Saturday, 12 April 2008

நோர்வே மாநாட்டில் இலங்கை பிரச்சனை குறித்து சிங்களத் தரப்புடன் வைகோ கடும் வாக்குவாதம்


to see this in english: http://tickala.blogspot.com/2008/04/international-community-should-learn.html
நோர்வேயில் நடைபெற்ற 'தெற்கு ஆசியாவின் அமைதியும், சமாதானமும்' மாநாட்டில் இலங்கை இனப்பிரச்சனை குறித்து பொய்யான தகவல்களை முன்வைத்த சிங்களத் தரப்பினருடன் தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடும் வாக்குவாதங்களை நடத்தினார்.

தெற்காசிய இலங்கைப் பிரச்சினை குறித்து அம்மாநாட்டு அரங்கத்திலேயே விவாத மேடை ஒன்று அமைக்கப்பட்டது.

அதற்கு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான எரிகா மான் அம்மையார் (இந்த அம்மையார்தான் கொசாவோ தனி நாடு உரிமை போராட்டத்திற்கு ஆதரவாக ஜெர்மனி நாடாளுமன்றத்திலும், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து ஆதரவாகக் குரல் கொடுத்து வந்தவர்) தலைமை தாங்கினார்.

அந்த விவாத மேடையில், வைகோ, சிறிலங்கா அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான், சிறிலங்கா முன்னாள் அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தேனே, பௌத்த பிக்குகளான பிரம்மனவாட்டியா சிவாலி நாயக தேரோ, மடுலுவாவே சோபித நாயக தேரோ, நார்வேயில் ஒரு சர்வதேச அமைப்பில் பணியாற்றும் சிங்களவரான பேராசிரியர் இந்திரா டி சோசா, இன்னொரு சிங்களவரான பேராசிரியர் ராஜீவா விஜயசின்கா ஆகியோர் கருத்துகளை முன்வைத்தனர்.

சிங்களவரான ராஜீவ் விஜயா சின்கா கூறியதாவது:

இங்கே வந்து வைகோ உணர்ச்சியைத் தூண்டுவதற்காக, சில கடுமையான சொற்களைக் கசப்பாகப் பேசினார்.

செஞ்சோலையில் ஆதரவற்ற சிறுமிகள் கொல்லப்படவில்லை. அது விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாகத்தான் இருந்தது.

13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். இப்பொழுது கிழக்கு மாகாணத்தில் தேர்தலை அரசு நடத்துகிறது.

தமிழர் பகுதிகளுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்றார்.

அதனை மறுத்து வைகோ பேசியதாவது:

ஆதரவற்ற சிறுமிகள் கொல்லப்பட்டது சர்வதேச கண்காணிப்புக் குழுவுக்கு நன்றாகத் தெரியும்.

படங்களும், ஒளிப்படக்குறுவட்டுகளும் உள்ளன.

13 ஆவது சட்டத்திருத்தம் கடந்த காலத்திலேயே தமிழர்கள் நிராகரிக்கப்பட்டு விட்டது.

கிழக்கு மாகாணத்தில் தேர்தல் என்பது மோசடி ஆகும்.

அங்கு கிழக்கில் துரோகக் குழுக்களை உருவாக்கி, சிங்கள அரசு இராணுவத்தைக் கொண்டு மோசடித் தேர்தலை நடத்துகிறது.

இலங்கைத் தீவில் வடக்கு கிழக்கு இருபகுதிகளும் தமிழர் தாயகமாக ஒரே பகுதியாகக் கருதப்பட வேண்டும்.

இதைப் பிரிவினை செய்து அநீதியை அரசு தொடர்கிறது என்றார்.

பௌத்த பிக்குவான மடுலுவாவே சோபித நாயக தேரோ சிங்கள மொழியில் பேசியதை, ஜெயலத் ஜெயவர்த்தனே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

அவர் தனது உரையில் கூறியதாவது:

தமிழர்களின் தாயகம் என்பதை ஏற்க முடியாது. சிங்களவர்கள் பகுதிகளிலும் தமிழர்கள் நிறைய வசிக்கிறார்கள்.

தமிழ் ஈழம் என்பது வெறும் கனவு. அது நடக்காது. பல இனங்கள் சேர்ந்து வாழுகிற நாடுகள்தான் நன்றாக இருக்கும். இனிமேல் நாடுகள் தனியாகப் பிரியக்கூடாது. என்றார்.

ஆறுமுகம் தொண்டைமான் பேசுகையில், 'இப்பொழுது தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படுகிறது. தமிழ் மொழிக்கும், சமத்துவம் வழங்கப்படுகிறது. தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்க மகிந்த அரசாங்கம் ஏற்பாடு செய்யும்' என்றார்.

பன்னாட்டு அமைதி ஆய்வு மய்ய பேராசிரியர் இந்திரா டி சொய்சா பேசும் போது, 'தமிழர்கள் தனி நாடு கேட்பதை ஏற்க முடியாது. மகிந்த சரியான முடிவு எடுக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பெரிய அளவில் நிதி கிடைப்பதால்தான் அவர்கள் போராடுகின்றனர்' என்றார்.

சிங்களவர் தரப்பு வாதங்களை அடியோடு மறுத்து வைகோ ஆணித்தரமாகப் பேசினார்.

வைகோவின் மறுப்பு உரை:

சிங்கள பௌத்த பிக்கு இங்கு 'தமிழ் ஈழம் வெறும் கனவு' என்று கூறினார்.

கொசோவாவும் வெறும் கனவுதான் என்று உலகில் பலரும் கேலி பேசினார்கள்.

ஆனால், என்ன நடந்தது?

கொசோவா சுதந்திர நாடாக ஆனது.

இந்த மாநாடு நடக்கிற நோர்வே நாடு, எதற்காக சுவீடனில் இருந்து பிரிய வேண்டும்?

தனிநாடாகாமல் நீடித்து இருக்கலாமே?

(இதைச் சொன்னவுடன் அரங்கத்தில் கைதட்டல் எழுந்தது. )

அதுபோல, தமிழ் ஈழமும் மலர்ந்தே தீரும்.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று இங்கு சொன்னார்கள்.

கடந்த காலத்தில் இப்படிச் சொல்லித்தான் தமிழர்களை ஏமாற்றினார்கள்.

1948 இல் பிரித்தானியர்கள் வெளியேறியவுடன் இலங்கையில் சிங்கள அரசு செய்த முதல் அக்கிரமம், பத்து இலட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடி உரிமையைப் பறித்தது ஆகும்.

நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவே இந்த அநீதி இழைக்கப்பட்டது.

அதன் பிறகு, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதாகச் சொல்லி 1957 இல் போடப்பட்ட பண்டாரா நாயகா - செல்வநாயகம் ஒப்பந்தமும்,

1965 இல் போடப்பட்ட டட்லி சேன நாயகா - செல்வநாயகம் ஒப்பந்தமும் சிங்கள அரசால் தன்னிச்சையாகக் கிழித்து எறியப்பட்டன.

1987 இல் போடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் வடக்கு - கிழக்கு மாகாணங்களை ஒரே பகுதியாக இணைப்பது என்றும், அதற்கு அங்கே பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்துவது என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், அந்த ஒப்பந்தத்தின் மை காய்வதற்கு உள்ளாகவே சிறிலங்கா அரச தலைவர் ஜெயவர்த்தன வடக்கு - கிழக்கு இணைப்பை எதிர்ப்பேன் என்று கூறினார்.

இலங்கைப் பிரச்சினையில் அடிப்படையான ஒரு உண்மையை இங்கு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்ரேலின் மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக யூதர்களைக் குடி அமர்த்திய இஸ்ரேல் அரசு போலவே,

தமிழர்களின் பூர்வீகத் தாயகப் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்தை சிறிலங்கா அரசு தொடர்ந்து பலாத்காரமாக செய்து வந்து உள்ளது.

குறிப்பாக, கிழக்கு பிரதேசத்தில் பெருமளவில் சிங்களவர்களைக் குடியேற்றியதோடு, ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இந்துக்கள், முஸ்லிம்கள் இடையில் பிளவை ஏற்படுத்துகிறது.

இப்போது கிழக்கு பிரதேசத்தில் தனியாகத் தேர்தல் நடத்துவது ஒரு திட்டமிட்ட சதி.

80களில் பூட்டானின் தலைநகரான திம்புவில் நடந்த பேச்சுவார்த்தையில் ஈழத் தமிழர்களின் தரப்பில் முன் வைக்கப்பட்ட அடிப்படை கோரிக்கைகளை ஏற்காவிட்டால், பிரச்சினைக்குச் சமாதானத் தீர்வு இல்லை.

1. தமிழர்களின் பகுதி அவர்களின் பூர்வீகத் தாயகம்.

2. தமிழர்கள் தனி தேசிய இனம். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு.

ஆனால், சிறிலங்காவின் மகிந்தவோ ''தமிழர் தாயகம் என்பதை ஏற்க முடியாது. இலங்கையில் ஒற்றை ஆட்சிமுறைதான். கூட்டு ஆட்சி கிடையாது'' என்று மமதையோடு கூறிவிட்டார்.

இந்தப் பின்னணியில், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்?

ஈழத் தமிழர்கள் இனி ஒருபோதும் ஏமாறமாட்டார்கள். இங்கு பேசிய அமைச்சர் தொண்டைமானின் பாட்டனார் இந்திய வம்சாவளி தமிழர்களின் தலைவரான தொண்டைமான்;, 1998 இல் சென்னையில் என்னைச் சந்தித்தபோது, ஒரு முக்கியமான செய்தியைச் சொன்னார்.

ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண, தான் ஒரு திட்டத்தை எழுதி, அப்போதைய அரச தலைவர் சந்திரிகாவிடம் கொடுத்துள்ளேன். அதில் ஒரு நாடு இரு தேசங்கள்- என்று இலங்கை நாட்டில் சிங்களர் தேசம், தமிழர் தேசம் என்ற இருதேசங்களை ஏற்படுத்தலாம்.

சீனா, ஹாங்காங் போல என்று குறிப்பிட்டதாகவும், அவர் தயாரித்துக் கொடுத்தத் திட்டம் அச்சாகி இருந்த அத்தாளில் சந்திரிகா -"ஆர்வம் அளிக்கிறது'' என்று எழுதி இருந்தாராம்.

இதனை என்னிடம் கூறியதோடு அந்தத் தாளின் பிரதியையும் என்னிடம் தந்தார்.

தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற தன்னுடைய கவலையையும் என்னிடம் தெரிவித்தார்.

ஒரு நாட்டைப் பிரித்து, இன்னொரு சிறிய நாட்டை உருவாக்கக் கூடாது என்றார்கள்.

அப்படியானால், பாகிஸ்தானிலே இருந்து வங்கத்தேசத்தை ஏன் உருவாக்கினார்கள்?

அப்படி உருவாக்க இந்தியா இராணுவ நடவடிக்கை எடுத்தது வரலாற்று உண்மை.

இங்கு வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் புலிகளுக்கு நிதி தருவதால்தான் பேராடுகிறார்கள் என்று சிங்களவர் கூறினர்.

வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வந்து, தாய் தந்தையரைப் பிரிந்து துன்பங்களைச் சுமந்து கொண்டு மாடாக உழைக்கும் ஈழத் தமிழர்கள் பத்து டாலர், இருபது டாலர் என்று தங்கள் சம்பளப் பணத்தில் ஒரு பகுதியைத் தங்கள் தாயக விடுதலைக்காக அனுப்புகிறார்கள்.

அங்கே இலங்கையில் தங்கள் தாய் மண்ணை விடுவித்து, உரிமையோடும், மானத்தோடும் வாழ தங்கள் உயிர்களை தாரைவார்த்துக் கொடுக்கிறார்கள்.

இதுவரை எண்பதாயிரம் தமிழர்கள் சிங்களவர் செய்யும் இனப்படுகொலையால் கொல்லப்பட்டு உள்ளனர்.

இலட்சக்கணக்கான தமிழர்கள் பசிக்கு உணவு இன்றி, நோய்க்கு மருந்து இன்றி நாளும் மடிகிறார்கள்.

போர் நிறுத்தத்தை முதலில் அறிவித்தது புலிகள்தான்.

அதை முறித்ததற்கான முழுமுதற்காரணம் சிங்கள அரசுதான்.

இங்கு ஐரோப்பாவில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் கொடுத்த வாக்குறுதியை சிங்கள அரசு நிறைவேற்றவில்லை.

எனவே, இப்போது சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுமானால் சிங்கள அரசு இராணுவத் தாக்குதலை நிறுவத்துவதாக அறிவிக்க வேண்டும்.

பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று சொல்ல வேண்டும்.

விடுதலைப் புலிகளைச் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு நோர்வே அரசும், ஐரோப்பிய ஒன்றியமும் அழைக்க வேண்டும். மருந்தும், உணவும் இன்றி பரிதவிக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு உணவும் மருந்தும் கொடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று வைகோ பேசினார்.

இந்த விவாத மேடை மாலை நான்கு மணி வரை நீடித்தது.

மாநாட்டை முடித்து வைக்கும்போது, ஈழத் தமிழர்கள் பிரச்சினை விவாத மேடைக்கு தலைமை தாங்கிய எரிகா மான் அம்மையார் பேசுகையில், இப்பிரச்சினை குறித்து காரசாரமான விவாதம் நடந்தது.

தங்கள் தங்கள் தரப்பைச் சொன்னார்கள். மோதல் நிறுத்தப்பட்டு சமாதானம் ஏற்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதில் சிறிலங்கா அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது'' என்று கூறினார்.

"ஓஸ்லோ மாநாட்டின் வேண்டுகோள்"

மாநாடு நிறைவு அடைகிறது என்று பண்டிட் ரவிசங்கர் சொன்னபோது, வைகோ எழுந்து நின்று, இரண்டு நிமிடம் நான் பேச அனுமதி கோருகிறேன் என்றார். அனுமதி வழங்கப்பட்டது.

யுத்தம் நின்று அமைதியும், சமாதானமும் மலரவேண்டும் என்ற தூய்மையான நோக்கத்தோடு இம்மாநாட்டைக் கூட்டினீர்கள். இம்மாநாட்டை 'ஓஸ்லோ மாநாட்டின் வேண்டுகோள்' என்று அறிவியுங்கள்.

அதில் ஆயுத மோதலை விட்டுவிட்டு, சமாதானப் பேச்சுவார்த்தை மேசைக்கு வருமாறு சிங்கள அரசுக்கும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக இம்மாநாட்டின் வேண்டுகோள் அமையட்டும்.

அமைதிக்கு வழி பிறக்கட்டும் என்று வைகோ கூறியபோது, அரங்கம் முழுவதிலும் பலத்த கைதட்டல் எழுந்தது.

தொடர்ந்து பண்டிட் ரவிசங்கர் பேசுகையில், சண்டையை நிறுத்திவிட்டு, சமாதானத்திற்கு வாருங்கள் என்றுதான் இருதரப்புக்கும் இம்மாநாடு வேண்டுகேள் வைக்கிறது என்று கூறினார்.

புல்லாங்குழல் இசையோடு மாநாடு முடிந்தது.

இம்மாநாட்டில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், போலந்து நாட்டுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

1 comment:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//இந்த மாநாடு நடக்கிற நோர்வே நாடு, எதற்காக சுவீடனில் இருந்து பிரிய வேண்டும்?

தனிநாடாகாமல் நீடித்து இருக்கலாமே?

(இதைச் சொன்னவுடன் அரங்கத்தில் கைதட்டல் எழுந்தது. )

அதுபோல, தமிழ் ஈழமும் மலர்ந்தே தீரும்.//

நான் என்றும் மதிக்கும் திரு.வைகோ அவர்களின் உணர்வுகளின் மீது சந்தேகப்படுபவர்கள் வெறும் காழ்ப்புணர்ச்சியால் மட்டுமே என்பதை இங்கே பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். சபாஷ் வைகோ!

அன்புடன்,
ஜோதிபாரதி.