Monday, 14 April 2008

அமைச்சர்களையும் எம்.பி.க்களையும் பாதுகாக்க முடியாத அரசு மக்களை எவ்வாறு பாதுகாக்கும்?--ஐ.தே.க

அமைச்சர்களையும் எம்.பி.க்களையும் பாதுகாக்க முடியாத அரசு மக்களை எவ்வாறு பாதுகாக்கும்?

ஐ.தே.க. பொதுச்செயலாளர் அத்தநாயக்க கேள்வி

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்க முடியாத அரசாங்கம் சாதாரண பொதுமக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்கும்? என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி கிலிமலே, இந்துருவ பகுதியிலுள்ள ஸ்ரீ நானாதிலக்க தர்ம வித்தியாலயத்தில் சப்ரகமுவ மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் ஏ.ஓ. விஜயதுங்க, உறுப்பினர் எஹகியா எம். இப்ளார் உட்பட பிரதேசவாசிகளின் நிதி உதவியுடன் சுமார் 40 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடத்தை வைபவ ரீதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய போது கூறியதாவது; ""இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசாங்கத்தின் பிரபலமிக்க அமைச்சரான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே குண்டு வெடிப்பினால் உயிரிழந்துள்ளார். இவரது இழப்பு நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாதது.

இதற்கு நாம் அனுதாபம் தெரிவிக்கும் அதேவேளை கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.

இவ்வாறான மனித படுகொலை மூலம் ஜனநாயகத்தை தோற்றுவிக்க முடியாது. இதனை சகலரும் புரிந்துகொள்ள வேண்டும்.

மனிதர்கள் மனிதனை கொலை செய்யும் கலாசாரம் இடைநிறுத்தப்பட வேண்டும். இவ்வாறான கொலையினால் யாரும் தமது நோக்கத்தை அடைய முடியாது. இதேவேளை, இன்று நாட்டு நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது.

எதிர்க்கட்சி, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு கூட உரிய பாதுகாப்பில்லை.

அரசாங்கம் மக்கள் பிரதிநிதிகளுக்கு கூட உரிய பாதுகாப்பு உத்தரவாதத்தினை வழங்க முடியாத நிலையில் சாதாரண பொதுமக்களுக்கு எவ்வாறு வழங்கும்.

ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரி. மகேஸ்வரனின் கொலையுடன் ஜனவரி முதலாம் திகதி புத்தாண்டு பிறந்தது.

இன்று தமிழ், சிங்கள புத்தாண்டு சமயத்தில் அமைச்சரின் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது எமக்கு ஆழ்ந்த கவலையை தருகின்றது. ஜனவரி முதல் இன்று வரை பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்' என்றார்.

No comments: