Tuesday, 6 May 2008

மியான்மரில் நர்கீஸ் புயலுக்கு 10,000 பேர் பலி()videoannex


யாங்கூன்: மியான்மரைத் தாக்கிய நர்கீஸ் புயலுக்கு 10,000 பேர் பலியாகியுள்ளனர். 3000 பேரை காணவில்லை என்று அந்நாடு தெரிவித்துள்ளது. நிவாரண பணிகளில் ஐ.நா.வும் களம் இறங்கியுள்ளது.

தமிழகத்தை அச்சுறுத்தி வந்த நர்கீஸ் புயல் கடந்த 3ம் தேதி மியான்மரைத் தாக்கியது. தலைநகர் யாங்கூன் மற்றும் அருகில் உள்ள தீவுகளில் மணிக்கு 190 கி.மீ. வேகத்தில் கோர தாண்டவம் ஆடியது.

புயல் கடுமையாக தாக்கியதில் யாங்கூன் மற்றும் இர்ரவாடி டெல்டா பகுதிகள் பயங்கர சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமானது. மரங்கள் வேரோடு சாயந்தன. மின்கம்பங்களும் பெயர்ந்து விழுந்தன. இதில் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.

சேதமடைந்த பகுதிகளில் ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முதலில் வெளியான தகவலில் புயலுக்கு யாங்கூனில் 100 பேர் உயிரிழந்துள்ளனர். இர்ரவட்டி பகுதியில் இடத்தில் 200 பேர் இறந்ததாக கூறப்பட்டது.

இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் அகற்ற அகற்ற வந்து கொண்டே இருக்கின்றன. இதனால் சாவு எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3,600 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கி 6000 பேர் பலியாகிவிட்டதாக அந்நாட்டு தூதரக அதிகாரி ஒருவர் பாங்காக்கில் தெரிவித்தார்.

மொத்தம் 10,000க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கலாம் என்று அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. புயலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

புயலில் சிக்குண்ட யாங்கூன் மற்றும் இர்ரவாடி பகுதியில் 3000 பேரை காணவில்லை. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளில் ஈடுபட்ட ராணுவத்தினர், இடிபாடுகளில் சிக்கியிருந்த 2,129 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த புயல் தாக்கத்தின் காரணமாக யாங்கூன் மற்றும் இர்ரவாடி பகுதிகளில் குடிநீர் விநியோகம் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. வீடுகள் தரைமட்டமானதால் ஆயிரக்கணக்கானோர் தங்குவதற்கு இடமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

கரம் கொடுக்கும் இந்தியா

கடந்த 45 ஆண்டுகளாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது தற்போது புயலால் பாதிக்கப்பட்ட அந்நாட்டுக்கு மேற்கத்திய நாடுகள் எந்த நிவாரண உதவியையும் செய்ய முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்திய அரசு போர்ட் பிளேரில் இருந்து 2 கப்பல்கள் மூலம் உணவு, உடை, போர்வைகள், டென்ட்கள், மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது. பாதித்த மக்களின் மறுவாழ்வுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. செஞ்சிலுவை சங்கமும் நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் புயலில் சிக்கியுள்ள அந்நாட்டு மக்களுக்கு உதவ ஐநா சபை முன்வந்துள்ளது. தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவிகரம் நீட்டியுள்ளன. ஆனால் நிவாரண பணிகள் மேற்கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புயல் தாக்குதலில் பெரும்பாலான பகுதிகளில் மின் சப்ளை, எரிபொருள், உணவு, தண்ணீர் சப்ளை இல்லை. தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நிவாரண உதவிகளை ஐநா வழங்கி வருகிறது. நிவாரண குழு உடனடி மற்றும் நீண்ட கால தேவைகள் அடிப்படையில் உதவிகளை செய்து வருகின்றன.

இதுகுறித்து ஐநா பொது செயலாளர் பான்கிமூன் மியான்மருக்கான ஐநா தூதர் கியைவ் டின்ட்ஸ்வேயுடன் நேற்று பேசினார். நிவாரண பணிகளில் இணைந்து செயலாற்றுவது மற்றும் தொடர்பு கொள்வது குறித்து விரிவாக பேசினார்.


No comments: