத் தலைவர்களோ இல்லை.

அப்படியான நிலையில் விமலால் உருவாக்கப்படும் கட்சி எப்படி ஜே.வி.பியைப் பாதிக்கும்?அவரிடம் பலமான கருத்துகள் எவையுமில்லை. அவர் உருவாக்கும் கட்சி நீண்ட நாட்களுக்குத் தாக்குப் பிடிக்காது.

மக்கள் அதை நிராகரித்து விடுவர்.அவர் ஜனாதிபதியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார். இனவாதத்தைத் தூண்ட முற்படுகிறார். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கமும் இனவாதச் சகதிக்குள் மூழ்குகின்றது.

தமிழ் மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்ட போதெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றில் குரல் கொடுக்க கட்சி முடிவெடுத்தது.ஆனால், அந்த முடிவுகளை நாடாளுமன்றில் நடைமுறைப்படுத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர் விமல் வீரவன்ஸதான். என்றார்.

No comments: